You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்களின் இரவுப்பணியை நிறுத்த முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கை சரியா?
பெண்கள் இரவுப் பணியில் ஈடுபடுவதை தடை செய்வது தொடர்பாக கர்நாடக சட்டசபையில், ஓர் அறிக்கை விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கை சரியானதா, சம்பந்தப்பட்ட பெண்களின் கருத்துக்களைக் கேட்டார்களா? அவர்களின் மனம் திறந்த கருத்துக்களை இங்கே ஆராயலாம்.
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு காரணமாக இரவு வேலை அவர்களுக்கு அளிக்கப்படக்கூடாது என்றும் குடும்பத்தை பராமரிக்கும் வேலை அவர்களுக்கு இருக்கிறது என்றும் பேசப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இரவு வேலையை நம்பியுள்ள பெண்கள், அவர்களின் குடும்பங்கள், இரவு வேலையை பிரதானமாக கருதும் வெளிநாட்டு நிறுவனங்கள் என பல தளங்களிலும் இந்த அறிக்கை சர்ச்சையை தொடக்கிவைத்துள்ளது.
இந்தியாவின் சிலிகான் வேலி என்று சொல்லப்படும் பெங்களூரு நகரத்தில் பல்வேறு நிறுவனங்களில் பகல் நேரத்தை போலவே, இரவு நேரத்திலும் பணிச்சூழல் பரபரப்பாக காணப்படும்.
தகவல் தொழில்நுட்ப துறையில் இரவுநேர வேலையில் ஈடுபட்டுள்ள இளம்பெண்கள், இளைஞர்களின் கருத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், பொறியியல் பட்டதாரியான லோகேஸ்வரிக்கு ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இரவு நேர பணியில் வேலை கிடைத்தபோது தனது வாழ்க்கை மீதான நம்பிக்கை பிறந்தது என்கிறார்.
தற்போது தனியார் நிறுவனத்தில் ஆரக்கிள் தகவல் நிர்வாக பொறுப்பில் உள்ள அவர் பிபிசியிடம் பேசியபோது ''அப்பா காலமாகிவிட்டார். எனது தங்கையின் படிப்பு செலவுகள், எனது படிப்பிற்காக வாங்கிய மூன்று லட்சம் கல்வி கடன் என குடும்பச்சுமை முழுவதையும் நான் மகிழ்ச்சியோடுதான் ஏற்றுக்கொண்டேன். எனது அம்மாவையும் திருப்தியாக வாழவைக்க முடிந்தது. எல்லாம் இந்த இரவு நேர பணியில் கிடைத்த கூடுதல் சம்பளத்தால்தான், ''என்றார்.
சென்னை மற்றும் பெங்களுரு என இரண்டு நகரங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற லோகேஸ்வரி, ''பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. பெண்கள் இரவு வேலைக்கு போக வேண்டாம் என்றால், நம் நாட்டில் பாதுகாப்பு மோசம் என்று அரசே சொல்வது போல் உள்ளது,'' என்கிறார்.
பெண்களின் இரவுப்பணி தொடர்பான அறிக்கையை தயாரித்த கர்நாடக அரசு குழுவின் தலைவர் என். ஏ. ஹாரிஸ், பெண்களுக்கு வீட்டில் அதிகவேலை உள்ளது என்றும் குழந்தை வளர்ப்பு வேலை இருப்பதால் இரவு வேலை கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ள கருத்தை கண்டிப்பதாக கூறுகிறார் லோகேஸ்வரி.
''குடும்ப நிர்வாகத்தில் பெண், ஆண் இருவருக்கும் சரிபங்கு உண்டு. முதலில் பெண்களுக்கு அளிக்கும் மகப்பேறு விடுப்பு போல ஆண்களுக்கும் விடுப்பு கொடுத்து பெண்களின் குடும்பசுமையை அரசு குறைக்கலாம்,'' என்கிறார்.
இரவுப் பணிக்கு அதிக சம்பளம் என்பதை தாண்டி, பல நிறுவனங்கள் இந்த நேரத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கின்றன என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார் ராஜன் காந்தி.
கடந்த 10 ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணிபுரிகிறார் ராஜன் காந்தி. ''நாங்கள் இருப்பது பெங்களூருதான். ஆனால் பலரும் வித விதமான நாடுகளின் நேரத்திற்கு தகுந்தபடி வேலை செய்கிறோம். என் அலுவலகத்தில் 40 சதவீதம் பெண்கள். அதிலும் முக்கியமான ப்ராஜெக்ட் என்றால் இரவு வேலை என்பது கட்டாயமானதாக இருக்கும்''என பணிச் சூழலை விளக்குகிறார் ராஜன் காந்தி.
கர்நாடக அரசின் இந்த அறிக்கை வெளிநாட்டு நிறுவனங்களை வேறு நகரங்களுக்கு அனுப்பிவிடும் நகர்வு என்கிறார் ராஜன் காந்தி.
தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் கூட்டமைப்பின் பெங்களூரு பிரிவின் தலைவர் கதிர், இரவு நேர பணி தேவையா, இல்லையா என்ற தேர்வு தனிநபரின் விருப்பம் என்கிறார்.
மென்பொருள் வடிவமைப்பாளரான கதிர் இந்த துறையில் கடந்த 10 ஆண்டுகளில், அதிக அளவில் பெண்கள் வேலைக்கு வந்துள்ளது பாராட்டப்பட வேண்டியது என்கிறார். ''பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை அரசு அளிப்பதை விடுத்து அவர்களை வேலைக்கு போக வேண்டாம் என்பது பிற்போக்குத்தனமானது. அரசின் முக்கிய பணியே குடிமக்களை பாதுகாப்பதுதான். ஆண், பெண் என்பதைதாண்டி அனைவருக்கும் பாதுகாப்பான வெளியை ஏற்படுத்துவது நல்லஅரசின் கடமை,'' என்றார் கதிர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்