You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் ஆயாக்கள் இல்லம்: பிரிட்டிஷ் வரலாற்றில் மறக்கப்பட்ட இந்திய ஆயாக்களை நினைவுகூறும் புதிய முயற்சி
- எழுதியவர், ககன் சபர்வால்
- பதவி, தெற்காசிய புலம்பெயர்ந்தோர் செய்தியாளர், பிபிசி நியூஸ்
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் செல்வாக்குடனும் செழிப்பாகவும் இருந்த காலகட்டத்தில், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் இந்தியாவில் இருந்தும் ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்தும் அழைத்து வரப்பட்டார்கள்.
பிற்காலத்தில் இவர்கள் கைவிடப்பட்டு, தங்களுடையே தேவைகளை தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த ஒரு கட்டிடம் 'ப்ளூ ப்ளேக்' என்ற நீல நிறப் பட்டயம் மூலம் பெருமைப்படுத்தப்பட உள்ளது.
லண்டனில் உள்ள வரலாற்றில் முக்கியமானவர்களுடன் தொடர்புடைய கட்டடங்களுக்கு மரியாதை அளிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் திட்டம்தான் ப்ளூ ப்ளேக்.
மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இந்த ப்ளூ ப்ளேக் மூலம் மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் உளவாளியாகச் செயல்பட்ட நூர் இனாயத் கான் 2020-ஆம் ஆண்டில் ப்ளூ பிளேக் மூலம் பெருமைப்படுத்தப்பட்டார்.
இந்த வரிசையில் இணையப் போகிறது ஆயாக்களின் இல்லம். இது கிழக்கு லண்டனின் ஹேக்னியில் உள்ள கிங் எட்வர்ட் சாலையில் அமைந்திருக்கிறது. பிபிசி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தில் ஆயாக்கள் இல்லம் பற்றிக் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, அதைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபர்கானா மாமூஜி தொடங்கினார். அதன் தொடர்ச்சியாகவே இந்த இல்லம் பெருமைப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற ஆயாக்கள் மற்றும் அமாக்கள் இருந்ததாக அறியப்படுகிறது. செவிலித் தாய்களை இந்தியாவில் ஆயாக்கள் என்றும் சீனாவில் அமாக்கள் என்றும் அழைக்கிறார்கள்.
மாமூஜியும், ஆயாக்களின் பங்களிப்புகள் பற்றி ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்களும் மறக்கப்பட்ட இந்த பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கவனத்தை ஈர்க்க உதவும் என்று நம்புகிறார்கள்.
லண்டனில் 'ஆயாக்கள்'என்பவர்கள் யார்?
ஆயா என்ற பெயர் இன்றும் இந்தியாவில் கிட்டத்தட்ட பணிப்பெண், செவிலித்தாய் என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அக்கால லண்டனைப் பொருத்தவரை பெரும்பாலானவர்கள் இந்தியா, சீனா, ஹாங்காங், பிரிட்டிஷ் சிலோன் (இப்போது இலங்கை), பர்மா (மியான்மர்), மலேசியா மற்றும் ஜாவா (இந்தோனேசியாவின் ஒரு பகுதி) போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
"அடிப்படையில் ஆயாக்கள் மற்றும் அமாக்கள் வீட்டு வேலை செய்பவர்கள். காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் குடும்பங்களின் முதுகெலும்பாக இருந்தனர். பிரிட்டிஷாரின் குழந்தைகளை கவனித்துக் கொண்டனர். அவர்களை மகிழ்வித்தனர். கதைகள் கூறி, தூங்க வைத்தனர்" என்று 'ஆசியன்ஸ் இன் பிரிட்டன்' என்ற புத்தகத்தை எழுதிய ரோசினா விஸ்ராம்.
இந்தக் குடும்பங்கள் பிரிட்டனுக்குத் திரும்பும்போது, ஆயாக்களை தங்களுடன் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். சிலர் கடினமான பயணத்துக்குத் துணையாக அழைத்து வரப்பட்டனர், சிலர் பல ஆண்டுகள் வரை வேலையில் வைத்துக் கொள்ளப்பட்டனர் என்று விஸ்ராம் கூறுகிறார்.
"இந்த ஆயாக்களுக்கு வழக்கமாக நாடு திரும்புவதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.
ஆனால், எல்லோருக்கும் அப்படி டிக்கெட் கிடைத்துவிடுவதில்லை. பலர் பாதியிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டனர். முறையாக ஊதியம் எதுவும் வழங்காமல், நாடு திரும்புவதற்கு எந்த ஏற்பாடும் செய்து தராமல் தவிக்க விடப்பட்டனர். பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் குடும்பங்களுடன் செல்வதற்கு இவர்களில் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்படி எந்த வாய்ப்பும் கிடைக்காதவர்கள், பிரிட்டனிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"இது ஆயாக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இட்டுச் சென்றது" என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் இடம்பெயர்வு பற்றிய விரிவுரையாளராகப் பணியாற்றும் ஃப்ளோரியன் ஸ்டேட்லர் கூறுகிறார்.
கைவிடப்பட்ட ஆயாக்கள், இந்தியாவுக்குத் திரும்புவதற்காக உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் கொடுத்து உதவி கேட்டார்கள். உதவி கிடைக்கும்வரை அதிக வாடகை வசூலிக்கும் இடங்களில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"கையில் இருந்த பணம் தீர்ந்தபோது, இந்தப் பெண்களும் தங்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் பயணத்திற்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது."
ஆயாக்களின் இல்லம்
ஓபன் யுனிவர்சிட்டியின் மேக்கிங் பிரிட்டன் என்ற ஆராய்ச்சித் திட்டத்தின்படி, ஆயாஸ் ஹோம் அல்லது ஆயாக்கள் இல்லம் என்று அழைக்கப்படும் அமைப்பு "ஆல்ட்கேட்டில் 1825 இல் எலிசபெத் ரோஜர்ஸ் என்ற பெண்ணால் நிறுவப்பட்டதாகத் தெரிகிறது". அவரது மரணத்திற்குப் பிறகு (இது எந்த ஆண்டு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை) அந்த இடம் ஒரு தம்பதியினரின் கட்டுப்பாட்டில் வந்தது.
அவர்கள் அந்தக் கட்டிடத்தை கிட்டத்தட்ட ஒரு வேலைவாய்ப்பு அலுவலகம் போல நடத்தினார்கள். அதாவது ஆயாக்கள் தேவைப்படும் பிரிட்டிஷ் குடும்பத்தினர் இங்கு வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், பிரிட்டிஷ் பேரரசு வலுப்பெற்றதால், பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணங்கள் அதிகரித்தன. பிரிட்டனுக்கு வரும் ஆயாக்களின் எண்ணிக்கையும் கூட.
"ஒவ்வொரு ஆண்டும் 200 ஆயாக்கள் வரை ஆயாக்கள் இல்லத்தில் தங்கினர். சிலர் சில நாட்களும், சிலர் மாதக் கணக்கிலும் தங்கினர்" என்கிறார் விஸ்ராம்.
ஆயாக்கள் இங்கு தங்குவதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை. அதற்குப் பதிலாக உள்ளூர் தேவாலயங்களில் இருந்து நன்கொடைகளைப் பெற்று இந்த இல்லம் நடத்தப்பட்டதாக விஸ்ராம் கூறுகிறார்.
இந்தியா திரும்புவதற்கான டிக்கெட்டுகளை வைத்திருந்த ஆயாக்களும் இந்த இல்லத்தில் இருந்தனர். வேறு பணம் இல்லாத காரணத்தாலும் பயணத் துணைக்கு யாரும் இல்லாததாலும் அவர்களால் நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. அந்த மாதிரியான தருணங்களில் ஆயாக்கள் இல்லத்தை நடத்தியவர், அந்த டிக்கெட்டை தேவைப்படும் வேறொருவருக்கு விற்று பணத்தைத் திரட்டினார்.
ஆயினும் ஆயாக்கள் இல்லம் வெறும் தங்கும் விடுதியாகவோ புகலிடமாகவோ மாத்திரம் இருக்கவில்லை. ஆயாக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவது அதன் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக இருந்ததாக ஃபுளோரியன் ஸ்டேட்லர் கூறுகிறார்.
"ஆனால், இந்த ஆயாக்களில் எத்தனை பேர் உண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஏனெனில், அது பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை. இந்த ஆயாக்கள் உண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த எந்த பதிவுகளும் இல்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
1900 ஆம் ஆண்டில், இந்த இல்லத்தை லண்டன் சிட்டி மிஷன் என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பு வாங்கியது. அவர்கள் இதை முதலில் ஹாக்னியில் உள்ள 26 கிங் எட்வர்ட்ஸ் சாலைக்கும் பின்னர் 1921-ஆம் ஆண்டில் 4 கிங் எட்வர்ட்ஸ் சாலைக்கும் மாற்றினர்.
ப்ளூ ப்ளேக் எப்படி தரப்பட்டது?
20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டிஷ் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதனால் ஆயாக்கள் மற்றும் அமாக்களின் தேவை குறைந்தது. 4 கிங் எட்வர்ட் சாலையில் உள்ள கட்டிடம் ஒரு தனியார் குடியிருப்பாக மாற்றப்பட்டது.
2018 ஆம் ஆண்டு A Passage to Britain என்ற பிபிசியின் ஆவணப்படத்தில் ஆயாக்கள் இல்லம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதுதான் மாமோஜி முதன் முதலாக ஆயாக்கள் இல்லம் பற்றி கேள்விப்பட்டார். பின்னர் கட்டடத்தைப் பார்வையிட முடிவு செய்தார்.
"கிழக்கு லண்டனில் வசிக்கும் ஒரு தெற்காசியப் பெண்ணாக, நான் ஆயாக்களைப் பற்றிய சொல்லப்படாத கதை இருப்பதாக உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
"பல ஆசிய பெண்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க இடமாக இருந்தது என்று அடையாளப்படுத்தும் வகையிலான எதுவும் அங்கு இல்லை என்பது எனக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் உணர்ந்தேன்."
இதன் பிறகு ஆயாக்கள் இல்லம் என்ற திட்டத்தை உருவாக்கி அதில் அங்கிருந்தவர்களைப் பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்தினார். ப்ளூ ப்ளேக் அந்தஸ்துக்காகவும் விண்ணப்பித்தார்.
இதற்காக ஹேக்னி அருங்காட்சியகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதனால் ஈர்க்கப்பட்ட அருங்காட்சிய ஊழியர்களும் ஆயாக்கள் பற்றி ஆராயத் தொடங்கினர்.
"1878 முதல் 1960 வரை பிரிட்டனுக்கு வந்த, திரும்பிச் சென்றவர்களின் பட்டியல்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் ஆயாக்கள் இல்லத்தில் தங்கியிருந்தவர்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டினோம்" என்கிறார் அருங்காட்சியகத்தின் மேலாளர் நிதி ஆச்சார்யா.
ஆனால் ஆயாக்கள் பற்றிய தகவல்கள் குறைவாக இருப்பதால் இது சவாலான பணியாக இருந்தது.
"அருங்காட்சியகத்தில் இருந்த ஆவணங்களில், பிரிட்டிஷ் குடும்பத்துடன் இருந்த ஆயாக்களைப் பற்றிய தகவல்கள்தான் இருந்தனவே தவிர, தனியாக இல்லத்தில் தங்கியிருந்தவர்களைப் பற்றி பெரும்பாலும் இல்லை. பெண்களின் உண்மையான பெயர்கள் கிறிஸ்தவப் பெயர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன" என்று நிதி ஆச்சார்யா கூறுகிறார்.
ப்ளூ ப்ளேக் மூலம் அளிக்கப்படும் பெருமை, ஆயாக்களைப் பற்றி மேலும் அதிகமாக ஆராய்வதற்கு உதவும் என்கிறார் மாமோஜி.
"இந்தப் பெண்கள் உண்மையிலேயே இத்தகைய பெருமைக்குத் தகுதியானவர்கள்" என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்