இந்திய நாகரிகத்தை மேம்படுத்த ஆன்மிக மறுமலர்ச்சி அவசியம்: குடியரசு துணைத் தலைவர் பேச்சு

வெங்கையா நாயுடு

பட மூலாதாரம், Getty Images

(தமிழ்நாடு, இலங்கையில் இன்று வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களின் செய்திகளில் கவனிக்கவேண்டிய சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலா்ச்சி அவசியம் என குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்ததாக தினமணி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

குடியரசு துணைத்தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுவாமி பிரபுபாதா தொடா்பான நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இஸ்கான் நிறுவனா் ஸ்ரீ பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளாா்.

சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவா்களின் குணங்களை இளைஞா்கள் உள்வாங்கவும் வேண்டும். சிறந்த மனிதா்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம். எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயா்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்.

பக்தி என்பது இந்தியா்களின் நாடி, நரம்புகளில் பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் கூட்டு நாகரிக உணா்வின் உயிா்நாடி அது. சேவை உணா்வும், பகிா்தல் மற்றும் அக்கறையும், இந்திய விழுமியங்களின் மையமாகும். இளைஞா்கள் இந்த விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோக்கத்துக்காக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக சேவையைக் கட்டாயமாக்க வேண்டும். இந்திய நாகரிகத்தை மேம்படுத்த ஆன்மிக மறுமலா்ச்சி அவசியம் என்றாா்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் இன்று பதவி ஏற்பு

திரௌபதி முர்மூ

பட மூலாதாரம், TWITTER

இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ இன்று காலை 10.15 மணியளவில் பொறுப்பேற்க உள்ளார் என்று இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மூவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக இந்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.

கடந்த 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 64 சதவீத வாக்குகளுடன் திரௌபதி முர்மூ அமோக வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

கடந்த 2017-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ இன்று பதவியேற்கிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 30 அரசு அலுவலகங்களையும் இன்று காலை 6 மணிக்கு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமானப் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி, கட்டுமானப் பணிகளை இன்று நிறுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற வளாகத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 குண்டுகள் முழங்க மரியாதை

பாரம்பரிய நடைமுறைகளுக்குப் பிறகு, காலை 10.05 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், குடியரசுதலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மூவும் அணிவகுப்பு மரியாதையுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வருவார்கள்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எம்.பி.க்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராணுவ தளபதிகள் விழாவில் பங்கேற்பார்கள்.

காலை 10.15 மணிக்கு புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். இதன் பிறகு 21 குண்டுகள் முழங்க புதியகுடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ உரையாற்றுவார். இதன் ஆங்கில உரையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வாசிக்கிறார்.

பின்னர், திரௌபதி முர்மூவும், ராம்நாத் கோவிந்தும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்வார்கள். அங்கு திரௌபதி முர்மூ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து, அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் குடியேற உள்ளார் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் திறக்கப்படும் இலங்கை அதிபர் அலுவலகம்

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அதிபர் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் கடந்த 9-ந்தேதி மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடிய அவர்கள், அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். எனினும் பின்னர் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர்.

அதேநேரம் அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்களில் ஒரு சிலர் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் அவர்களை ராணுவம் சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. மேலும் அலுவலகம் அருகே போடப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரமும் பிரித்து எறியப்பட்டன. இதனால் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். 9 பேர் கைது செய்யப்பட்டனர். இது உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது.

குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தன. ஆனால் இதை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நிராகரித்தார். இன்று மீண்டும் திறப்பு இதற்கிடையே போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அதிபர் அலுவலகத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அத்துடன் அங்கு சேதமடைந்த பொருட்களின் விவரங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். பின்னர் அங்கு தூய்மைப்பணிகள் அனைத்தும் மேற்கொண்டு அலுவலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிபர் அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் செயல்பாட்டுக்கு திறக்கப்படுகிறது. இதைப்போல போராட்டக்காரர்கள் வசம் சென்ற பிற அலுவலக கட்டிடங்களையும் சுமுக செயல்பாட்டுக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணொளிக் குறிப்பு, இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :