கட்டை விரல் நகத்தின் அளவில் சிறிய தவளைகள்: தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்பு
கட்டை விரலின் நகத்தில் கச்சிதமாக அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளைகள், இந்திய காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், SD BIJU
உலகின் மிகச்சிறிய தவளைகளான இவைகள், காடுகளில் வாழக்கூடியவை; மேலும் இரவில் பூச்சிகளை போன்ற ஒலிகளை எழுப்பக்கூடியவை.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு இரவுத் தவளை இனங்களில் மூன்று, பெரிய அளவைக் கொண்ட இனங்களாகும்.
இந்தியாவின் மேற்கு கரைக்கு இணையாக இருக்கும் மலைப்பகுதி, பல அபாயகரமான செடிகள் மற்றும் விலங்குகளுக்கு இருப்பிடமாக உள்ளது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்விற்கு பிறகு விஞ்ஞானிகள் இந்த புதிய இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.
ரகசிய பழக்கங்கள்
"இந்த சிறிய தவளைகள் ஒரு நாணயத்திலோ அல்லது கட்டை விரல் நகத்திலோ கச்சிதமாக அமரக்கூடியவை" என இந்த புதிய இனத்தை கண்டுபிடித்த குழுவில் இருந்த ஒருவரான டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சொனாலி கார்க் தெரிவித்துள்ளார்.
"இம்மாதிரியான சிறிய தவளைகளை காண்பது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது; அப்பகுதியில் இவை மிகவும் பரவலாக காணப்படுகின்றன.

பட மூலாதாரம், SD BIJU
இவைகளின் மிகவும் சிறிய அளவு, ரகசிய இருப்பிடம் மற்றும் பூச்சிகளை போன்ற ஒலிகள் ஆகியவற்றால் ஆராய்ச்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருக்கலாம்".
நைட்டிபிட்ரிக்கஸ் என்னும் இந்த இரவுத் தவளை இனத்தில், முன்னதாக 28 இனங்கள் இருந்தன; அதில் மூன்று இனங்கள் 18 மில்லிமீட்டருக்கு குறைவானதாக, மிகவும் சிறிய தோற்றம் கொண்டவையாகும்
இந்த புதிய இனங்கள் அதன் டிஎன்ஏ, உடற்கூறு அமைப்புகள் மற்றும் ஒலியின் பரிமாணங்கள் ஆகியவற்றை கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தவளைகள் மேற்கு தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாக கொண்டவை; 70-80 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றிய பழமையான இனமாக இவை இருக்கலாம்.
பல புதிய தவளைகள் பாதுகாக்கப்பட்ட இருப்பிடங்களுக்கு வெளியே வாழ்கின்றன அல்லது மனித இருப்பிடங்களுக்கு அருகில் வாழ்கின்றன.

பட மூலாதாரம், SD BIJU
டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்டி பிஜு, இந்தியாவிலிருந்து 80 புதிய நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களை கண்டுப்பிடித்துள்ளார்.
"32 சதவீதத்திற்கும் அதிகமாக அதாவது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மூன்றில் ஒரு தவளைகள் அழிந்துவிடும் ஆபத்தில் உள்ளன", என அவர் தெரிவிக்கிறார்.
"ஏழு புதிய இனங்களில், ஐந்து இனங்கள் மனிதர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன; அவைகளைப் பாதுகாக்க உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்`` என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












