குரங்கு அம்மை: ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் பரவும் புதிய வைரஸ் தொற்று

பட மூலாதாரம், Getty Images
சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகியவற்றில் குரங்கு அம்மை தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாடுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடகங்களும் கூறியுள்ளன.
பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் சமீபத்தில் புதிதாக குரங்கு அம்மை தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மேலும், ஏற்கெனவே அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் 13 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்பு பொதுவாக காணப்படும் ஒன்றாகும்.
இந்த பகுதிகளுக்கு வெளியே குரங்கு அம்மை பாதிப்பு பெரும்பாலும் அப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதுடன் தொடர்புடையதாகும்.
குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகளே ஏற்படும் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் எனவும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை என்பது என்ன?
மேலும், இந்த வைரஸ் ஒருவரொருக்கொருவர் எளிதில் பரவாது, இதனால் பரவலாக பாதிக்கப்படும் ஆபத்து மிகவும் குறைவானது.
பிரிட்டனில் மே 7 அன்று குரங்கு அம்மை தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அந்த நபர் சமீபத்தில் நைஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டவர். இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பாக, நைஜீரியாவிலிருந்து அவருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என, பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது,
பிரிட்டனில் தற்போது 9 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு எப்படி குரங்கு அம்மை பரவியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், "உள்ளூரிலிருந்தே இது பரவியிருக்கலாம்" என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துவிட்டு திரும்பியபின் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Science Photo Library
நேற்று, வியாழக்கிழமை ஸ்வீடனில் ஒருவருக்கும் இத்தாலியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் ஒருவருக்கும் இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபருக்கு இந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை என, ஸ்வீடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தாலியில் பாதிப்பு ஏற்பட்ட நபர் சமீபத்தில்தான் கேனரி தீவிலிருந்து திரும்பினார் என, உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போர்ச்சுகல்லில் புதன்கிழமை 5 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்பெயினிலும் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது,
எனினும் ஐரோப்பாவில் இதுவரை குரங்கு அம்மை தடுப்பூசிக்கு ஒப்புதல் பெறப்படவில்லை. ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகள் குரங்கு அம்மையை சமாளிக்க ஆயிரக்கணக்கான பெரியம்மை தடுப்பூசிகளை வாங்கியதாக ஸ்பானிஷ் செய்தித்தாள் எல் பைஸ் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை வைரஸ் என்பது பெரியம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
வட அமெரிக்காவில், குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்தனர். அவர் சமீபத்தில் கனடாவுக்குச் சென்றுள்ளார். கனடாவில் 13 பேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருவதாக, உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் "நல்ல நிலையில்" உள்ளார் என்றும், "பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை" எனவும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












