You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரதீய ஜனதாவின் எதிர்காலம் யோகியா?
இந்திய அரசியலின் மையப்புள்ளியாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே பரவலாகப் பேசப்படுபவர் யோகி ஆதித்யநாத். எந்த அளவுக்கு ஒரு தரப்பினரால் போற்றப்படுகிறாரோ அதே அளவுக்கு இன்னொரு தரப்பினரால் வெறுக்கப்படுபவர் இந்தக் `காவி'த் தலைவர். இதுபற்றி, பிபிசியின் கீதா பாண்டே ஆராய்கிறார்.
முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக, கடந்த வார இறுதியில் தனது சொந்தத் தொகுதியான கோரக்பூருக்கு விஜயம் செய்தார் யோகி. அங்கு பிரம்மாண்டமான வரவேற்பு காத்திருந்தது.
ஒரே இரவில், கோரக்பூர் நகரமே காவிமயமானது. கோரக்பூர் கோயிலுக்குச் செல்லும் வழியெல்லாம் யோகியின் போஸ்டர்கள், கட்சிக் கொடிகள், காவி மலர்கள்... துணிக்கடைகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சிப் பொம்மைகள் கூட காவியுடையால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அங்குள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் அவருக்காகக் கூடியிருந்த கூட்டம், அவரைக் கடவுளின் அவதாரமாக சித்தரித்தது. 1998 முதல் தொடர்ந்து ஐந்து முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டருக்கும் அவருக்கு வயது 44.
அவர் மிகுந்த சர்ச்சைக்குரிய தலைவராகவும் இருக்கிறார். முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டி, மக்களிடம் துவேஷத்தை விதைக்கும் மோசமான தலைவர் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவரும் அவரது ஆதரவாளர்களும் பேசியதாகக் கூறப்படும் சில கருத்துக்கள் மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாயின. குறிப்பாக, ஹிந்து மதப் பெண்களை ஈர்க்க, முஸ்லிம் ஆண்கள் லவ் ஜிகாத்தில் ஈடுபடுவதாகவும், அன்னை தெரஸா இந்தியாவை கிறிஸ்தவமயமாக்க முனைந்ததாகவும் குற்றம் சாட்டினார் யோகி.
டொனால்டு டிரம்ப் ஸ்டைலில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அவர், ஹிந்தி சினிமா நட்சத்திரம் ஷாரூக் கானை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாதி ஹஃபீஸ் சயீத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.
ஒரு கட்டத்தில், அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர், யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட இருக்காது என்றும், அந்த ஆதரவாளர்கள் இறந்த முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வார்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.
இந்துப் பெண்களை தொல்லை செய்யும் சாலோயோர ரோமியோக்களைத் தடுக்கும் படை அமைக்கப்படும் என்றும், பசுக்களைப் பாதுகாப்பது, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவது உள்ளிட்டவையும் அவரது தேர்தல் நேர முக்கிய வாக்குறுதிகளாக இருந்தன.
இந்தியாவில், உத்தரப் பிரதேசம் உள்பட பெரும்பாலான இடங்களில், மாடுகள் புனிதமாகக் கருதப்படுகின்றன. அவற்றை மாமிசத்துக்காகக் கொல்வது சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு, ஒரு முஸ்லிம் நபர், தனது வீட்டில் மாட்டு மாமிசம் வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்பட்டார்.
யோகி ஆதித்யநாத், பல்வேறு கிரிமினல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார். கொலை முயற்சி, கிரிமினல் தாக்குதல், 1999-ல் நடந்த மோதல் தொடர்பாக வன்முறையைத் தூண்டிய வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. கடந்த 2007-ஆம் ஆண்டு, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் 11 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சராக அவர் நியமிக்கப்பட்டது இந்தியாவிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பலரை அதிர்ச்சியடையச் செய்தது. அவரது ஆட்சியில், மாநிலத்தில் உள்ள 40 மில்லியன் முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்க முடியாது என்று அச்சம் தெரிவித்தார்கள்.
ரோமியோ எதிர்ப்புப் படையிநர், சாலையில், பூங்காக்களில் செல்லும் ஜோடிகளை தொர்ந்து துன்புறுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
`500 பசுக்களுடன் நேரடியாகப் பேசுகிறார் யோகி!'
உள்ளூர் பத்திரிகைகளோ, அவரது மாபெரும் வெற்றி குறித்து புகழந்து தள்ளுகின்றன.
"யோகியின் அற்புத நினைவாற்றல் குறித்து உள்ளூர் பத்திரிகைகள் மிக விரிவாக எழுதுகின்றன. சில பத்திரிகைகள், அவர் தனது 500 பசுக்களுடனும், குரங்குகள், நாய்கள் மற்றும் பறவைகளுடன் எப்படி நேரடியாகப் பேசுகிறார் எப்படி நேரடியாகப் பேசுகிறார் என்பது குறித்தும் எழுதுகின்றன," என்கிறார் கோரக்பூர் பத்திரிகையாளர் குமார் ஹர்ஷ்.
" உள்ளூர் மக்களைப் பொருத்தவரை, அவர் மிகப் பிரபலமான நபர். அவர் தலைமைப் பூசாரி. மருத்துவமனை மற்றும் கல்லூரிகளை நடத்தும் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். கடுமையான உழைப்பாளி", என்கிறார் அவர்.
வன அதிகாரியின் மகனான யோகி ஆதித்யநாத், 1972-ஆம் ஆண்டு கர்வால் பகுதியில் (தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது) பிறந்தார். அவரது இயற்பெயர் அஜய் சிங் பிஷ்ட். கணிதவியல் பட்டதாரி.
அந்தக் கோயிலுக்கு வெளியே கடை வைத்திருக்கம் முஸ்லிம் ஒருவர், தான் தேவையில்லாமல் கவலைப்படுவதில்லை என்று தெரிவித்தார்.
ஃபெரோஸ் அஹமது என்ற அந்த வியாபாரி, தான் பாரதீய ஜனதாவுக்குத்தான் வாக்களித்தாகவும், பின்தங்கிய அந்த நகருக்கு யோகி ஆதித்யநாத், வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான அவரது நிலைப்பாடு குறித்துக் கேட்டபோது, "தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல்வாதிகளும் அப்படித்தான் பேசுவார்கள். அவரது சில ஆதரவாளர்கள்தான் பிரச்சனை செய்பவர்கள். தற்போது ஆட்சிக்கு வந்துவிட்டதால், அவை நின்றுவிடும் " என்றார்.
அவர் சொல்கிறபடி நடக்குமா?
"தான் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதில் இருந்து மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்கிறார்" என்கிறார் ஷரத் பிரதான் என்ற மூத்த பத்திரிகையாளர்.
"பதவியேற்ற முதல் நாளிலேயே மிகுந்த அடக்கத்தைக் கடைபிடித்த அவர், தனது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரையும் சேர்த்திருக்கிறார். எல்லோரையும் அரவணைத்துச் செல்ல முயல்வதாகக் காட்டியிருக்கிறார்."
பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக யோகி ஆதித்யநாத் இதுவரை வாய் திறக்கவில்லை.
முதல் முறையாக கோரக்பூரில் பேசிய யோகி, "பிரதமர் எனக்கு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். வளர்ச்சித் திட்டங்கள் கடைசி நபர் வரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். சாதி, மதம், மொழி அடிப்படையில் யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். வெற்றி பெறுவதற்கு உங்கள் ஆதரவு தேவை " உத்தரவாதம் அளித்து ஒத்துழைப்பையும் கோரினார்.
"கட்சியில் தற்போது நம்பர் ஒன் தலைவர் மோதி. மற்றவர்கள் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர்கள். இடையில் யாரும் இல்லை. யோகி ஆதித்யநாத் இரண்டாவது இடத்தில் இருக்கலாம்"
"இளம் வயது அவரது பலம். அவருக்கு 60 வயது ஆகும்போது, மோதிக்கு 80 வயது ஆகியிருக்கும். அப்போது தலைமையேற்க தயாராகிவிடுவார். அவர்தான் நாளைய பாரதீய ஜனதாவின் எதிர்காலம்" என்கிறார் பத்திரிகையாளர் பிரதான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்