You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
நேற்றே கட்சியிலிருந்து தான் ஒதுங்கிவிட்டதாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார். தன்னையும் தனது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும் என்ற முடிவால் தனக்கு வருத்தமில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
டிடிவி தினகரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஆட்சியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ஒதுக்கிவைப்பதாக தமிழக அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமையன்று இரவு அறிவித்தனர். இந்த நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் வசம்தான் இருக்கிறார்கள் என்றும், யாருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.
"கட்சிக்கும் ஆட்சிக்கும் நன்மைபயக்கும் முடிவையே நான் எடுப்பேன்" என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார்.
இதற்குப் பிறகு, அன்னியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்ற தினகரன், பிறகு மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கட்சி உடைந்துவிடக்கூடாது
அப்போது, எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதால் மதியம் சட்டமன்ற உறுப்பினர்களின்கூட்டத்தை கூட்டியதாகவும் ஆனால், மதியம் மீண்டும் நீதிமன்றம் செல்லவிருப்பதால் அதற்குப் பிறகு வீட்டில் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவிருப்பதாக தினகரன் கூறினார்.
எண்ணிக்கையையோ, பலத்தையோ காண்பித்து கட்சியைப் பலவீனமடைவதற்குத் தான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும் ஏதோ ஒரு அச்சத்தின் காரணமாக அமைச்சர்கள் இப்படி ஒரு முடிவெடுத்திருப்பதாக தினகரன் கூறினார்.
அச்சம் காரணம்
திண்டுக்கல் சீனிவாசனும் செங்கோட்டையனும் தன்னை நேற்று சந்தித்தபோது அமைச்சர்களின் முடிவைப் பற்றித் தெரிவித்ததாகவும் ஆனால், அவர்கள் திடீரென இப்படி முடிவெடுக்க ஏதோ ஒரு அச்சம் காரணமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
14ஆம் தேதிவரை தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள், திடீரென இப்படி முடிவெடுத்திருப்பதாக குறிப்பிட்ட தினகரன், தன்னைச் சந்திக்க வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தியதாகவும் எதிரிகளுக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது என்று கூறியதாகவும் அவர்கள் தன்னிடம் கூறியிருந்தால் தானே ஒதுங்கியிருப்பேன் என்றும் தினகரன் கூறினார்.
நேற்றே கட்சியிலிருந்து தான் ஒதுங்கிவிட்டேன்
நேற்றே தான் கட்சி விவகாரங்களிலிருந்து விலகிவிட்டதாகவும் தன்னுடைய துணைப் பொதுச் செயலாளர் பதவி என்பது பொதுச்செயலாளர் வழங்கியது என்பதால், அதனை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறினார்.
அமைச்சர்களின் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லையென்றும் அவர்களோடு மோதி கட்சியை பலவீனப்படுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார். இந்த சலசலப்பினால் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பலவீனமும் வந்துவிடக்கூடாது எனக் கவனமாக இருப்பதாக அவர் கூறினார்.
தன்னிடம் முன்கூட்டியே கூறியிருந்தால், தானே இதனை அறிவித்திருப்பேன் என்றும் கட்சி அலுவலகத்திற்குச் சென்றால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் கட்சி அலுவலகத்தில் நடத்தப்படிவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தினகரன் கூறினார்.
அ.தி.மு.க. அணிகள் இணைவதில் பிரச்சனை இல்லை
ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் சேர்வது குறித்து கேள்வியெழுப்பியபோது, கட்சிக்கும் ஆட்சிக்கும் பலம் அளிக்கக்கூடிய முடிவை முதல்வர் கே. பழனிச்சாமி எடுக்கவேண்டும் என்றும் தினகரன் கூறினார். அ.தி.மு.க. அணிகள் இணைவதில் தனக்குப் பிரச்சனை இல்லை என்றும் கூறினார்.
தான் வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்லாதபடி விமான நிலையங்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்தி குறித்துக் கேட்டபோது, தன்னுடைய பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பில்லை என்று கூறினார்.
தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் தற்போது தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், வேறு சில எம்எல்ஏக்கள் எந்த அணியின் பக்கம் செல்வது என்று முடிவுசெய்யாமல் உள்ளனர்.
அமைச்சர்களின் முடிவுக்குப் பின்னால் பா.ஜ.க : நாஞ்சில் சம்பத்
இதற்கிடையில், அமைச்சர்களின் முடிவுக்குப் பின்னால் பாரதீய ஜனதாக் கட்சி இருப்பதாக தினகரன் பிரிவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்திருக்கிறார். "விரைவில் அவர்கள் இந்தக் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஆட்சியைக் கவனிக்க வேண்டும்" என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்