You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்டு தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்
டெல்லியில் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களது நூதனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மண்சோறு சாப்பிட்டனர்.
நேற்று திங்கட்கிழமை, பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். வெளியே வந்ததும், வாகனத்திலிருந்து குதித்த சில விவசாயிகள் தங்கள் ஆடைகளக் களைந்து நடுரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல தொடர்ந்து அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை, தாங்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் பகுதியில், சாலையின் நடுவே சாப்பாட்டைக் கொட்டி, அதில் சாம்பாறு ஊற்றி வரிசையாக அமர்ந்து விவசாயிகள் சாப்பிட்டனர்.
தங்களை மண்சோறு சாப்பிடும் நிலைக்கு மோதி அரசு தள்ளிவிட்டதாக அவர்கள் கோஷமிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோதி, தங்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க வேண்டும், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தென்னக நதிகளை இணைக்க வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கடந்த 29 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரேமலதா ஆதரவு
விவசாயிகள் மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அங்கு வந்தார். அப்போது, விவசாயிகளுடன் சேர்ந்து தானும் மண் சோறு சாப்பிட்டார்.
அப்போது, விவசாயிகள் உடலை வருத்திக் கொள்ளாமல் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்த பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர் என்றும் டெல்லியில் நடத்திய போராட்டத்தின் மூலம் அவர்களது கோரிக்கையை மத்திய அரசிடம் அழுத்தமாக பதியவைத்துவிட்டதால், அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தேமுதிக எப்போதும் துணை நிற்கும் என்று கூறிய அவர், விவசாயிகள் நதிநீர் இணைப்பு மற்றும் விவசாய கடன் தள்ளுபடிபற்றி பல்வேறு விதத்தில் போராட்டத்தை நடத்தியுள்ளனர், அவர்களில் பலர் அதிக சிரமப்பட்டுள்ளார் என்றார். ''போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் தமிழகம் திரும்ப வேண்டும். மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கலாம். ஆனால் தற்போது போராட்டத்தில் உள்ளவர்களின் உடல்நிலை மோசமாகி வருவதால், இதை நிறுத்துவது நல்லது,'' என்றார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துச் செல்லலவும் தேமுதிக முயற்சி எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசை குறைகூறும் அதே நேரத்தில் தமிழக அரசு கோடைகாலத்தில் ஏரி, குளங்களை தூர்வாருவதில்லை, அதற்கான நிதியை பயன்படுத்துவதில்லை என்று குற்றம் சாட்டினார். ''காமராஜர் ஆட்சிக் காலத்திற்கு பிறகு, தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிக்கு திமுக, அதிமுக கட்சிகள் எந்த பங்கும் செய்யவில்லை. முறையான ஆட்சி இல்லாததுதான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்,'' என்றார் பிரேமலதா.
தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் இல்லாமல், பெண்கள் நெடுந்தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை உள்ளது என்றார். வரலாறு காணாத வெள்ளம் தமிழகத்தை பாதித்தபிறகும் கூட நீர்சேமிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பிய திமுக
இதனிடையே, இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது அவருக்கு பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாகவும், மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் அரசு விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்றும், அவர்கள் எலிக்கறி, பாம்புக்கறி ஆகியவற்றை சாப்பிட்டு போராட்டம் நடத்துவதாகவும்தெரிவித்ததாக திருச்சி சிவா தெரிவித்தார்.
விவசாய கடனை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும்?: நிபுணர் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்