இலங்கை: “பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு” - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச
படக்குறிப்பு, சஜித் பிரேமதாச

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (01/07/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

"திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த விதமான டீலும் அரசியலும் எனக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாவும் கூறியுள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, "தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பை முற்றாக ஒழித்து விட்டது. ராணுவத்தின் ஆட்சியையே இவர்கள் தேசிய பாதுகாப்பாகக் கருதினார்கள்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட காரணிகளான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளை தேசிய பாதுகாப்பாக இவர்கள் கருதவில்லை," என்று சஜித் பிரேமதாச கூறினார். அதோடு, இதனால் உலகளவில் ஏழ்மையான நாடுகளில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது எனவும் கூறினார்.

மேலும், தற்போது வெளிநாடுகளிடமிருந்து பிச்சை எடுத்து உணவை உட்கொள்ளும் நிலைக்கு நாடு வந்துள்ளது. பிச்சை எடுக்கும் நிலையில் நாட்டின் பெருமதிப்பு மிக்க சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் லஞ்ச, ஊழல் செயற்பாடுகளை ஆளும் தரப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

இப்படியான ஆட்சியாளர்களுடன் ஒருபோதும் பங்காளிகளாக இணைந்து ஆட்சியை அமைக்க போவதில்லை, அவ்வாறு செய்தால் நாட்டு மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது ஆகிவிடும் என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவன ஈர்ப்புப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் நேற்று கவன ஈர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, "வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று முற்பகல் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1932 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஒவ்வொரு மாதமும் 30ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், நேற்றைய தினமும் அத்தகைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் விண்ணப்பங்கள்

அக்னிபத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் பணி நியமனத்துக்குக் கடந்த 7 நாட்களில் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், "முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என்று அரசு உறுதியாகத் தெரிவித்தது.

அதேநேரம் இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக விமானப்படை தெரிவித்து உள்ளது. வருகிற 5ஆம் தேதி வரை முன்பதிவுக்கான கால அவகாசம் இருப்பதால், மேலும் அதிக இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன," எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக அரசைக் கண்டித்து பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

அண்ணாமலை
படக்குறிப்பு, கே. அண்ணாமலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்

திமுக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஜூலை 5ஆம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து ஜூலை 5ஆம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். வடசென்னை மேற்கில் நடைபெறும் போராட்டத்திற்கு அண்ணாமலை தலைமை வகிக்கவுள்ளார். தென் சென்னையில் பாஜக மாநிலச் செயலாளரும் முன்னாள் மேயருமான (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.

காணொளிக் குறிப்பு, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: