கடலில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள்

கடற்கரையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, கடற்கரையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

உலகில் உள்ள பெருங்கடல்களில் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக புதிதாக வந்துள்ள சர்வதேச ஆய்வு தெரிவித்துள்ளது. இது முந்தைய கணிப்பை விட மிகவும் அதிகமாகும்.

பூமத்தியரேகைக்கு அடுத்து இருக்கும் ஐந்து கடல் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடல் நீரோட்டம் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் இப்பகுதிகளுக்கு அதிக அளவில் அடித்து வரப்படுகிறது. பின்பு அவை நீரோட்டம் காரணமாகவும் கடல்நீரின் அழுத்தத்தாலும் உடைந்து நொறுங்கி சிறிய துகள்களாக மாறுகின்றன.

மொத்தக் கழிவுகளில் 90 சதவீதம் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்துகள்களாக இருக்கின்றன. இவை மீன்களாலும் மற்ற கடல்வாழ் உயிரினங்களாலும் உண்ணப்படுகின்றன.

இந்த ஆய்வின் முடிவு குறித்து அறிவியல் சஞ்சிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள ஆய்வாளர் மார்கஸ் எரிக்சன், கடலில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குடைகள், கழிப்பறை இருக்கைகள் என பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளம் இருப்பதாகவும், பெரிய பல்துறை அங்காடிகள் கடலில் ஒன்றாக மிதப்பது போல காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.