ஜோசப் ஸ்டாலினை எதிர்த்த 13 வயது சிறுவர்கள் என்ன ஆனார்கள்?

    • எழுதியவர், ஆண்ட்ரே ஜாகரோவ் மற்றும் கேடரினா கிங்குலோவா
    • பதவி, பிபிசி உலக சேவை

1953 மார்ச் 5 அன்று சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்தபோது, முழு சோவியத் யூனியனும் துக்கத்தில் மூழ்கியது போலத் தோன்றியது. இந்தத் துயரத்திற்குப் பின்னால், கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்திலும், வறுமையிலும் மடிய காரணமாக இருந்த தலைவர் என்ற கலவையான பார்வையும் இருந்தன.

ஆனால் ஸ்டாலினின் அதிகாரத்தை ஒருமுறை மூன்று சிறார்கள் எதிர்த்தனர்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர் ஒரு கேள்வி கேட்க முடியாத அதிகார மையத்தை முன்னிறுத்த முயன்றார். மேலும் எதிர்க் குரல்களை மிருகத்தனமாக ஒடுக்கினார்.

அதையும் மீறி சோவியத் யூனியனில் போராட்டங்கள் நடந்தன. அவை அடிக்கடியோ அல்லது பெரிய அளவிலோ நடக்கவில்லை. ஆனால் சர்வாதிகார ஆட்சியுடன் பலர் உடன்படவில்லை என்பதை அவை சுட்டிக்காட்டின.

ரஷ்யாவின் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளைப் பிரிக்கும் மலைப்பிரதேசமான யூரல்ஸில் உள்ள தொழில்துறை நகரமான செலியாபின்ஸ்க்கில் அத்தகைய ஒரு நிகழ்வு நடந்தது. இந்நகரம் ஒரு டிராக்டர் கட்டும் ஆலையின் தாயகமாக இருந்தது.

1946ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒரு நாள், மூன்று இளைஞர்கள் நகரின் மையப் பகுதியில் போஸ்டர்களை வைக்கத் தொடங்கினர். சோர்வுடன் உணவுக்காக வரிசையில் நின்ற உள்ளூர்வாசிகள் அவற்றைக் கவனித்தனர்.

அவர்களுக்கு எந்தப் பசையும் இல்லாததால், தண்ணீரில் நனைந்த ரொட்டியைப் பயன்படுத்தி, தங்கள் பள்ளி நோட்டுப் புத்தகங்களிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதத் தாள்களை சுவர்கள் மற்றும் விளக்கு கம்பங்களில் ஒட்டினார்கள்.

"பசியால் வாடும் மக்களே போராடுங்கள்!" என்று ஒரு பள்ளிக் குழந்தையின் கிறுக்கல் அதில் இருந்தது.

வரிசையில் நின்ற ஒரு பெண் அந்த போஸ்டரைப் படித்தார். "புத்திசாலியான ஒருவன் இதை எழுதியுள்ளான்," என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறுவர்கள், அலெக்சாண்டர் பாலியாக்கோவ்(ஷூரா என்று அறியப்படுகிறார்), மிகைல் உல்மான் (மிஷா) மற்றும் யெவ்ஜெனி கெர்ஷோவிச்(ஜென்யா). அவர்கள் அனைவருக்கும் அப்போது 13 வயதே ஆகியிருந்தது. ஷூரா பாலியாக்கோவ் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார்.

அவரது குடும்பம் யுக்ரேனில் உள்ள கார்கிவ் நகரைச் சேர்ந்தது. பின்னாளில் அவர் தனது தாய், பாட்டி, அவரது சகோதரி மற்றும் அவரது அத்தை ஆகியோருடன் யூரல்ஸுக்கு வெளியேற்றப்பட்டார்.

போரால் வெளியேற்றப்பட்டவர்களைத் தங்க வைக்க பயன்படுத்தும் அந்நகரத்தின் ஒரு சிறிய அறையில் அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்களும் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஷூராவின் தந்தை போரில் கொல்லப்பட்டார். அவரது தாய் ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.

ஜென்யா கெர்ஷோவிச்சும் வேறு ஒரு காரணத்திற்காக அப்பா இல்லாமல் வளர்ந்து வந்தார். அவர் லெனின்கிராடில் பிறந்தவர். 1934ஆம் ஆண்டில் அவரது தந்தை அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டமிட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர் என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பின்னர் எந்தத் தடயமும் இல்லாமல் காணாமல் போனார்.

தனது இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க, ஜென்யாவின் அம்மா செலியாபின்ஸ்க்கிற்கு குடிபெயர்ந்தார். அவரது கணவர் "மக்களின் எதிரியாக" அறியப்பட்ட போதிலும், ஜென்யாவின் அம்மாவுக்கு ஓர் இடைநிலைப் பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தது.

ஜென்யாவின் தந்தை போருக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டார். ஆனால் அவரது மரணம் குறித்து குடும்பத்தினர் நீண்ட காலத்திற்குப் பிறகே அறிந்து கொண்டனர்.

உல்மான், ஜென்யாவை போலவே, மிகைலும் லெனின்கிராட்டை சேர்ந்தவர். அவரது பெற்றோர் இருவரும் போரின் தொடக்கத்தில் உள்ளூர் டிராக்டர் ஆலையில் வேலை செய்ய செலியாபின்ஸ்க்கிற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் அந்த ஆலை விவசாய உபகரணங்கள் அல்லாது பீரங்கிகளை தயாரித்துக் கொண்டிருந்தது.

செலியாபின்ஸ்க்கில் மிஷாவின் குடும்பம் நெரிசலான சூழலில் வாழ்ந்து வந்தது. ஒரு அந்நியருடன் அவர்களின் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தனர். அந்த அறை ஒரு சிறிய துணியால் பிரிக்கப்பட்டு இருந்தது.

அந்த மூன்று சிறுவர்களும் ஒரே பள்ளியில் படித்தனர். உல்மானும் கெர்ஷோவிச்சும் வகுப்பறையில் ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர்.

13 வயதே ஆன நிலையிலும், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் படைப்புகளை பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் படித்துக் கொண்டிருந்தனர். அநீதியை ஏற்றுக்கொள்வது தவறு என்பதை இப்புத்தகங்கள் மூலம் கற்றுக் கொண்டனர்.

1870-களில் ஒரு ஃபிரெஞ்சு புரட்சியாளரால் எழுதப்பட்ட தொழிலாளர் இயக்கத்தின் கீதமான "தி இன்டர்நேஷனல்" பாடல் வரிகளை அவர்கள் கவனமாக படித்துக் கொண்டிருந்தனர், இது பின்னர் சமூக அநீதிக்கு எதிராகப் போராடும் அனைவராலும் பகிரப்பட்டது.

இப்பாடல் 1922 முதல் 1944 வரை சோவியத் யூனியனின் தேசிய கீதமாக ஒலித்தது. சமூக சமத்துவமின்மைக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு மக்களை அழைக்கும் இந்த பாடல் வரிகள் சோவியத் யூனியனில் தடை செய்யப்படவில்லை என்பதை சிறுவர்களால் நம்ப முடியவில்லை.

சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் போருக்குப் பிந்தைய பட்டினியால் பாதிக்கப்பட்டு, கடுமையான பொருளாதார கஷ்டங்களை எதிர்கொண்டனர்.

1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், போர் முடிவடையும் தருவாயில் யால்டா மாநாட்டில் கூடிய அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியனின் தலைவர்கள், ஹிட்லரை தூக்கிலிட என்ன வழிமுறையைப் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்த நேரம் குறித்து சோவியத் யூனியனில் ஒரு பிரபலமான நகைச்சுவை இருந்தது.

அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சில் ஹிட்லரை தூக்கிலிட பரிந்துரைத்தார். அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மின்சார நாற்காலியை பரிந்துரைத்தார். சோவியத்தின் தலைவரான ஸ்டாலின், ஹிட்லரை சோவியத்தின் ரேஷன் உணவுப் பொருட்கள் சாப்பிடுவோர் வரிசையில் சேர்ப்பதே மிகவும் பயனுள்ள வழியாக இருக்கும் என்று நம்பினார். மற்ற இருவரும் இது மிகவும் கொடூரமான தண்டனையாக இருக்கும் என்று கூறினர். இது தான் அந்த நகைச்சுவையின் பஞ்ச் லைன்.

ஆனால் சோவியத் யூனியனில் உள்ள அனைவரும் சொற்பமான ரேஷன் பொருட்களைக் கொண்டு வாழ நிர்பந்திக்கப்படவில்லை. மூன்று சிறுவர்களுக்கும் ஒரு வகுப்புத் தோழன் இருந்தார், அவரது தந்தை உள்ளூர் ஆலையின் இயக்குநராக இருந்தார்.

வகுப்புத் தோழரின் வாழ்க்கை முறை அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவரை ஒர் ஓட்டுநர் பள்ளிக்கு அழைத்து வருவார். அவர் வீட்டிலிருந்து கொண்டு வரும் தனது மதிய உணவு பிற சிறுவர்களை விட சிறப்பானதாக இருந்தது. மேலும் அவரது பிறந்த நாள் விருந்தில் சிறுவர்கள் சோடாவை சுவைக்க முடிந்தது. ஒரு சுவரில் கட்டப்பட்ட திரையில் சார்லி சாப்ளினின் திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது.

அந்த இயக்குநரின் குடும்பம் ஒர் அந்நியருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறையில் வசிக்கவில்லை. ஆனால் விசாலமான, வசதியான இடத்தில் வாழ்ந்து வந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதெல்லாம் ஏதோ விசித்திரக் கதை போல அந்த சிறுவர்களுக்கு இருந்தது.

செலியாபின்ஸ்க் ஆலையில் தொழிலாளர்களின் வாழ்க்கை போருக்கு முன்பே கடினமாக இருந்தது. பலர் அடித்தளம் மற்றும் பதுங்கு குழிகளில் வாழ்ந்தனர். போர் தொடங்கியவுடன், செலியாபின்ஸ்க் நகருக்கு ரஷ்யாவின் மேற்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

1943 டிசம்பரில் ஆலை நிர்வாகம் 300 தொழிலாளர்கள் வரை வேறு எங்கும் செல்ல வழியின்றி, ஆலையிலேயே தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தது. சிலர் குளிர்கால ஆடைகள் இல்லை என்று கூறினர், மற்றவர்கள் காலணிகள் இல்லை என்றனர். அவர்களால் ஆலையை விட்டு வெளியேற முடியவில்லை.

போரின் போது மக்கள் கஷ்டங்களை சகித்துக் கொள்ளத் தயாராக இருந்த போதிலும், அது முடிவடைந்தபோது, அவர்கள் பொறுமை இழந்தனர். நாஜி ஜெர்மனியின் தோல்வியைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாலும், செலியாபின்ஸ்க்கில் உள்ள பலர் இழிநிலையில் தொடர்ச்சியாக வாழும் அவமானத்தால் சோர்வடைந்தனர்.

ஈரமான அடித்தளம், கசியும் கூரைகள், கெட்டில்களில் செய்யப்பட்ட சூப், நான்கு ஆண்டுகளாக சோப்பு இல்லாதது மற்றும் பல பிரச்சினைகள் குறித்து பெரியவர்கள் புகார் கூறுவதை மூன்று சிறுவர்களும் கேட்டனர். அவர்கள் கடுமையான வறுமையை அனுபவித்ததால், இழப்பதற்கு ஏதுமில்லை என்று உணர்ந்தனர்.

தாங்கள் கண்ட அநீதியின் மீதும், சோவியத் பிரச்சாரத்தில் ஒரு சோசலிச நாட்டில் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது என்று கூறுவதற்கும், தங்கள் கண்களால் பார்க்க முடிந்ததற்கும் இடையிலான வேறுபாட்டால் அவர்கள் மேலும் கோபமடைந்தனர்.

1946 ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் அந்த சிறுவர்கள் தங்கள் பள்ளி நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை கிழித்து எழுதினார்கள்.

"தோழர்களே, தொழிலாளர்களே, சுற்றிப் பாருங்கள்! உங்கள் பிரச்னைகளுக்கு யுத்தம் தான் காரணம் என அரசாங்கம் விளக்கிக் கொண்டிருந்தது.

ஆனால் யுத்தம் முடிந்துவிட்டது. உங்கள் நிலைமைகள் மேம்பட்டுள்ளதா? இல்லை!

அரசு உங்களுக்கு என்ன கொடுத்தது? ஒன்றுமில்லை!

உங்கள் குழந்தைகள் பசியுடன் இருக்கிறார்கள், ஆனால் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தைப் பற்றிய கதைகள் அவர்களுக்கு சொல்லப்படுகின்றன.

தோழர்களே, சுற்றிப் பாருங்கள், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!"

ஆரம்பத்தில் சிறுவர்கள் இரவில் மட்டுமே தங்கள் போஸ்டர்களை ஒட்டினார். ஆனால் சில நாட்களில் அவர்கள் மிகவும் தைரியமாக மாறினர், விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தினர். அவர்கள் தங்கள் வகுப்புத் தோழர்கள் சிலரையும் உதவிக்கு அழைத்தனர்.

மிகவும் அச்சுறுத்தும் NKVD பாதுகாப்பு படையை கண்டு அஞ்சினர். இந்த படையின் பெயர் பின்னாளில் KGB என்றும், இப்போது FSB என்றும் உள்ளது.

இவர்களுக்கு இந்த சிறுவர்கள் பற்றிய செய்திகள் விரைவாக சென்று சேர்ந்தன. விரைவிலேயே அரசாங்கத்திற்கு எதிரான போஸ்டர்கள் பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

பள்ளிகள், குற்றவாளிகளை அடையாளம் காண ஒவ்வொரு மாணவரின் கையெழுத்தையும் சரிபார்த்தன. செலியாபின்ஸ்க் முழுவதும் உள்ள குழந்தைகள் 'தோழர்' மற்றும் 'மகிழ்ச்சியான குழந்தை பருவம்' போன்ற சொற்களை எழுத வைக்கப்பட்டனர்.

யெவ்ஜெனி கெர்ஷோவிச் முதலில் கைது செய்யப்பட்டார். பின்னர் அலெக்சாண்டர் பாலியாகோவ், அதைத் தொடர்ந்து மே 1946 இறுதியில் மிகைல் உல்மான் என வரிசையாக கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்தன.

சிறுவர்கள், பாதுகாப்புப் படையினரின் இடைவிடாத விசாரணையை எதிர்கொண்டனர். பாதுகாப்புப் படையினரின் அவர்களை நாஜி அனுதாபிகள் என்று சொல்லி தண்டிக்க முயன்றனர். "தத்துவப் புரிதலுள்ள மார்க்சிஸ்டுகள் எப்படி நாஜிக்களாக இருக்க முடியும்?" என்று அந்த சிறார்கள் இதற்கு கோபமடைந்தனர்.

கெர்ஷோவிச் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் ஆகஸ்ட் 1946இல் விசாரிக்கப்பட்டு சோவியத் எதிர்ப்பு பிரச்சாரத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறார் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிரிமினல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற சிறார் கைதிகளின் தொடர்ச்சியான அடிதடிகள் மற்றும் துன்புறுத்தல்களுடன் அந்த கொடூரமான காலத்தை கழித்தது குறித்து அவர்கள் பின்னர் நினைவுகூர்ந்தனர்.

உல்மான் அதிர்ஷ்டசாலி, கைது செய்யப்பட்டபோது அவருக்கு 14 வயது நிறைவடையாததால், அவர் தண்டனையிலிருந்து முற்றிலுமாக தப்பினார். செலியாபின்ஸ்க் பாதுகாப்பு படையிடமிருந்து விலகி இருக்க அவரது பெற்றோர் விரைவாக லெனின்கிராடுக்குத் திரும்பினர்.

1946ஆம் ஆண்டின் இறுதியில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு கெர்ஷோவிச் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோரும் ஒப்பீட்டளவில் எளிதாக விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் வரலாற்றில் மிகவும் சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் வாழ்ந்த போதிலும், சமூக அநீதிக்கு எதிராக போராடவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கத்தை நிர்பந்திக்கவும் முடியும் என்று நம்பிய இளம் கிளர்ச்சியாளர்களின் ஆர்வத்தைக் கண்டு பாதுகாப்பு படையும், நீதிபதிகளும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.

பிற்காலத்தில் உல்மான் மற்றும் அலெக்சாண்டர் இருவரும் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அலெக்சாண்டர் தனது மனைவியுடன் வசிக்கிறார். அவரிடம் பிபிசியால் பேச முடிந்தது.

உல்மான் பின்னர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார், அங்கு அவர் 2021இல் இறந்தார்.

1940களின் பிற்பகுதியில் சோவியத் எதிர்ப்பு சார்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யெவ்ஜெனி கெர்ஷோவிச் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் லட்சக்கணக்கானவர்களுடன் சேர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்பு அவர் 2010களில் இறந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: