You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகளின் போராட்டத்தில் `பக்கபலமாக' இளைஞர்கள்!
- எழுதியவர், விஷ்ணுப்ரியா
- பதவி, பிபிசி தமிழ்
டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 31 நாட்களாக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர் டெல்லியில் உள்ள தமிழக இளைஞர்கள்.
ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் உடன் அமர்ந்து ஆதரவு தெரிவிப்பது, பேரணிகளை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி மேலும் பிற வசதிகளை செய்து கொடுத்து சேவையாற்றி வருகின்றனர் இளைஞர்கள்.
அவர்கள் எப்படி ஒன்று கூடினார்கள்?, அவர்கள் ஒன்று கூடியதற்கான காரணங்கள் என்ன?, முப்பது நாட்களுக்கு பிறகும் அவர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு எப்படிப்பட்டது என்பதை பற்றி அறிந்து கொள்ள ஜந்தர் மந்தருக்குச் சென்று அவர்களை சந்தித்தோம்.
நாம் அங்கு சென்ற தருணத்தில் சுமார் பத்து முதல் பதினைந்து இளைஞர்களை காண முடிந்தது.
ஆரம்பத்தில், போராடும் நோக்கத்தில் டெல்லி வந்த விவசாயிகள் தங்க இடமின்றியும், உண்ண சரியான உணவு கிடைக்காமலும் துயரப்பட்டனர். மேலும் அங்குள்ள ஒரு குருத்வாராவில் அவர்கள் உணவருந்தி வந்தனர். ஆனால் வந்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு உணவு ஒப்புக் கொள்ளாமல் போக சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் சிலர் தங்களின் ஊர்களுக்கு திரும்பச் சென்றுள்ளனர். பின்பு இங்குள்ள இளைஞர்கள் சிலருக்கு தங்களின் பிற தொடர்புகள் மூலம் இப்போராட்டம் குறித்து தெரியவந்துள்ளது;
பின்பு தமிழ் இளைஞர்களுக்காக உள்ள வாட்சப் குழுவின் மூலமாகவும், சமூக ஊடகங்களின் மூலமாகவும் இளைஞர்கள் ஒன்று திரண்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
நாம் பேசத் தொடங்கிய அந்த இளைஞர் கூட்டத்தில் மருத்துவம், சட்டம், மற்றும் ஐ.ஏ.எஸ் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பு மாணவர்கள், பணியில் உள்ளவர்கள், குடும்பத் தலைவிகளான இளம் வயது பெண்கள் என அனைவரையும் காண முடிந்தது;
இப்படி வெவ்வேறு துறையில் உள்ளவர்கள் ஒன்று கூடியது எவ்வாறு என்று நாம் கேட்டதற்கு, இவை அனைத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கியது என்று தெரிவிக்கிறார் சென்னை மீம்ஸ் என்ற முகநூல் பக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான குணசேகரன்.
இந்த சென்னை மீம்ஸ் முகநூல் பக்கங்களிலும், மேலும் பிற முகநூல் பக்கங்களின் வாயிலாகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியுதவு கோரியுள்ளனர்.
வாட்சப் குழு, முகநூல் பக்கம் என தொடர்பில் இருந்த இவர்கள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெற தங்களால் முடிந்த வரை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இங்குள்ள ஒவ்வொரு இளைஞர்களும் உணவு, இடம், மருத்துவ வசதி என ஒவ்வொரு துறையை கையில் எடுத்து கொண்டு அதை கண்காணித்து கொண்டு வருகின்றனர்.
முகநூலில் நிதியுதவிக்கான கோரிக்கையை வைத்தவுடன் இரண்டு நாட்களில் சுமார் ஒரு லட்சம் வரை சேர்ந்ததாகவும், அதன் பின் நிதிகள் பெறுவது நிறுத்தப்பட்டு தற்போது உதவி செய்ய விரும்புவோர் நேரடியாக உணவாக வழங்கலாம் என்று கோரிக்கை வைப்பதாகவும் அல்லது உணவு விடுதியாளர்களுடன் தொடர்பை கொடுத்து அதற்கான பணம் செலுத்தி விடுமாறு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கிறார் அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த சட்டம் பயிலும் மாணவரான ராஜ்குமார்.
ஆரம்ப நாட்களில் சமூக ஊடகங்கள் மூலமாக திரட்டிய நிதி இன்றுவரை போதுமானதாக உள்ளது என்று தெரிவிக்கிறார் நிதி நிலவர பட்டியலை மேற்கொள்ளும் ராஜ் குமார்.
தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்த அன்று தமிழக விவசாயிகளுக்கு ஜந்தர் மந்தரில் இடம் கிடைக்கவில்லை. அவர்கள் அங்கிருந்த ஜனதாதள அலுவலக கட்டடத்தில் தங்கியிருந்தனர்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி, பேரணிகளுக்கான அனுமதி, என சட்ட ரீதியான உதவிகளை செய்து வருகிறார் இந்த இளைஞர் கூட்டத்தில் உள்ள பயிற்சி வழக்கறிஞரான மனோஜ். மேலும் இவரின் மூலம் ஜி.எஸ். மணி போன்ற மூத்த வழக்கறிஞர்களின் உதவியும் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
மேலும் பல்வேறு முகநூல் பக்கங்களில் விவசாயிகளின் போராட்டங்களை நேரலையில் ஒளிபரப்புவது, அதன்மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஆதரவுகளையும் கோருவது என்ற வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர் இந்த இளைஞர்கள்; இங்குள்ளவர்களில் சில இளைஞர்கள் முகநூல பக்கங்கள் பலவற்றின் நிர்வாகிகளாக இருப்பதால் விவசாயிகள் தொடர்பான செய்திகள் அதன் மூலம் ஒளிப்பரப்பட்டு வருகின்றன.
தற்போது போதுமான நிதி சேர்ந்திருந்தாலும் ஆரம்ப நாட்களில் தங்கள் சொந்த பணத்தை வைத்து உதவிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் இந்த இளைஞர்கள்.
இவர்களின் வாட்சப் குழுவில் போராட்டம் குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் விவாதிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் போராட்டத்தில் கலந்து கொள்ள யாரெல்லாம் வருகிறார்கள்; எந்த நேரத்தில் வர முடியும் என்பது வரை ஆலோசிக்கின்றனர், அதன்படி சுழற்சி முறை அமைத்து ஜந்தர் மந்தருக்கு வருகை தருகின்றனர்.
சில நாட்களில் அவர்கள் பணிக்கு விடுமுறை எடுத்தும் அங்கு வந்து சென்றுள்ளார்கள்.
விவசாயிகளுக்கு போராடுவதற்கான இடம், உண்ண உணவு ஆகிய ஏற்பாடுகள் பெரும்பாலும் இளைஞர்களால் செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பெரும்பாலும் முதியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவியும் தேவைப்படுகிறது. அதுவும் அவர்கள் போராட்டத்தை தொடங்கிய நாட்களில் இரவு நேரங்களில் டெல்லியில் கடும் குளிர் நிலவியது; மேலும் அவர்கள் உண்ட உணவுஒவ்வாமையால் உடல் உபாதைகள் ஏற்பட்டன.
எனவே துவக்கம் முதல் இன்று வரை விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தி வருகிறார் குடும்ப தலைவியும், செவிலியர் படிப்பை முடித்தவருமான மல்லிகா சக்திஸ்வரன். மல்லிகா, உணவு விடுதி வைத்திருக்கும் தனது தந்தை மற்றும் கணவரின் மூலம் விவசாயிகளின் போராட்டம் குறித்து தெரிந்து கொண்டார்; அதன் பின் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தனது அன்றாட பணியுடன், விவசாயிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார். தேவைப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கான மாத்திரைகளை வரவழைப்பது என தொடர்ந்து தான் எடுத்து கொண்ட பணியை மேற்கொண்டு வருகிறார் மல்லிகா.
அவ்வப்போது இவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாம்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
குழுவாக அமர்ந்து செயல்படும் இளைஞர்களை தவிர அவ்வப்போது தன்னார்வலர்களாக பல இளைஞர்கள், அங்கு வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்வதை நம்மால் காண முடிந்தது.
தற்போது அதிக அளவில் பகிரப்படும் சமூக ஊடக செய்திகள், தொலைக்காட்சி செய்திகள், ஆகியவற்றை பார்த்து டெல்லியில் உள்ள தமிழர்கள் பலர் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்; அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளிலும் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜந்தர் மந்தரில் உள்ள கழிவறை, இரவில் பூட்டி வைக்கப்படுவதால் அவர்களுக்கு நடமாடும் கழிவறை வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் இந்த இளைஞர்கள்.
திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் இளைஞர்கள் கூடியதாகவும் ஆனால் ஜல்லிக்கட்டிற்கு பிறகு வாட்சப் குழுக்கள், முகநூல் பக்கங்கள் என அனைத்தும் போலிஸாரால் கண்காணிப்படுவதால் இளைஞர்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் மனோஜ்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் நோக்கம் என்றும் அவர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தை தொடர விரும்பினாலும் தாங்கள் தொடர்ந்து ஆதரவு தருவோம் என்றும் ஆனால் அதில் எந்த விதத்திலும் குறிக்கிட மாட்டோம் என்றும் தெரிவிக்கிறார் மனோஜ்.
"ஆரம்ப காலக்கட்டத்தில் நாங்கள் இங்கு வந்த போது எங்களுக்கு இங்குள்ள உணவுகள் ஒத்துக் கொள்ளவில்லை; பிறகு இந்த இளைஞர்கள்தான் எங்களின் உணவுக்கு உதவி செய்தனர்" என தெரிவிக்கிறார் போராட்டகளத்தில் உள்ள விவசாயிகளில் ஒருவரான சி.பழினிச்சாமி.
"எங்கள் அலைப்பேசிகளுக்கு கூட அவர்கள் ரீசார்ஜ் செய்து உதவி செய்தனர்; தங்கள் பணிகளை கூட பொருட்படுத்தாமல் மனித நேய அடிப்படையில் தங்களுக்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்; அவர்களின் ஆதரவால் தாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிந்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் விவசாயி சி.பழினிச்சாமி.
ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, பின்பு நெடுவாசல் என இம்மாதிரியாக தமிழர் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நாங்கள் ஒன்று கூடுவோம் என ஒரு மித்த குரலில் தெரிவிக்கிறார்கள் விவசாயிகளுக்காக கை கோர்த்த இளைஞர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்