ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தைநினைவில்லமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பன்னீர செல்வம் போர்க்கொடி

பட மூலாதாரம், Getty Images

இன்று ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கழகத்தை வழிநடத்த வேண்டும் என்றார்.

கழக பொருளாளர், கழக அவைத்தலைவர் நம்மோடு இருக்கிறார் ஆக நாம் தான் அ.தி.மு.க என்று எம்.பி மைத்ரேயன் கருத்து தெரிவித்தார்.

யார் துரோகம் இழைத்தது?

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் முதல்வர் பதவியை கைப்பற்ற பல அமைச்சர்களை தூண்டிவிட்டு தன்னை பதவி விலக தொலைக்காட்சி வாயிலாக பேட்டியளித்து களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் பேசுகையில், நாடகம் ஆடினேன், கட்சிக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று என்மீது சசிகலா குற்றஞ்சுமத்துகிறார் என்றார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு வி.கே.சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தை படித்து காட்டினார் ஓ.பன்னீர்செல்வம்.

துரோகம் புரிந்தவர்களின் தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன் என்று அந்த கடித்தத்தில் குறிப்பிட்டு இருந்தார் சசிகலா, ஆனால் உண்மையில் தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, அக்காவுக்கு தங்கையாக இருப்பதே போதும் என்றும் கூறியிருந்தார்.

வி.கே.சசிகலாவின் மன்னிப்பு கடிதத்தை தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டபின் தங்களை எல்லாம் அழைத்ததாகவும், சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதால் தனக்கு உதவியாக இருக்கத்தான் அவர் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவதாகவும் அப்போது ஜெயலலிதா எங்களிடம் கூறியதாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

மேலும், சசிகலாவோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று தங்களுக்கு ஜெயலலிதா ஆணையிட்டதாகவும், அதைத்தான் இறுதிவரை காப்பாற்றி வந்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

"கட்சிக்கு வி.கே.சசிகலா இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு நான் துரோகியா, யார் கபட நாடகம் ஆடி கொண்டிருப்பது, ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி கபட நாடகம் ஆடும் சசிகலாவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

அவர்கள் எந்தக் குற்றச்சாட்டுக்கள் எங்கள் மீது வைத்தாலும் அதற்கு தக்க பதில் கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வசித்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்றும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

அது நினைவு இல்லமாக மாற்றப்படுவதற்கான அனைத்து அறப்போராட்டங்களும் நடக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட பன்னீர்செல்வம், நாங்கள் எந்த எம்.எல்.ஏ.வையும் விலை கொடுத்து கூப்பிடவில்லை என்றும், மதுசூதனன் முன்னின்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்