You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய எல்லைக்குள் வழிதவறிய சீனரின் அரை நூற்றாண்டு சோகம்
- எழுதியவர், வினீத் காரே
- பதவி, பிபிசி இந்தி
பிப்ரவரி 2017 பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் மீள்பகிர்வு இது
டிரோடி என்ற இந்தக் கிராமம் மத்திய இந்தியாவில், நாக்பூரிலிருந்து சுமார் ஐந்து மணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது.
அங்குதான் வாங் சி வசிக்கிறார். 1963ல் இந்தியாவில் தவறி நுழைந்ததிலிருந்து திரும்ப சீனா செல்லமுடியாமல் தவிக்கும் இவர், அங்கு சென்று தனது குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்று ஏங்குகிறார்.
குட்டையாக வெட்டப்பட்ட, தும்பைப்பூவைப் போல வெளுத்த நரை முடியுடன் தோற்றமளிக்கும் வாங் சி, என்னைக் கட்டித் தழுவிக்கொண்டார்.
அவர் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 3000 கிமீ தொலைவில், சீனாவில் இருக்கும் அவரது குடும்பத்தினருடன் வீடியோவில் தொடர்பு கொள்ள முயல்கிறோம்.
நான் தொலைபேசி எண்ணைச் சுழற்றுகையில் அவர் எதிர்பார்ப்புடன் அதைப் பார்க்கிறார். அவரது 82 வயது அண்ணன் வாங் ஷியானுடன் வீடியோ தொடர்பு திரையில் கிடைத்தது, அவரது விழிகள் பிரகாசமடைகின்றன. வான் ஷியுயான் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள ஷியான்யாங் என்ற நகரில் வீட்டில் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார்.
இரு சகோதரர்களும், 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
மாண்டரின் மொழியில் அவர்களது உரையாடல் 17 நிமிடங்கள் நீடிக்கின்றன.
``என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவருக்கு மிகவும் வயதாகிவிட்டது. எனக்காகத்தான் உயிரோடு இருக்கிறேன் என்று அவர் கூறினார்``, என்று ராஜ் பகதூர் என்ற இந்தியப் பெயரால் அறியப்படும் வாங் சி, தனது பலமாக மாறுபட்டு தொனிக்கும் இந்தியில் கூறினார்.
நீண்ட சோகக் கதை
அவரைச் சுற்றி இந்தியாவில் பிறந்த அவரது மூன்று குழந்தைகளும் உட்கார்ந்து அவரை தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
வாங்கின் கதை நீண்ட, சோகமான ஒரு கதை.
ஷான்க்ஸியில் நான்கு சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகளுடன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நில அளவை படிப்பு முடித்து, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் 1960ம் ஆண்டு சேர்ந்தார்.
சீன ராணுவத்துக்கு தேவைப்படும் சாலைகளைப் போடும் பணியில் தான் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகக் கூறும் அவர், தவறுதலாக இந்திய நிலப்பரப்பில் 1963ம் ஆண்டு நுழைந்தபோது பிடிபட்டதாகக் கூறுகிறார்.
``நான் என் முகாமிலிருந்து ஒரு நடை பயிற்சிக்காக சென்றிருந்தபோது, வழி தவறிவிட்டேன். ஒரு செஞ்சிலுவை சங்க வாகனம் ஒன்றை பார்த்தேன்; அவர்களிடம் எனக்கு உதவச் சொன்னேன். அவர்கள் என்னை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர்``, என்கிறார் அவர்.
ஏழு ஆண்டுகள் இந்தியச் சிறைகளில்
இந்திய அதிகாரிகளோ, வாங் வேண்டுமென்றே இந்தியாவுக்குள் ஊடுருவியதாகவும்,தான் இருந்த இடம் குறித்து ``தவறான பின்னணி மற்றும் சூழ்நிலைகளை`` அதிகாரிகளுக்கு சொன்னதாகவும் கூறினர்.
அடுத்த ஏழாண்டுகளை வாங் பல்வேறு சிறைகளில் கழித்தார்.
பின்னர் 1969ல்தான் ஒரு நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
போலிசார் அவரை டிரோடி கிராமத்துக்குக் கொண்டு சென்றனர். அது தொலை தூரத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம்.
அதிலிருந்து, வாங் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
வாங் ஒரு போர்க்கைதியா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் அவருக்கு அதிகார பூர்வ இந்திய ஆவணங்களோ அல்லது குடியுரிமையோ மறுக்கப்பட்டிருக்கிறது.
அவர் மீண்டும் சீனா திரும்பவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
அவர் சீனா திரும்பவேண்டுமென்றால், இந்தியாவிலிருந்து வெளியேற ஒரு ஆவணம் தரப்படவேண்டும்.
அரசின் பாராமுகம், மனவலியில் வாழ்க்கை
மூத்த உள்ளூர் அதிகாரியான பாரத் யாதவ், இவரது விசயத்தில் ``குறைபாடுகள் அல்லது ஆர்வக் குறைவு`` காட்டப்பட்டிருக்கிறது என்று ஒப்புக்கொண்டார்.
``அவர் நடவடிக்கைகள் மீது சந்தேகங்கள் ஏதும் இல்லை. அவர் நாடு திரும்ப விரும்பினால், அவருக்கு உதவ முயல்வோம்`` என்றார் அவர்.
அவருக்கு சீனக் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) ஒன்றை 2013ம் ஆண்டில் பெற்றுத் தந்திருக்கிறது இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம்.
அவரது பிரச்சனை பற்றி தங்களுக்குத் தெரிந்திருப்பதாக தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை.
வாங் நீண்ட காலமாக மன வலியுடன் காத்திருக்கிறார்.
வலுக்கட்டாய மாற்றங்கள்
மொழியோ, உணவோ அல்லது பெரிய அளவில் மாறுபட்ட சமூகம் என்று எல்லா விஷயங்களிலும் ஒவ்வொரு படியிலும் வாங் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.
``நான் முதலில் ஒரு மாவு மில்லில் வேலை செய்யத் தொடங்கினேன். குடும்பத்தினரை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் நான் இரவில் எல்லாம் அழுதிருக்கிறேன். என் அம்மாவைப் பார்க்க ஏங்கியிருக்கிறேன்``, என்றார் அவர்.
``என்ன ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்று நினைத்திருக்கிறேன்``.
மொழி புரியாத மண்ணில் தி்ருமண பந்தம்
தனது ``நண்பர்களின் அழுத்தத்தால்`` தான் 1975ல் சுசீலா என்ற உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார் வாங்.
சுசிலா பிபிசியிடம் பேசுகையில் `` ஒரு அந்நியருக்கு என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்களே என்று என் பெற்றோர் மீது கடும் கோபத்தில் இருந்தேன். அவரது மொழியைப் புரிந்துகொள்வது எனக்கு சிரமமாக இருந்தது. அவரை ஒரு சில மாதங்கள் சகித்துக் கொண்டேன். பின்னர் அவரை எனக்குப் பழகிவிட்டது``, என்கிறார்.
’போலிசாரிடம் அடி உதை’
ஏதாவது வியாபாரம் செய்யலாமா என்று வாங் நினைத்தாலும், சட்டபூர்வமாக சரியாக அவரது நிலை அங்கீகரிக்கப்படாததால், போலிசாரிடமிருந்து பல பிரச்சனைகள் வந்தன.
``போலிசுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை என்பதால், வாங் பல முறை போலிசிடம் அடிவாங்கியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் ஒரு நேர்மையானவர்``, என்கிறார் பல ஆண்டுகள் அவரது அண்டை வீட்டில் இருந்த பி.பி.சிங்
``அவர் எப்போதும் சீனாவில் உள்ள அவரது வீட்டைப் பற்றி பேசுவார். அவரது குடும்பம் மிக வறிய நிலையில் வாழ்ந்தது. இடைவிடாமல் பல மைல்கள் சைக்கிளில் அவர் செல்வார்``, என்கிறார் மற்றொரு அண்டை வீட்டுக்காரரான, ஜெயந்தி லால் வகேலா.
சீனாவில் தனது குடும்பத்தாருக்கு வாங் பல கடிதங்கள் எழுதியும் அங்கிருந்து அவருக்கு முதல் பதில் கடிதம் 1980களில்தான் கிடைத்தது.
குடும்பப் படங்களை அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.
தாயைப் பார்க்க முடியாத சோகம்
கடந்த 2002ல் தனது அம்மாவுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக அவர் பேசினார்.
``தனது அந்திமக் காலம் நெருங்கிவிட்டதால், என்னைப் பார்க்கவேண்டுமென்று தான் விரும்புவதாக அம்மா என்னிடம் சொன்னார். நான் திரும்ப வர முயன்று கொண்டிருக்கிறேன் என்று அம்மாவிடம் சொன்னேன். நான் இந்தியாவிலிருந்து வெளியேற ஆவணங்கள் வேண்டுமென்று அதிகாரத்தில் உள்ள எல்லோரிடமும் எழுதிப் பார்த்துவிட்டேன். ஒன்றும் நடக்கவில்லை``, என்கிறார் வாங்.
அவரது அம்மா 2006ல் இறந்துவிட்டார்.
வாங்கின் சகோதரர் மகன் 2009ல் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணியாக வந்தபோது அவரை சந்தித்தார்.
அவர்தான் வாங் சீன கடவுச் சீட்டு பெறத் தேவையான சில ஆவணங்களைப் பெற உதவினார்.
இனி என்ன ?
வாங் சீனா செல்ல முடியுமா என்பதும், சீனா சென்றால் அவர் இந்தியா திரும்ப விரும்புவாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
``என் குடும்பம் இங்குதான் இருக்கிறது. நான் எங்கு செல்வேன்?`` என்று தன் மடியில் இருக்கும் பேத்தியுடன் விளையாடிக்கொண்டே சொல்கிறார் வாங்.
சுசிலாவுக்கோ கவலை - ``அவர் திரும்ப வந்துவிடுவார் என்று நம்புகிறேன்``, என்கிறார் அவர்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்