You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக அணிகளுக்கிடையில் சமரசமா? அமைச்சர்கள் ஆலோசனையின் பின்னணி என்ன?
அதிமுகவை மீண்டும் ஒன்றுபடுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக , திங்கள்கிழமை இரவு நடந்த தமிழக அமைச்சர்களின் அவசர சந்திப்புக்குப் பிறகு, மூத்த அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், திங்கட்கிழமை இரவு மின் துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் தமிழக அமைச்சர்களின் திடீர் ஆலோசனை நடைபெற்றது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ''அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை மீட்க தேவையான பத்திரப்பிரமாணத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும். இதற்கு 8 வாரம் அவகாசம் கேட்டிருந்தோம். இது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.
''இரு அணிகளின் இணைப்பு குறித்து இன்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது. இந்த கருத்தையொட்டி அதிமுகவை ஒற்றுமையாகவும், வலிமையாகவும் செயல்பட வைப்பது தொடர்பாகவம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பது குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டது'' என்று ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.
ஓ. பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ஜெயகுமார் குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனரா என்று கேட்டற்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளனர் என்று ஜெயகுமார் மேலும் தெரிவித்தார்.
டி டி. வி. தினகரன் கட்சியின் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, அது குறித்து தற்போது நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
கட்சியின் பொது செயலாளரான வி.கே. சசிகலா கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்ததாக செய்திகள் வந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவ்வாறு எந்த தகவலும் இல்லை என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், டி.டி.வி.தினகரன் அணியினருக்கு அந்த சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக கூறி, சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் திங்கட்கிழமை காலையில் கைது செய்துள்ளனர்.
சந்திரசேகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த பணத்தை டி.டி.வி.தினகரனிடமிருந்து பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தினகரன் அதை தன்னிடம் கொடுத்தாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமக்கு சுகேஷ் சந்திரசேகர் என்கிற பெயர் கொண்ட எவரையும் தெரியாது என்றும், அவரிடம் பணம் கொடுத்ததாக வெளியாகும் தகவல் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டெல்லி காவல்துறையினர் செவ்வாய்கிழமை சென்னை வரவிருப்பதாகவும், டி.டி.வி.தினகரனுக்கு இந்த வழக்கு தொடர்பில் விளக்கம் அளிக்க கூறி சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியும் சுவாரஸ்யமாக இருக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்