கைலாஷ் சத்யார்த்தி பெற்ற நோபல் பரிசு திருட்டு

இந்திய தலைநகர் டெல்லியில், குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நோபல் பரிசின் மாதிரி திருடு போயுள்ளது.

2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் கைலாஷ் சத்யார்த்தி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் கைலாஷ் சத்யார்த்தி

செய்வாய்க்கிழமை காலை நடந்த திருட்டு சம்பவத்தில் அவரின் நோபல் பரிசு சான்றிதழும் திருடப்பட்டுவிட்டதாக சத்யார்த்தி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

திருட்டு நடந்த சமயம், வீட்டில் யாரும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்; இந்தியாவில் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிராக போராடியதற்காக சத்யார்த்திக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பெண் கல்விக்காக பணியாற்றிய, பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தை கல்வி ஆர்வலர் மலாலா யூசஃப்சாயுடன் சத்யார்த்தி அந்த பரிசை பகிர்ந்து கொண்டார். திருட்டு குறித்து டெல்லி போலிஸ் விசாரித்து வருவதாக சத்யார்த்தி தெரிவித்தார்.

சத்யார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழும் திருடு போய் விட்டது

பட மூலாதாரம், Bhasker Solanki

படக்குறிப்பு, சத்யார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழும் திருடு போய் விட்டது

"எனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, எனது சான்றிதழ் மற்றும் மெடலின் மாதிரி ஆகியவையுடன் சேர்த்து வேறு சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மேலும் காணாமல் போன பொருட்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்", என்று அவர் தெரிவித்தார்.

63 வயதாகும் அவர், பச்பன் பசாவ் அந்தோலன் என்னும் "குழந்தைப்பருவத்தை பாதுகாக்கும் இயக்கத்தை" நிறுவியவர். அந்த இயக்கம் குழந்தைகள் உரிமை குறித்தும், குழந்தை கடத்தலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது குறித்தும் பிரச்சாரம் செய்து வருகிறது.

சத்யார்த்தி நீண்ட காலமாக குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர்; மேலும் அடிமையாக இருந்த பல குழந்தைகளை மீட்டுள்ளார்.

அவரின் முயற்சியால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆபத்தான தொழிற்சாலைகளிலிருந்து மீட்கப்பட்டு, மறு வாழ்வு வழங்கப்பட்டது.