சுதந்திரமாக செயல்படுவாரா எடப்பாடி பழனிச்சாமி ?
சசிகலா உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து முதலமைச்சராக முடியாதென்ற நிலை ஏற்பட்டபின்னர், அவரது ஆதரவாளராகக் கருதப்படும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக்கினார். சசிகலாவின் தயவால் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலில் சில காலத்துக்காவது சசிகலாவின் ஆணையை ஏற்றுத்தான் செயல்படுவார் என்கிறார் மூத்த ஊடகவியலாளர் கே.என்.அருண்.

சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் உத்தரவுகளைப் பெற்றுத்தான் பல முடிவுகளை பழனிச்சாமி எடுக்கவேண்டியிருக்கும்; தினகரனிடம் உத்தரவு பெறுவது என்பது சசிகலாவிடம் உத்தரவு பெறுவது போலத்தான் என்றார் அருண்.
மத்தியில் ஆளும் பாஜக இந்த நெருக்கடியை கையாண்ட விதம் குறித்து கேட்டபோது, இந்த நெருக்கடியை பயன்படுத்தி பன்னீர்செல்வம் மூலம் தனது செல்வாக்கை தமிழ் நாட்டில் வளர்த்துக் கொள்ளலாம் என்று பாஜக கணக்குப் போட்டது. ஆனால் அந்தக் கணக்கு அடிபட்டுவிட்டது, என்றார் அருண்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சியான திமுக இந்த விஷயத்தை சரியாகவே கையாண்டிருக்கிறது. அது இந்த நெருக்கடியில் தலையிட்டிருந்தால் அதற்கு எதிர்விளைவுகள் மோசமாக இருந்திருக்கும். இந்த நெருக்கடியை அடுத்து விரைவில் தேர்தல் வந்தால் திமுக பெருவெற்றியைப் பெறும். நான்காண்டுகள் கழித்து தேர்தல் வந்தால்கூட அதிமுக தோற்கடிக்கப்படலாம் என்றார் அருண்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













