இந்தோனீசிய கால்பந்து போட்டியில் கலவரம்: குறைந்தது 174 பேர் பலி

Indonesia: More than 120 dead in football stampede

பட மூலாதாரம், AFP via getty images

இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் கால்பந்து போட்டி ஒன்றின் பின் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குறைந்தது 174 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 129 பேர் இறந்ததது உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

உலகளவில் விளையாட்டு மைதானங்களில் நடந்த மிகவும் மோசமான உயிரிழப்புகளில் ஒன்றாக இது உள்ளது.

கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து ரசிகர்களிடையே மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியதால் அதிலிருந்து ரசிகர்கள் தப்பியோட முயன்ற போது இந்த கூட்ட நெரிசல் உண்டானது.

அரேமா எப்.சி என்னும் அணியினர் அவர்களின் பரம எதிராளி அணியான பெர்சேபயா சுராபயா எனும் அணியிடம் தோல்வி அடைந்த பின்னர் உண்டான மோதலில் குறைந்தபட்ச 180 பேர் காயமடைந்தனர்.

கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் சுமார் 38,000 பார்வையாளர்கள் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில் அதைவிட அதிகமாக 42,000 பேர் அங்கு கூடியிருந்தனர் என்று இந்தோனீசியாவின் தலைமை பாதுகாப்பு அமைச்சர் மஹ்பூத் எம்டி தெரிவித்துள்ளார்.

சிவப்புக் கோடு

கால்பந்து போட்டி முடிந்த போது கடைசி விசில் ஊதப்பட்ட பின்னர் ரசிகர்கள் மைதானத்துக்குள் ஓடுவதை காணொளிகள் காட்டுகின்றன.

காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. இதனால் கூட்ட நெரிசல் உண்டானது; அங்கு இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறிலும் ஏற்பட்டது என்று கிழக்கு ஜாவாவின் காவல்துறை தலைவர் நிக்கோ அஃபின்டா தெரிவித்துள்ளார்.

வேலிகள் மீது ஏறி அந்த கூட்டத்திலிருந்து ரசிகர்கள் தப்பிக்க முயல்வதை சமூக ஊடங்களில் வெளியாகி உள்ள காணொளிகள் காட்டுகின்றன. வேறு சில காணொளிகளில் உயிரிழந்த உடல்கள் தரையில் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

indonesia football death

பட மூலாதாரம், EPA

பாதுகாவலர்கள் அல்லது காவல் துறையினர் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்படக் கூடாது என்று சர்வதேச கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான பிஃபா கூறுகிறது.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான கலவரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள இந்தோனீசிய கால்பந்து அமைப்பு, இந்த நிகழ்வு இந்தோனீசியா கால்பந்து பிம்பத்துக்கு களங்கம் விளைவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

விசாரணை முடியும்வரை இந்தோனீசியாவில் கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

கால்பந்து போட்டிகளின் போது இந்தோனீசியாவில் வன்முறை சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. அரேமா எஃப்.சி மற்றும் பெர்சேபயா சுராபயா ஆகிய அணிகள் மிகவும் நீண்ட நாள் பகையாளிகள்.

Damaged police vehicles lay on the pitch inside Kanjuruhan stadium

பட மூலாதாரம், EPA

மோசமான மோதல் நடைபெறும் என்ற அச்சத்தின் காரணமாக பெர்சேபயா சுராபயா ரசிகர்கள் இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட்டுகள் வாங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

1964இல் பெரு மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஆட்டத்தின் பின் உண்டான கூட்ட நெரிசலில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; 320 பேர் உயிரிழந்தனர்.

1989இல் பிரிட்டனின் ஹில்ஸ்போரோ மைதானத்தில், அதிக கூட்டம் இருந்த மைதானத்தின் தடுப்பு சரிந்து விழுந்ததில் லிவர்பூல் அணியின் கால்பந்து ரசிகர்கள் 96 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, கார் மோதி இரண்டு துண்டாக உடைந்த டிராக்டர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: