இந்திய பொருளாதாரம்: உயரும் விலைவாசி, சரியும் ரூபாய் மதிப்பு - உண்மை நிலை என்ன?

    • எழுதியவர், பிபிசி இந்தி குழு
    • பதவி, புது டெல்லி

இந்திய பொருளாதாரம் தற்போது இரட்டை நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கோவிட் தொற்றுநோயின் தாக்கம் தணிந்த பிறகு, நாட்டின் சிதைந்திருந்த பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணவீக்கம் மற்றும் வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பு ஆகியவை பொருளாதாரத்தை மீட்கும் பணியைத் தாமதப்படுத்தியுள்ளது.

ஜூன் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.01 சதவீதமாக இருந்தது. மே மாதத்தில் இது 7.04 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

மறுபுறம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஜூலை 19ம் தேதி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து 80ஐ தாண்டியது. டாலரின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவின் இறக்குமதிகள் விலை உயர்ந்து வருவதால் உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக உலகம் முழுவதுமே பணவீக்கம் அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட விநியோகச் சங்கிலி முதல் சமீபத்திய ரஷ்ய-யுக்ரேன் போரால் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது வரை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தியாவில், கோவிட் பெருந்தொற்றால் மோசமான பின்னடைவைச் சந்தித்து வரும் பொருளாதாரத்தை மீட்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. கோவிட் காரணமாக இந்தியர்களின் வருமானம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது முன்பை விட சாமானிய மக்களுக்கு அதிக சிரமத்தை அளித்து வருகிறது தெளிவாகிறது.

விலையுயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பூஜா மெஹ்ரா மற்றும் ஆலோக் ஜோஷியின் மதிப்பீடு

இது குறித்துப் பொருளாதார ஆய்வாளர் பூஜா மெஹ்ரா, ​​"கோவிட் வருவதற்கு முன்பே இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. கோவிட்டுக்குப் பிறகு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனைகளால் பணவீக்கம் அதிகரித்தது. இது தவிர, 2019 இல் RBI ஏற்றுக்கொண்ட கொள்கைகளும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளன. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சமீபகால பணவீக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது." என்று விளக்குகிறார்.

மேலும் அவர், "அரசாங்கத்தின் கொள்கைகளால் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் திடீர் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மறுபுறம், ரஷ்ய-யுக்ரேன் போர் காரணமாக, எண்ணெய் விலை அதிகரித்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பாதித்தது. எனவே கோவிட் மற்றும் தற்போதைய ரஷ்யா-யுக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சப்ளை சிக்கல்கள் காரணமாக, பணவீக்கம் அதிகரித்தது." என்கிறார்.

'விலையுயர்வைத் தடுக்க ரெபோ விகிதம் உயர்வு சரியான நடவடிக்கை'

இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை (வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் வட்டி விகிதம்) அதிகரிப்பது சரியானது என்று பூஜா மெஹ்ரா கருதுகிறார்.

"ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்கவில்லை என்றால், அதாவது, முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி கொடுக்கவில்லை என்றால், முதலீட்டாளர்கள் இங்கிருந்து பணத்தை வெளியில் எடுப்பார்கள். அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால், டாலர் நம்மிடமிருந்து வெளியேறத் தொடங்கியது. அதாவது, முதலீட்டாளர்கள் அதிக வட்டி பெறுகிற இடத்தில் முதலீடு செய்கிறார்கள்.

"எனவே வட்டி விகிதத்தை உயர்த்தி, முதலீட்டாளர்களை நிறுத்தாவிட்டால், டாலர் இங்கிருந்து வெளியேறத் தொடங்கும். இது நமது ரூபாயை மேலும் பலவீனப்படுத்தும். பலவீனமான ரூபாய் நமது இறக்குமதி இன்னும் விலையுயர்ந்துவிடும், பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும்." என்றும் அவர் விவரிக்கிறார்.

ஜி.எஸ்.டி உயர்த்துவது சரியான நடவடிக்கையா?

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் இதுபோன்ற காலகட்டத்தில், பல முக்கியமான விஷயங்களில் ஜிஎஸ்டியை உயர்த்தும் முடிவை அரசு எப்படி எடுத்தது? இது மக்களுக்கு இரட்டைச் சுமையல்லவா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த பூஜா மெஹ்ரா, "ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​சராசரி நடுநிலை விகிதத்தை 12 சதவீதமாக வைத்திருப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களால், பல மாநிலங்கள் இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. எனவே, சில அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை, சில பொருட்களுக்கு 5-10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் இதனால் அரசின் வருவாய் குறையத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரியல் எஸ்டேட், பெட்ரோல் போன்ற பொருட்கள் ஜிஎஸ்டியின் வரம்பிற்கு வெளியே உள்ளன. அதனால், ஜிஎஸ்டி வருவாய்க்கான இலக்கு எட்டப்படவில்லை. இதனால்தான் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஜிஎஸ்டி மூலம் வரி வரவில்லை என்றால், நாட்டின் செலவை எப்படிச் சமாளிப்பது? " என்கிறார்.

விலையுயர்வு அச்சம் என்பது பழகிக் கொள்ள வேண்டிய ஒன்றா?

அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் இந்தியாவின் புதிய இயல்பு நிலையாகிவிடுமா? பணவீக்கம் ஏழு-எட்டு சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக இங்கு எப்போதும் இருந்து விடுமா?

இதற்குப் பதிலளிக்கும் பூஜா மெஹ்ரா, வெளிநாடுகளில் புதிய இயல்பு நிலை என்பது குறித்துப் பேசப்படுகிறது. பணவீக்கம் அங்கு இரண்டு சதவீதமாக இருப்பதால், அதிகரித்த பணவீக்க விகிதம் அங்கு புதிய இயல்பாகக் கருதப்படுகிறது. சீனாவில் இருந்து வரும் மலிவான பொருட்கள் காரணமாக பணவீக்கம் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது சீனாவில் இருந்து சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் நாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. இரண்டாவதாக, அவர்கள் இனி சீனாவை அதிகம் சார்ந்திருக்க முடியாது." என்கிறார்.

"ரஷ்யா-யுக்ரேன் போரின் காரணமாக விநியோகச் சிக்கலும் நிலவுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவில் அதிகரித்துள்ள இந்த விலைவாசி விகிதம் மேலும் குறையலாம். நமது பணவீக்கம் ஏற்கெனவே அதிகமாக உள்ளது. எனவே, பணவீக்க விகிதத்தை 4 சதவீதமாகக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நான்கு சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என்கிறார் அவர்.

"உண்மையில் கோவிட் நேரத்தில் ரிசர்வ் வங்கி அதிக நோட்டுகளை அச்சிட்டது. அரசாங்கம் கடன் வாங்குவதில் எந்த சிக்கலும் நேரக்கூடாது என்பது தான் இதன் நோக்கம். பணவீக்கத்தை அதிகரிப்பதில் அதன் பங்கும் இருந்தது. இப்போது அரசாங்கம் இந்தப் பணப்புழக்கத்தை உறிஞ்சிக் கொள்ள முயற்சிக்கிறது. எனவே, எதிர்காலத்தில் ​​பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் ரஷ்ய-யுக்ரேன் போரின் காரணமாக எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் வரை, இங்கு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஏனெனில் நமது எண்ணெய்த் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெளியில் இருந்து பெறுகிறோம். இதற்காக நிறைய பணம் செலவழிக்கிறோம்'' என்றார்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் என்ன சிக்கல்?

பணவீக்கத்துடன், இன்னொரு விஷயமும் இந்தியாவைத் திணறடிக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவது தான் அது. இருப்பினும், ஏற்றுமதிக் கண்ணோட்டத்தில் இது நல்லது. ஆனால் இந்தியா ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது. எனவே, அதன் அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ள நாணயம், குறிப்பாக டாலர் பங்கு, வேகமாக குறைந்து வருகிறது. இந்த ரூபாயின் வீழ்ச்சி எப்போது நிற்கும், இந்த நிலையில் இருந்து இந்தியா எப்படி மீண்டு வரும்?

மூத்த பத்திரிகையாளரும் பொருளாதார ஆய்வாளருமான ஆலோக் ஜோஷி இது குறித்துக் கூறுகையில், "பலவீனமான ரூபாய் ஏற்றுமதிக்கு நல்லது. ரூபாயின் பலவீனத்தை விட டாலரின் பலம் அதிகரித்து வருகிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும். உண்மையில், இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வில் இருந்து பணப்புழக்கத்தை உறிஞ்சுவதன் விளைவாகும். கோவிட் சமயத்தில், ஃபெடரல் ரிசர்வ் நிறைய டாலர்களை அச்சிட்டது. இப்போது அது திரும்பப் பெறப்படுகிறது. வட்டி விகிதத்தை உயர்த்தி இந்தப் பணி நடந்து வருகிறது. அதிக வட்டி விகிதத்தின் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து டாலர்கள் அமெரிக்காவை நோக்கி வருகின்றன. இந்தியாவில் முதலீடு செய்து கொண்டிருந்த முதலீட்டாளர்கள் இப்போது அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கிறது. இதன் காரணமாக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மட்டும் பலவீனமாக இல்லை. ஒப்பிடுகையில் உலகின் அனைத்து நாடுகளின் கரன்சிகளும் பலவீனமடைந்துள்ளன." என்று தெரிவிக்கிறார்.

அலோக் ஜோஷி ரூபாயின் பலவீனத்தை அவ்வளவு மோசமான விஷயமாகக் கருதவில்லை.

"நமக்கு, டாலர் வலிமை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை நன்மை பயக்கும், ஏனெனில் இது உலகில் நமது பொருட்களை மலிவாக மாற்றும் மற்றும் நமது ஏற்றுமதிகள் பயனடையும்" என்று அவர் கூறுகிறார். சீனா, வங்காளதேசம் போன்ற நாடுகள் தங்கள் நாணய மதிப்பைக் குறைத்து உலகச் சந்தையில் தங்கள் பொருட்களை மலிவாக வைத்திருக்கின்றன, இதனால் அவர்கள் பயனடைந்துள்ளனர். நமக்கு டாலர்கள் தேவை அதனால் உலகச் சந்தையில் மலிவான பொருட்களை விற்பதன் மூலம் அதிக டாலர்களைச் சம்பாதிக்கலாம். ஏனென்றால் நாம் அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு நமக்கு டாலர்கள் தேவை." என்பது அவர் கருத்து.

ரூபாய் மதிப்பை உயர்த்த அரசு நடவடிக்கை அவசியமா?

இந்தக் கேள்விக்கு ஜோஷி பதிலளிக்கையில், ​​"ரூபாய் மதிப்பை செயற்கையாகப் பலப்படுத்தலாம். ஆனால் அது இந்தியாவுக்குக் கேடு விளைவிக்கும். மாறாக அரசாங்கம் தொழில்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனால் அவை ஏற்றுமதி செய்து டாலர்களை ஈட்டுகின்றன.

உள்ளூர்ப் பணமதிப்பு வெகுவாக வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கும் பாகிஸ்தானைப் போலவோ அல்லது இலங்கையைப் போன்றோ இந்தியாவின் நிலை இருக்குமா என்று இந்தியாவில் பலர் கேட்கிறார்கள்.

இந்த நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது அர்த்தமற்றது என்கிறார் ஜோஷி. இதுபோன்ற நிலை இந்தியாவில் வராது. இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை மிகவும் வலுவானது மற்றும் அதன் பொருளாதாரத்தின் அளவும் மிகப் பெரியது. எனவே இந்தியாவில் பாகிஸ்தான், இலங்கை போன்ற சூழ்நிலையை கற்பனை செய்வது விவேகமற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: