You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்துக்கும், சீனாவுக்கும் என்ன தொடர்பு?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்திற்கு வருவதையொட்டி, அந்நகருக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்துப் பேசப்படுகிறது. உண்மையில் மாமல்லபுரம் என்ற இந்தப் பழங்கால நகரோடு சீனாவுக்கு நேரடித் தொடர்பு இருந்ததா?
சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்த பயணத்தின்போது சீன அதிபர் மாமல்லபுரத்தையும் சுற்றிப்பார்க்கவிருக்கிறார்.
இதையடுத்து, மாமல்லபுரத்திற்கும், சீனாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன. உண்மையிலேயே மாமல்லபுரத்திற்கும் சீனாவுக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கின்றனவா?
சங்க கால நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையின் பாடல் ஒன்றில் "நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்/ வாலுளைப் புரவியடு வடவளந் தரூஉம்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் வரும் 'நீர்பெயற்றெல்லை' என்ற வார்த்தை மாமல்லபுரத்தைக் குறிப்பதாகவே ரா. ராகவையங்கார் எழுதிய உரை கூறுகிறது. இதனை ஏற்றுக்கொண்டால், மாமல்லபுரம் பற்றிய குறிப்பு இடம்பெறும் முதல் பழங்காலப் பாடலாக இதனைக் கொள்ளலாம்.
சங்க காலத்தைச் சேர்ந்த பழங்கால நகரமாக மாமல்லபுரத்தைக் கருதுவதற்கு தொல்லியல் ஆதாரங்களாக அங்கிருந்து சங்ககால நாணயங்கள், முதுமக்கள் தாழி போன்றவையும் கிடைத்துள்ளன.
"சூ யின் ஹன் சூ என்ற சீன நூல் காஞ்சிபுரத்தை ஹூவாங்சூ என்று குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் அவர்களது தலைநகரமாக விளங்கியது. அந்த காலகட்டத்தில் மாமல்லபுரம்தான் துறைமுக நகரமாக இருந்திருக்க வேண்டும்" என்கிறார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் வருகைதரு பேராசிரியரான சு. ராஜவேலு.
சீனப் பயணியான யுவாங் சுவாங் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை வந்தடைந்தார். Si-Yu-Ki: Buddhist Records of the Western World என்ற அவரது புத்தகம் இந்தப் பயணத்தைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அவர் கப்பலில் வந்து இறங்கி, படகு வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்ததாகவும் அவர் வந்திறங்கிய இடம் மாமல்லபுரக் கடற்கரையாக இருக்கலாம் என்கிறார் ராஜவேலு.
யுவான் சுவாங் மாமல்லபுரம் வந்திறங்கியபோது அங்கிருந்த குன்றுகள் சிற்பமாக மாறியிருக்கவில்லையென்று கூறும் ராஜவேலு, அவருடைய குறிப்புகளில் பரதவர் குடியிருப்பு, அந்தணர் குடியிருப்பு, சிற்பங்களில்லாத குன்று ஆகியவற்றைப் பற்றிக் கூறியிருப்பதோடு, பாம்பில் சயனம் செய்யும் கடவுளின் சிலை பற்றியும் இருந்ததாகக் கூறுகிறார் ராஜவேலு. அது தற்போதைய தலசயனப் பெருமாளைத்தான் குறிக்கிறது என்கிறார் அவர்.
சீனாவில் பிரபலமான செலடான் எனப்படும் மட்கலன்களின் ஓடுகள், தமிழக கடற்கரை நெடுகவே கிடைத்துள்ளன. மாமல்லபுரத்திலும் அத்தகைய ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும், நீலகண்ட சாஸ்திரியின் Foreign Notices Of South India சீனாவுக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே காஞ்சிபுரத்திற்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததாகக் கூறுகிறார் நீலகண்ட சாஸ்திரி.
மேலும் பல்லவ மன்னனான ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) கி.பி. 720ல் சீனாவுக்குத் தூதர்களை அனுப்பி, அரேபியர்களையும் திபத்தியர்களையும் எதிர்கொள்ள உதவியாக யானைப் படையையும் குதிரைப் படையையும் சீனச் சக்கரவர்த்திக்கு அனுப்ப விரும்பியது குறித்து தெரிவித்ததை இந்த நூல் கூறுகிறது.
பல்லவப் பேரரசு வீழ்ந்த பிறகு, பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையில் தொடர்புகள் இருந்தன என்றாலும், அவை காஞ்சியையோ மாமல்லபுரத்தையோ மையமாகக் கொண்டிருக்கவில்லை.
சமீபத்திய தொடர்பு
இதற்குப் பிறகு, சீனாவுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையிலான தொடர்பு 20ஆம் நூற்றாண்டில்தான் பதிவாகியிருக்கிறது. மா சேதுங் சீன அதிபராக இருந்தபோது சீனாவின் பிரதமராக (ப்ரீமியர்) இருந்த சூ என்லாய், 1956ல் மாமல்லபுரத்திற்கு வருகைதந்தார். அப்போது அவர் சீனாவின் வெளியுறவுத் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.
1956 டிசம்பர் ஐந்தாம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சூ என்லாயை அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா வரவேற்றார். அதற்கு அடுத்த நாள், டிசம்பர் 6ஆம் தேதி அவர் மாமல்லபுரத்தைப் பார்வையிட்டதோடு சர்வதேச விவகாரங்கள் குறித்து ஊடகத்தினரிடமும் பேசினார்.
அதன் பிறகு, சென்னையில் பிரபலமாக விளங்கிய திரைப்பட ஸ்டுடியோவான ஜெமினி ஸ்டுடியோவைப் பார்வையிட்ட சூ என்லாய், பத்மினி நடிக்க இந்தியிலும் தமிழிலும் எடுக்கப்பட்டுவந்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் பார்வையிட்டார். இதற்குப் பிறகு, ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையான இன்டகரல் கோச் ஃபேக்டரியையும் பார்வையிட்டார். ராஜ்பவனில் ஆளுநர் அவருக்கு விருந்தளித்தார். டிசம்பர் 7ஆம் தேதியன்று சூ என்லாய், சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்குப் பிறகு, குறிப்பிடத்தக்க வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு விஜயம் செய்ததில்லை. இப்போது ஷி ஜின்பிங் வருகையின் மூலம் மாமல்லபுரம் மீண்டும் ராஜதந்திர வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
''நான் ஏன் தமிழ் கற்றேன்"? - சீனப் பெண் நிறைமதியுடன் பிரத்யேக நேர்காணல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்