You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷைலஜா டீச்சர்: கொரோனாவை சிறப்பாக சமாளித்த கேரள முன்னாள் அமைச்சர் ரமோன் மகசேசே விருதினை ஏற்க மறுத்தது ஏன்?
(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (05/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)
ரமோன் மகசேசே விருதை ஏற்க கேரள முன்னாள் அமைச்சர் ஷைலஜா மறுப்பு தெரிவித்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக பொதுசேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ஆசியாவின் நோபல் பரிசு என்று புகழப்படுவது உண்டு.
இந்த விருது, கேரள முன்னாள் சுகாதார அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே.கே.ஷைலஜாவுக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் இதை அவர் ஏற்க மறுத்து விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் நேற்று (செப். 04) பேசுகையில், "தனிப்பட்ட திறனுக்காக இதை நான் பெற விரும்பவில்லை. நான் செய்த சேவையெல்லாம் கூட்டு முயற்சி. அதைத் தனிப்பட்ட முறையில் நான் பெறுவது சரியாக இருக்காது" என ஷைலஜா தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர் ரமோன் மகசேசே என்பதால், அவரது பெயரால் வழங்கப்படுகிற விருதினை ஷைலஜா நிராகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார் என அச்செய்தி தெரிவிக்கிறது.
ஹேக் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம்
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் நேற்று ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டது.
பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்ட அப்பதிவில், "அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. எங்கள் ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை" என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது ட்விட்டர் கணக்கு மீண்டும் மீட்கப்பட்டதாக, செந்தில் பாலாஜி பதிவிட்டிருந்தார்.
ரணில் வீட்டின் மீதான தாக்குதல்: காணாமல் போன புத்தகம், புத்தர் சிலை பற்றி வந்த தொலைபேசி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிலிருந்து திருடப்பட்டதாக கருதப்படும் புத்தகங்கள், புத்தர் சிலை ஒன்று தொடர்பில், ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு தொடர்பில், ஜனாபதி செயலர் சி.ஐ.டி.க்கு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பு - 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது, கடந்த ஜூலை 9 ஆம் தேதி தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
ஜனாதிபதி செயலகத்தின் பொது தொலைபேசி இலக்கத்துக்கு அண்மையில் வந்த அழைப்பொன்றில், ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டின் மீது தீ வைக்கப்பட்ட போது திருடப்பட்ட புத்தகங்களும், புத்தர் சிலை ஒன்றும் பாதுகாப்பாக தன்னிடம் இருப்பதாக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் அதனை உடன் வைத்திருக்க பயமாக இருப்பதால், அதனை கையளிக்க வேண்டும் எனவும், அதற்காக ஜனாதிபதியின் செயலரை தொடர்புகொள்ள இணைப்பை ஏற்படுத்துமாறும் அவர் கோரியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி செயலக அதிகாரிகள் விடயத்தை ஜனாதிபதி செயலரின் கவனத்துக்கு கொண்டு வந்த பின்னர் அவர் அதனை சி.ஐ.டி.க்கு அறிவித்துள்ளார். இந் நிலையிலேயே அது குறித்து அவதானம் செலுத்தி சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்