You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: தமிழகத்தில் தொடரும் போராட்டம்
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என மாநிலம் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்த தடையை அவசர சட்டம் ஒன்றின் மூலம் தமிழக அரசு நீக்கி உள்ளது.
மேலும், நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முதல்வரே தொடங்கி வைப்பதாக தெரிவித்திருப்பதால் அங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
அலங்காநல்லூர் மட்டுமின்றி அவனியாபுரம், பாலமேடு மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மும்முரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுக்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈடுபட்டுள்ளோர் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் இந்த அவசர சட்டம் குறித்து பிபிசி தமிழ் நடத்திய முகநூல் காணொளியில் பொதுமக்கள் பலர் கருத்து கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றும் கூறினர்.
சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்பட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். ஆனால், அதனை அவர்கள் ஏற்காததால் ஆட்சியர் திரும்பிச் சென்றார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்