வரலாறு: 'யுக்ரேனில் ஜோசப் ஸ்டாலின் காலத்தில் நடந்த பட்டினிப் படுகொலைகள்'

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய படுகொலைகளைப் போன்றே, யுக்ரேனில் சோவியத் ஒன்றியத்தின் ஜோசப் ஸ்டாலின் காலத்தில் படுகொலைகள் நடத்தப்பட்டதாகவும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1932-33 காலகட்டத்தில் நடந்த படுகொலை இது. இதை ஹோலோடோமோர் என்கிறார்கள். அதாவது பட்டினிபோட்டு இறக்குமாறு செய்வது.

சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக யுக்ரேன் இருந்த காலகட்டம் அது. கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வேண்டுமென்றே பஞ்சத்தை உருவாக்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பட்டினிப் படுகொலையால் சுமார் 40 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

இதை ஹிட்லர் நடத்திய படுகொலைகளுடன் ஒப்பிடுவதை சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டாலும் வேறு சிலர் அப்படி ஒப்பிடுவது தவறு என்கின்றனர்.

பட்டினிப் படுகொலைகள் என்பது என்ன?

ஹோலோடோமோர் என்பது சோவியத் ஒன்றியத்தின் தலைவராக ஜோசப் ஸ்டாலின் இருந்தபோது, யுக்ரேனைத் தாக்கிய ஒரு பரவலான பஞ்சத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தப் பெயர் யுக்ரேனியச் சொற்களான "ஹலோட்" (பசி) மற்றும் "மோர்" (இறப்பு) ஆகியவற்றிலிருந்து வந்திருக்கிறது.

யுக்ரேனில் விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்னைடர் போன்ற சில வரலாற்றாசிரியர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 33 லட்சம் எனக் கூறுகின்றனர். வேறு சிலர் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகின்றனர்.

உண்மையான எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், தற்போது 4.4 கோடி மக்கள் வசிக்கும் யுக்ரேனிய தேசத்தில் ஆழமான மற்றும் ஆறாத காயத்தை ஏற்படுத்திய ஒரு சோகம் அது.

திடீர் பஞ்சத்தால், உணவு கிடைக்காமல் மக்கள் கிராமம் கிராமமாக இறந்தனர். பெரும்பாலான கிராமங்களில் இறப்பு விகிதம் 30 சதவிகிதத்தை எட்டியது. உணவு தேடி தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் சடலங்களால் சாலைகள் நிறைந்திருந்தன. பசி தாங்காமல் இறந்தோரின் உடல்களை சாப்பிட்டதாகவும் தகவல்கள் உண்டு.

"கொஞ்சம் மலிவான சோள மாவு, கோதுமை வைக்கோல்" போன்றவற்றை உண்டு வாழ்ந்ததாக 2013-ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் நினா காப்பென்கோ என்ற 87 வயதான மூதாட்டி கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டில் வகுப்புகள் மீண்டும் தொடங்கியபோது, ​ மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் காலியாக இருந்தது. அதாவது, அத்தனை வகுப்பு தோழர்கள் இறந்துவிட்டனர் என்றார் நினா.

படுகொலை என்று கூறப்படுவது ஏன்?

இந்தப் பஞ்சமும் பட்டினியும் இயற்கையாக நடந்துவிடவில்லை. மனிதர்களே வேண்டுமென்றே இதை ஏற்படுத்தினர் அல்லது தீவிரமாக்கினர் என்று பலரும் நம்புகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, அதன் பின்னணியில் இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். அதாவது பட்டினிபோட்டு இனப்படுகொலை நடத்தப்பட்டதாக அவர்கள் பலர் கூறுகின்றனர்.

அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த யுக்ரேனிய விவசாயிகள் உணவில்லாமல் பட்டினி கிடக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான கிராமப்புற யுக்ரேனியர்கள், சுதந்திரமான சிறு-அளவிலான விவசாயிகளாக இருந்தவர்கள். கூட்டுப் பண்ணை முறையை எதிர்த்தனர். கூட்டுமயமாக்கலை எதிர்த்தனர். அவர்கள் தங்கள் நிலம், கால்நடைகள் மற்றும் விவசாயக் கருவிகளை ஒப்படைக்கவும், கூட்டுப் பண்ணைகளில் வேலை செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு எதிராகவே அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சுடப்பட்டனர். கட்டாயக் கடும்பணி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

எதிர்ப்பு அதிகமானபோது, ​அரசு ஆதரவுக் குழுக்கள் கிராமங்களுக்குள் நுழைந்து உணவு தானியங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றனர்.

"விவசாயிகள் பிற பகுதிகளுக்குச் செல்வதையும் உணவு தேடுவதையும் தடுக்க அரசாங்கம் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தது" என்று கியேவின் ஹோலோடோமோர் நினைவு அருங்காட்சியகத்தின் ஒலெக்ஸாண்ட்ரா மொனெடோவா பிபிசியிடம் கூறினார்.

"மக்களுக்கு இறப்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை"

ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகளை சோவியத் ஒன்றியம் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது. ஹோலோடோமோர் ஒரு சோகம் என்றாலும், அது தற்செயலாக நடந்தது என்றே கிரெம்ளின் தரப்பு கூறுகிறது. மேலும் யுக்ரேனில் பஞ்சம் ஏற்பட்டிருந்த நேரத்தில் பிற பகுதிகளும் பாதிக்கப்பட்டன என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

ஹோலோடோமோர் என்ற பட்டினிப் படுகொலைகளை ஓர் இனப்படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை யுக்ரேன் நீண்டகாலமாக வைத்திருக்கிறது. ஆயினும் 15 நாடுகள் மட்டும் இதனை இனப்படுகொலையாக அங்கீகரித்திருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :