ஜோசப் ஸ்டாலின்: சோவியத் சர்வாதிகாரி இறுதி நாட்களில் டாக்டரை வரவழைக்க தாமதம் ஆனது ஏன்?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 50ஆவது கட்டுரை இது.)

1952 டிசம்பர் 21 அன்று ஸ்டாலின், 'பில்ஸ்னாயா' பண்ணை வீட்டில் தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார். அதில் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கிராமபோனில் நாட்டுப்புற இசையும் நாட்டியப் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. ஸ்டாலினே அந்த இசைதட்டுகளை தேர்வு செய்தார். இதையெல்லாம் விரும்பாத குறைந்தபட்சம் இரண்டு விருந்தினர்கள் அங்கே இருந்தனர்.

அவர்களில் ஒருவர் நிகிதா குருஷேவ். அவர் நடனத்தை வெறுத்தார். அவரை கிண்டல் செய்ய, உக்ரைனின் 'கோபக்' நடனத்தை ஆடுமாறு ஸ்டாலின் அவரிடம் சொன்னார். ஸ்டாலினுக்கு நடன அசைவுகளில் தேர்ச்சி இல்லை. எனவே நடனம் தெரியாத மற்றவர்களை நடனமாடச்சொல்லி அவர்களை அசெளகரியப்படுத்தி மகிழ்வார்.

அந்த மாலைப் பொழுதை விரும்பாத மற்றொருவர், ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அல்லிலுயவா.

அந்த நேரத்தில் அவருக்கு 26 வயது. ஆனால் அதற்குள் அவருக்கு இரண்டு முறை விவாகரத்து ஆகியிருந்தது. யாரேனும் ஏதாவது செய்யும்படி கட்டளையிடுவதை ஸ்வெட்லானாவால் பொறுத்துக்கொள்ளமுடியாது.

அவருடன் நடனமாட ஸ்டாலின் விருப்பம் தெரிவித்த போது, ஸ்வெட்லானாஅதை மறுத்துவிட்டார்.

ஸ்வெட்லானாவின் முடியைப் பிடித்த ஸ்டாலின்

இந்த மறுப்பை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் மிகவும் கோபமடைந்தார்.

அவர் தனது மகளின் தலைமுடியைப் பிடித்து அவளை முன்னோக்கி இழுத்தார். அவமானத்தால் ஸ்வெட்லானாவின் முகம் சிவந்து கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"ஸ்வெட்லானாவுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ளவில்லை. உண்மையில் அது ஸ்வெட்லானாவின் மீது பாசம் காட்டும் விதம். ஆனால் அவர் அட்டூழியம் செய்வதாக மற்றவர்கள் கருதினர். இதுபோன்ற செயல்களை ஸ்டாலின் அடிக்கடி செய்து வந்தார்," என்று நிகிதா குருஷேவ் தனது சுயசரிதையான 'குருஷேவ் ரிமம்பர்ஸ்' இல் எழுதியுள்ளார்.

ஸ்டாலினின் பண்ணை இல்லத்தில் விருந்து

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 28 அன்று ஸ்டாலின் தனது நான்கு மூத்த சகாக்களான ஜார்ஜி மெலன்கோவ், பேரியா, குருஷேவ் மற்றும் புல்கானின் ஆகியோரை ஒரு படம் பார்ப்பதற்காக, தனது பண்ணை வீட்டிற்கு அழைத்தார்.

படம் பார்த்தபிறகு அனைவருக்கும் நல்ல உணவும், மதுவும் பரிமாறப்பட்டன.

ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் எதையும் கட்சித் தலைவர்கள் செய்யவில்லை. மார்ச் 1ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பார்ட்டி முடிந்தது.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்போது யாருக்குமே தெரியவில்லை.

'நாங்கள் அங்கிருந்து புறப்படும்போது ஸ்டாலின் நன்றாகவே இருந்தார். அவர் எங்களை கேலி செய்தபடி இருந்தார். பலமுறை விரல்களால் என் வயிற்றில் குத்தினார். அவர் வேண்டுமென்றே என்னை யுக்ரேனிய உச்சரிப்பில் 'மிகிதா' என்று அழைத்தார்," என்று குருஷேவ் குறிப்பிட்டார். .

அறைக்கு வரவேண்டாம் என்று பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தல்

பின்னர் தான் தூங்கப் போவதாக ஸ்டாலின் பாதுகாவலர்களிடம் கூறினார்.

'தானே அழைக்கும் வரை தனது அறைக்குள் நுழைய வேண்டாம் என்று ஸ்டாலின் எங்களிடம் கூறினார்' என்று அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பாவெல் லோஸ்காசேவ், அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ((Edward Radzinsky) எட்வார்ட் ராட்ஸின்ஸ்கையிடம் கூறினார்.

'மார்ச் 1 ஆம் தேதி முழுவதும் ஸ்டாலினின் அறையில் இருந்து எந்த சத்தமும் இல்லை. ஒவ்வொரு மெய்க்காப்பாளருக்கும் இரண்டு மணி நேர 'ஷிப்ட்' இருந்தது. அதன் பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு அவர் மீண்டும் பணிக்கு வருவார். காவலர்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் மந்தமாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது," என்று ஸ்டாலினின் மற்றொரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் ராபர்ட் சர்வீஸ் எழுதுகிறார்.

நாள் முழுவதும் அறையில் இருந்து சத்தம் இல்லை

ஸ்டாலின் காலையில் எழுந்ததும் எலுமிச்சைத் துண்டுடன் ஒரு கப் டீ கேட்பது வழக்கம்.

"ஸ்டாலின் நாள் முழுவதும் ஒரு கோப்பை தேநீர்கூட கேட்காததால் நாங்கள் அனைவரும் சிறிது கவலைப்பட்டோம்," என்று அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரான மார்ஷல் அலெக்சாண்டர் யோகோரோவ் பின்னர் தெரிவித்தார்.

தெர்மோஸில் வைத்திருந்த டீயை குடித்ததால் அவர் டீ கேட்கவில்லை என்று சிலர் நினைத்தனர்.

மாலை 6.30 மணியளவில் வீட்டின் விளக்குகள் போடப்பட்டன. ஆனால் அப்போதும் ஸ்டாலின் அறையை விட்டு வெளியே வரவில்லை.

அவர் சாப்பிட உணவும் கேட்கவில்லை, எதையும் செய்ய உத்தரவும் இடவில்லை.

இரவு 10 மணியளவில் மாஸ்கோவின் மத்திய குழு அலுவலகத்தில் இருந்து ஸ்டாலினுக்கு ஒரு பாக்கெட் வந்தது. காவலர்கள், தங்களுக்குள் விவாதித்த பிறகு, பாவெல் லோஷ்காச்சேவ் அந்த பாக்கெட்டுடன் ஸ்டாலினின் படுக்கையறைக்குச் செல்வார் என்று முடிவு செய்தனர்.

படுக்கையறைக்குள் நுழைந்த பாவெல் திகைத்துப் போனார்.

தரையில் விழுந்திருந்த ஸ்டாலின்

"ஸ்டாலின் தரையில் விழுந்திருந்தார். அவர் கை சற்று தூக்கியவாறு இருந்தது. அவர் முழுமையான மயக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் அவரால் எதுவும் பேச முடியவில்லை. பைஜாமாவில் சிறுநீர் கழித்திருந்தார். அருகில் 'பிராவ்தா' செய்தித்தாள் மற்றும் மினரல் வாட்டர் பாட்டில் இருந்தது. ஸ்டாலின் விளக்கை போட முயன்றபோது கீழே விழுந்திருக்க வேண்டும் என்று காவலர்கள் ஊகித்தனர்,"என்று ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் எட்வர்ட் ராட்ஜின்ஸ்கி எழுதுகிறார்.

இவ்வளவு நடந்திருந்தபோதிலும், டாக்டரை அழைக்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை.

மெய்க்காப்பாளர்கள் தொலைபேசியில் மாஸ்கோவில் இருந்த உள்துறை அமைச்சர் செர்ஜி இக்னாடியேவை தொடர்புகொண்டனர். இக்னாடியோவ், மெலன்கோவ் மற்றும் பேரியாவுக்குத் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பேரியா தனது பெண் நண்பர் ஒருவருடன் இருந்தார்.

ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றில் அவருக்கு இருந்த நோய் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று பேரியா உத்தரவிட்டதாக, வோல்கோகோனோவ் மற்றும் ராட்ஜின்ஸ்கி இருவரும் எழுதுகிறார்கள்.

இதற்கிடையில், ஸ்டாலினின் பண்ணைவீட்டில் இருந்தவர்கள்,மேலிடத்தின் அறிவுறுத்தல்களுக்காக காத்திருந்தனர். இதற்கு நடுவே, ஸ்டாலினை தரையில் இருந்து தூக்கி கட்டிலில் படுக்க வைத்து கப்பளிப்போர்வையால் போர்த்தியதுதான் அவர்கள் செய்த ஒரே செயல்.

சிறிது நேரம் கழித்து, சாப்பாட்டு அறையில் இருந்த மற்றொரு படுக்கைக்கு அவர்கள் ஸ்டாலினை மாற்றினர்.

பேரியா காவலர்களை வெளியே அனுப்பினார்

முதலில் பேரியாவும் மெலென்கோவும் அங்கு வந்தனர்.

'மெலன்கோவ் தனது காலணிகளைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டார். ஏனெனில் ஸ்டாலினின் அறையின் பளபளப்பான தரையில் காலணி சத்தம் கேட்டது. அவரும், பேரியாவும் ஸ்டாலினுக்கு அருகே சென்றபோது ஸ்டாலின் சத்தமாக குறட்டை விடத் தொடங்கினார். டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதிலாக பேரியா காவலர்களிடம்' ஸ்டாலின் நன்றாகத் தூங்குகிறார். நீங்கள் அனைவரும் அறையை விட்டு வெளியேறுங்கள். அவர் நிம்மதியாக தூங்கட்டும்' என்று கூறினார்," என்று டிமிட்ரி வோல்கோகோனோவ் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றான 'ஸ்டாலின் - ட்ரையம்ஃப் அண்ட் டிராஜெடி'யில் எழுதியுள்ளார்.

மருத்துவரை அழைப்பதில் தாமதம்

'எல்லா தலைவர்களும் மார்ச் 2 ஆம் தேதி காலை ஸ்டாலினின் பண்ணை வீட்டிற்கு வரத் தொடங்கினர். ஆனால் அதுவரையிலும் ஸ்டாலினைப் பார்க்க எந்த மருத்துவரும் அழைக்கப்படவில்லை' என்று குரு‌ஷேவ் தனது சுயசரிதையில் எழுதுகிறார்.

காலை 10 மணிக்கு ஸ்வெட்லானாவுக்கு செய்தி கிடைத்தது. அப்போது அவர் பிரெஞ்சு மொழி வகுப்பில் இருந்தார்.

'ஸ்டாலினின் உடல்நிலை வேண்டுமென்றே மோசமடைய அனுமதிக்கப்பட்டது என்ற சந்தேகத்திற்கு இது வலுவூட்டுகிறது. ஆனால், ஸ்டாலின் குணமடைந்துவிட்டால், தனக்கு உடல்நிலை சரியில்லாத போது ​​நாட்டின் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டதற்காக அவரின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவரது அரசியல் சகாக்கள் வேண்டுமென்றே முடிவெடுக்கத் தயங்கிருக்கலாம்," என்றும் ராபர்ட் சர்வீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பின்னால் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.

"1953-ல், ஸ்டாலின் பல முறை மயக்கமடைந்தார். மேலும் அவரது இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. அவர் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் கடைசி வரை அவர் தனது மருத்துவர்களை நம்பவில்லை. மேலும் அவர்களை தன் வீட்டிலிருந்து விலக்கி வைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்," என்று வோல்கோகோனோவ் எழுதுகிறார்.

ரத்த வாந்தி

இறுதியில் டாக்டர்கள் அங்கு சென்றபோது, ​​ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு 12 மணி நேரம் ஆகியிருந்தது.

ஸ்டாலினின் உடல் மீது சிறுநீர் கறை படிந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஸ்டாலினின் ஆடைகளை கழற்றி வினிகர் கரைசலில் சுத்தம் செய்தனர்.

அதே நேரம் ஸ்டாலின் ரத்த வாந்தி எடுத்தார். பின்னர் டாக்டர்கள் ஸ்டாலினின் நுரையீரலை எக்ஸ்ரே எடுத்தனர்.

'ஸ்டாலினின் மோசமான நிலையை மருத்துவர்கள் விரைவில் உணர்ந்தனர். அவரது உடலின் வலது பக்கம் முழுவதும் செயலிழந்திருந்தது. மதியத்திற்கு முன் ஸ்டாலினுக்கு எனிமா கொடுக்க அவர்கள் முயன்றனர். ஆனால் இதனால் பலன் கிடைப்பது கடினம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்," என்று ஜொனாதன் ப்ரெண்ட் மற்றும் விளாடிமிர் நௌமோவ் ஆகியோர் ஸ்டாலின்ஸ் டாக்டர்ஸ் ப்ளாட்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டாலின் தொடர்ந்து மூன்று நாட்கள் இதேபோல சுயநினைவின்றி இருந்தார்.

இதற்கிடையில் கட்சியின் இரண்டு தலைவர்கள் அவரது படுக்கைக்கு அருகில் தொடர்ந்து அமர்ந்திருந்தனர்.

பேரியா மற்றும் மெலென்கோவ் பகலிலும், குருஷேவ் மற்றும் புல்கானின், இரவிலும் அவரது படுக்கைக்கு அருகே இருந்தனர்.

ஸ்டாலினின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு என்னவேண்டுமானாலும் ஆகலாம் என்று மார்ச் 3ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர்.

முக்கிய தலைவர்களின் கூட்டம்

இதற்கிடையில், மார்ச் 4 ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்தனர். மோசமான செய்திக்கு தயாராக இருக்குமாறு மருத்துவர்கள் ஏற்கனவே அவர்களிடம் கூறிவிட்டனர்.

இந்தக் கூட்டத்தில் புல்கானின் தவிர, எல்லா தலைவர்களும் கலந்து கொண்டனர். (அந்த நேரத்தில் ஸ்டாலினின் அருகில் அவர் இருந்தார்.)

ஸ்டாலினின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மெலென்கோவ் கூறினார். மெலென்கோவ் ஸ்டாலினின் இடத்தில் உடனடியாக பொறுப்பேற்கவேண்டும் என்று பேரியா முன்மொழிந்தார். இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு கூட்டம் முடிந்தது.

ஆனால் ஸ்டாலின் இன்னும் காலமாகவில்லை. பிரிசிடியத்தின் எல்லா உறுப்பினர்களும் ஸ்டாலின் படுத்திருந்த பண்ணை விட்டை அடைந்தனர்.

ஸ்டாலின் கட்டிலில் குப்புற படுத்திருந்தார். ஸ்டாலினால் இனி எழுந்திருக்க முடியுமா என்று அவரது நெருங்கிய தோழர்கள் தங்கள் மனதிற்குள் நினைத்துக் கொண்டனர். பாதி சுயநினைவின்றி மரணத்தை நோக்கிச்சென்றுகொண்டிருந்தவர் மீதான அச்சம் அவர்களுக்கு அப்போதும் விலகியிருக்கவில்லை.

ஜொனாதன் ப்ரெண்ட் மற்றும் நௌமோவ் ஆகியோர் தங்களது 'ஸ்டாலின்ஸ் டாக்டர்ஸ் ப்ளாட்' புத்தகத்தில், 'மார்ச் 5 அன்று, ஸ்டாலின் மீண்டும் ரத்த வாந்தி எடுத்தார். அவரது வயிற்றுக்குள் ரத்தம் சேர ஆரம்பித்தது," என்று எழுதுகிறார்கள்.

ஸ்டாலினின் கடைசி நிமிடம்

இதற்கிடையில், ஸ்டாலினின் கையைப் பிடிப்பதன் மூலம் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற பேரியாவின் மீது அனைவரின் பார்வையும் இருந்தது.

ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அல்லிலுயவா பின்னர் தனது சுயசரிதையான 'டுவென்டி லெட்டர்ஸ் டு எ ஃப்ரெண்ட்' என்ற புத்தகத்தில், 'அவரது முகம் முற்றிலும் மாறிவிட்டது. அவருடைய உதடுகள் கருப்பாக மாறி முகம் அடையாளம் தெரியாமல் இருந்தது. கடைசி நேரத்தில் அவர் திடீரென்று கண்களைத் திறந்து அறையில் இருந்த அனைவரையும் பார்த்தார். யாரையோ காட்டி திட்டுவது போல் கையை உயர்த்தினார். அடுத்த நொடியே அவர் உயிர் பிரிந்தது,"என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது மணி காலை 9.50.

தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கதறி அழுதனர். குருஷேவ் ஸ்வெட்லானாவை கட்டியணைத்து தனது இரங்கலை தெரிவித்தார்.

ஸ்டாலினை கடைசியாகப் பார்க்க எல்லா ஊழியர்களும், மெய்க்காவலர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு தசாப்தங்களாக ஸ்டாலின் ரஷ்யாவின் மிக உயரிய தலைவராக கருதப்பட்டார்.

1924ல் லெனினின் உடலுக்கு செய்ததுபோலவே, ஸ்டாலினின் உடலுக்கும் செய்வது என்று சோவியத் தலைமை முடிவு செய்தது.

ஸ்டாலின் உடலை பாதுகாக்கும்விதமாக பதனிடல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

1953 மார்ச் 9 ஆம் தேதி நடந்த அவரது இறுதி நிகழ்வில் சீனப் பிரதமர் சூ என் லாய், கம்யூனிஸ்ட் தலைவர் பால்மிரோ டோக்லியாட்டி மற்றும் மான்ரிஸ் தோரெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலினின் பழைய எதிரிகளான வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பினர்.

கம்யூனிஸ்ட் நாடுகளின் செய்தித்தாள்கள் 'வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதர் இப்போது நம்மிடையே இல்லை' என்று எழுதின.

அதே நேரம் மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள், மனிதகுலத்திற்கு எதிரான ஸ்டாலினின் குற்றங்களை நினைவு கூர்ந்ததோடு கூடவே, சோவியத் யூனியனின் பொருளாதார மீட்சி மற்றும் ஹிட்லருக்கு எதிரான ரஷ்யாவின் வெற்றிக்கான பெருமை ஸ்டாலினையே சாரும் என்று எழுதின.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: