எம்.எல்.ஏ.க்கள் யாரும் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்படவில்லை: சசிகலா
அதிமுகவைச் சேர்ந்த சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்படவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AIADMK
சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தனக்கு ஆதரவான எம்எல்ஏக்களை இன்று சென்று சந்தித்த சசிகலா, பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்படவில்லை என்பதையும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையும் பத்திரிகையாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று கூறினார். மேலும், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை மிரட்டுவதாகவும் குழந்தைகளை கடத்தப்போவதாக கூறுவதாகவும் சசிகலா குற்றம்சாட்டினார்.
எம்எல்ஏக்கள் தொடர்ந்து குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் பேசிவருவதாகவும் கூறினார்.
சசிகலா முதல்வராகப் பதவியேற்க முடியாது என ஆளுனர் அறிக்கை அனுப்பியதாக செய்திகள் வெளியானது குறித்துக்கேட்டபோது, அது தவறான செய்தி என ஆளுனர் மாளிகை மறுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய சசிகலா, தங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அடுத்தகட்டப் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் குறித்து கேட்டபோது, செய்தியாளர்கள் பார்த்தே தெரிந்துகொள்ளலாம் என்று கூறிய சசிகலா, வழக்கு முடிவு வெளியாகும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

பட மூலாதாரம், AIADMK
இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முதலில் எல்லாப் பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படாத நிலையில், பத்திரிகையாளர்களின் எதிர்ப்புக்குப் பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதற்கு முன்பாக சசிகலா கூவத்தூர் சென்ற செய்தியைச் சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை தனியார் விடுதிக்கு முன்பாக இருந்த சிலர் தடுத்தனர். இதையடுத்து செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
சற்று முன்பாக, கூவத்துரில் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய சசிகலா, சட்டமன்றத்தில் எப்பாடுபட்டாவது மறைந்த முதலமைச்சர் படத்தை திறப்பதற்கு உறுதியேற்க வேண்டும் என்று கூறினார்.
தானும் ஜெயலலிதாவும், சென்னை, பெங்களூர் சிறைச்சாலைகளைப் பார்த்த பிறகும் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததாகக் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












