You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்க முடிவு: அ.தி.மு.க. அமைச்சர்கள் அறிவிப்பு
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.இ. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவின் தலைமையில் ஒரு பிரிவாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தது. அதற்குப்பிறகு சசிகலா தலைமையிலான அணியைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது குறித்துப் பேச்சு வார்த்தை நடக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. திங்கட்கிழமையன்று இரவில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் ஆலோசனையும் நடத்தினர்.
தற்போது அ.தி.மு.க. அம்மா அணியை வழிநடத்திவரும் டிடிவி தினகரன் சென்னையில் இல்லாத நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திங்கட்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கடுமையாகச் சாடினார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி. ராமச்சந்திரனும் ஜெயலலிதாவும் தங்களது குடும்பத்தினருக்கு கட்சியில் எந்தப் பதவியும் தராத நிலையில், சசகலா குடும்பத்தினர் தற்போது அ.தி.மு.கவைக் கைப்பற்ற நினைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்திலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லையென்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
நேற்று இரவிலிருந்து தமிழக அமைச்சர்கள் இரு அணிகளின் இணைப்பு குறித்து நம்பிக்கையுடன் பேசிவந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், செவ்வாய்க்கிழமையன்று மாலையில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் மீண்டும் கூடி ஆலோசித்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், கட்சியை வளர்த்தெடுக்கவும் ஆட்சியை நல்ல முறையில் கொண்டுசெல்லவும் ஏதுவாக டிடிவி தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் இதையே விரும்புவதாக ஜெயக்குமார் கூறினார்.
ஒன்றரைக்கோடி அ.தி.மு.க. தொண்டர்களும் இதையே விரும்புவதாக அவர் கூறினார். கட்சியை வழிநடத்த ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது பிறகு அறிவிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
ஓ. பன்னீர்செல்வம் அணியுடன் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, அது வேறு விவகாரம் என்றும், அவர்கள் விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், தேவைப்பட்டால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்றும் சசிகலா குடும்பத்தை இனி ஏற்கப்போவதில்லையென 100 சதவீதம் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இருந்தபோதும் அமைச்சர்கள் கூடி முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத்தில் ஆளும் அ.தி.மு.க - அம்மா அணிக்கு 123 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அறுதிப் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சில சட்டமன்ற உறுப்பினர்கள், மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆட்சி கவிழக்கூடிய நிலை ஏற்படும்.
டிடிவி தினகரன் தரப்புக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்பது இதுவரை தெளிவாகவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்