You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களின் எதிர்பார்ப்பு - எல்லை எதுவரை?
- எழுதியவர், ராஜ்தீப் சர்தேசாய்
- பதவி, தொலைக்காட்சி, மூத்த செய்தியாளர்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, மாநிலத்தின் புதிய முதலமைச்சரக யோகி ஆதித்யநாத் யோகியை நியமித்திருக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் நடவடிக்கைகளின் லாக்-இன் "வளர்ச்சி" என்றால், அதன் பாஸ்வேர்ட் "இந்துத்வா" என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் இது வழக்கமானது தான். வளர்ச்சியை நோக்கிய பாதையில் அவர்கள் பயணிப்பதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதும் உண்மை தான் என்றாலும், கட்சியின் முழுமையான, அடிப்படைக் கொள்கை இந்துத்வா என்பதுதான்.
பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய அடையாளமே இந்துத்வாவில் தான் அடங்கியிருக்கிறது. அதில், யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கட்சியின் உத்தரப்பிரதேச பிரிவில், யோகி ஆதித்யநாத் மிகவும் பிரபலமானவர்.
அதாவது உத்தரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் அரசு அமைவதை மூன்று கோணங்களில் பார்க்கலாம். ஆனால், இந்த மூன்று கோணங்களின் ஒரே பார்வை, ஒரே இலக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவது தான்.
பார்க்கப்போனால், உத்தரப்பிரதேச மாநில மக்கள், நரேந்திர மோதியின் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே, பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தார்கள். முலாயம், அகிலேஷ் மற்றும் மாயாவதியின் அரசியல் செயல்பாடுகளால், சலித்துப் போன மக்கள், மோதியின் வாயிலாக வளர்ச்சிக்கான இலக்கை நனவாக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். எனவே தான் உத்தரப்பிரதேச மக்களுக்கு மோதி அளித்திருக்கும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
புதிய அரசியல் கோணத்தை உத்தரப்பிரதேச மக்களுக்கு நரேந்திர மோதி வழங்கியிருக்கிறார். "அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவருடனும் இணைந்து பணியாற்றுவது" என்ற மோதியின் கண்ணோட்டம் மக்களை ஈர்த்திருக்கிறது.
ஆனால், ஆதித்யநாத் மீது நல்ல அபிப்ராயம் இல்லை என்பதும், நிர்வாக அனுபவம் இல்லாததும் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. அதோடு, வளர்ச்சி தொடர்பான பணிகளுடன் அவரை இணைத்துப் பார்க்கமுடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.
முஸ்லிம் சமூகத்தினரின் அச்சம்
உத்தரப்பிரதேசத்தில் 18 முதல் 20 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையுள்ள இவர்களை ஒதுக்கிவிட்டு, புதிய முதலமைச்சரால், மாநிலத்தை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்த முடியுமா? முஸ்லிம்களின் நம்பிக்கையை எப்படி பெறப்போகிறார் ஆதித்யநாத்?
நேற்று வரை முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வந்த யோகி ஆதித்யநாத், அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவருடனும் இணைந்து எப்படி பணியாற்றுவார்? இந்த சந்தேகம் எப்போதும் நீடிக்கும், அவரை நிழல் போல் பின் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
முஸ்லிம் மக்களிடையே ஏற்கனவே நிலவிவரும் ஒருவிதமான அச்சம், இனி மேலும் அதிகரிக்கும்.
சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி, பாரதீய ஜனதா கட்சி வளர நினைத்தாலோ அல்லது அப்படி நடக்கும் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலோ, அது மிகவும் தவறானதாகிவிடும்.
இதனால் ஏற்படும் நஷ்டம் என்ன?
இதுவரை பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து வந்த, கட்சி-சார்பற்ற சிறுபான்மை வாக்காளர்களின் நம்பிக்கை, அவநம்பிக்கையாக மாறிவிடும். இது கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்தை முன்நிறுத்தும் கட்சியின் இளைஞர் அணிக்கு, இது பின்னடைவை ஏற்படுத்திவிடும். கட்சி சார்பற்ற வாக்களர்கள், யோகி ஆதித்யாநாத்திற்கு எப்போதுமே ஒத்துவரமாட்டார்கள்.
மாநில அரசு நிர்வாகத்தை எப்படி நடத்தப்போகிறார் என்பதுதான் யோகி ஆதித்யநாத்தின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். அவர் எந்தவிதமான அரசியல் நடத்தினாலும், மிகவும் கவனத்துடன் செய்யவேண்டியிருக்கும். அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் கூர்மையாக கண்காணிக்கப்படும்.
கட்சியும், நரேந்திர மோதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிர்வாக பொறுப்பை யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைத்து, மிகப்பெரிய சவாலை கையில் எடுத்திருக்கிறார்கள். அனைவரின் ஆதரவுடனும், விருப்பத்துடனும், யோகி ஆதித்யநாத்துக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், தன்னை நிரூபிக்கவும், அவர் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
சங்க பரிவார் அமைப்பின் அழுத்தம் வேலை செய்தது
யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராக வேண்டும் என்பது நரேந்திர மோதியின் விருப்பம் மட்டுமல்ல, சங்க பரிவார் அமைப்புடையதும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்துத்துவாவை மையமாக கொண்ட அரசியலை, 325 தொகுதிகளுடன் அறுதி பெரும்பான்மை பெற்றிருக்கும் போது நடத்தாமல், வேறு எப்போது நடத்துவது என்று ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது.
ஏனெனில் குஜராத்திற்கு பிறகு, உத்தரப்பிரதேசத்தின் மீது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பு 1990 களிலேயே தொடங்கிவிட்டது.
ராமர் ஆலயம் கட்டவேண்டும் என்ற இயக்கம் மும்முரமாக இருந்த காலத்தில் இருந்தே, உத்தரப்பிரதேசத்தை பரீட்சார்த்த பூமியாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. என்றாவது ஒரு நாள் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும், ராமர் ஆலயம் கட்டப்படும், இந்துத்வாவின் கொடி பறக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
இதனால் தான், யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சராக்க வேண்டும் என்று, நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவுக்கு சங்க பரிவார் அமைப்பு அழுத்தம் கொடுத்த்து.
இந்துத்வா கொள்கையுடன், வளர்ச்சிக்கான அரசியலையும் மேற்கொள்வது தான் சங்க பரிவார் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் இலக்கு. இல்லாவிட்டால், இந்துத்வா என்ற கோட்பாடு நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
இன்றைய சூழலில், இது கட்சிக்கு மிகவும் கடினமானதாக இருக்காது, ஏனெனில் எதிர்கட்சிகள் மிகவும் பலவீனமாக உள்ளன. பிற பிரிவுகள் மீதான நம்பிக்கையும் குறைந்திருக்கிறது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றின் அரசியல் நடவடிக்கைகளால், மக்கள் அலுத்து சலித்துவிட்டார்கள்.
இந்துத்வாவின் வெற்றி
இதற்கான முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே, கேஷவ் பிரசாத் மெளர்யாவும், தினேஷ் ஷர்மாவும் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேஷவ் பிரசாத் மெளர்யா, பின்தங்கியவர்கள் மற்றும் பொதுமக்களை சமதானப்படுத்துவதற்காகவும், தினேஷ் ஷர்மா பாரம்பரிய பிராமண வாக்காளர்களை ஈர்ப்பதற்கு என்பதும் சாதுர்யமான அரசியல் முடிவு.
இத்தனை நடவடிக்கைகளும் இந்துத்வாவின் வெற்றியையே சுட்டிக்காட்டுகின்றன.
வலுவான எதிர்கட்சி இல்லாத நிலையில், சில நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பாரதீய ஜனதா கட்சியுடன், இளம் தலைமுறை வாக்களார்களை இணைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறும். ஆனால் "வளர்ச்சி" என்ற முழக்கம், செயலாக மாறாவிட்டால், மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காவிட்டால், தொழில் வளர்ச்சி ஏற்படாவிட்டால், பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமான அனைத்தும் பாதகமாக மாறி, அதன் பலனை பிற கட்சிகள் அறுவடை செய்துவிடும்.
(இவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்