You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குரங்குகளுடன் வாழ்ந்ததாகக் கூறப்படும் சிறுமியை சுற்றி தொடரும் சர்ச்சை
சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேச மாநிலம் கத்ரீனாத் வனவிலங்கு சரணாலய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமி தொடர்பாக, தற்போது முரண்பட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன.
அந்த சிறுமி கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் பஹ்ரைச் வனப்பகுதியில் உள்ள காவல்நிலைய பொறுப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், சிறுமி கண்டெடுக்கப்பட்டபோது உடையணிந்திருந்ததாகவும், குரங்குகளுடன் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பி.பி.சி செய்தியாளரிடம் பேசிய காவல்துறை அதிகாரி அவ்தார் சிங் யாதவ், அந்தச் சிறுமியின் மனநிலை சரியாக இல்லாததால், பெற்றோர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
ஆனால், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது உடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை என்றும், குரங்குகளுடன் இருந்ததாகவும் அதே பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஜே.பி. சிங் கூறுகிறார்.
வனத்துறை பணியாளர்கள் அந்தச் சிறுமியை கண்டதும், அருகிலுள்ள கிராமத்தினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்ததாக அவர் தெரிவித்தார்.
இதைத் தவிர, சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது தானும் அங்கு இருந்ததாக சாட்சியளிக்கும் ஷோயிப், முதலில் சிறுமியை ஏற்றுக்கொள்ள மறுத்த காவல்துறையினர், பிறகு அனைவரின் வற்புறுத்தலினால்தான் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறுகிறார்.
குரங்குகளுடன் நிர்வாண நிலையில் காணப்பட்ட சிறுமியை மீட்கும் போது, குரங்குகள் அவரை விட மறுத்து சண்டையிட்டதில் ஏற்பட்ட காயங்கள் சிறுமியின் உடலில் காணப்பட்டதாக பல்ரிச் மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர், மருத்துவர் டி.கே.சிங் கூறுகிறார்.
தற்போது மனநல மருத்துவமனையில் இருக்கும் சிறுமி சாதாரணமாகவே இருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில், சிறுமிக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாகவும், அவர் இயல்பாக மாறுவது இயலாதது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தின் முரண்பாடுகள் முடிவுக்கு வர இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்