யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததால், எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி என்ன சிக்கல்?

எவரெஸ்ட் சிகரம் - யுக்ரேன் போர்

பட மூலாதாரம், BBC/ANBARASAN

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி நியூஸ், எவரெஸ்ட் அடி முகாம்

ஆங் சர்க்கி ஷெர்பா செய்யும் வேலை, உலகின் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாகும், ஆனால் அவர் இந்த அபாயத்தை தனது வேலையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிறார்.

உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு கயிறுகள் மற்றும் அலுமினிய ஏணிகளை பொருத்தும் "ஐஸ்ஃபால் டாக்டர்கள்" என்று அழைக்கப்படும் நேபாளத்தின் மிகவும் அனுபவம் வாய்ந்த மலை வழிகாட்டிகளில் ஷெர்பாவும் ஒருவர்.

மலையில் உள்ள பிளவுகள் மற்றும் தொடர்ந்து நகரும் பனிப்பாறைகளை சமாளித்து, ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தின் பக்கத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை எட்ட முயற்சிக்கும் நூற்றுக்கணக்கான மலையேறுபவர்களுக்கு உதவி செய்வது ஷெர்பாக்களின் பணியாகும். மலையேறுபவர்கள் அடிவார முகாமில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூடுகின்றனர்.

சமீப ஆண்டுகளில் இங்கே இடர்பாடுகள் தொடர்ந்து தாக்குகின்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் எவரெஸ்டில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவுகள், தொடர்ந்து 2020ல் தொடங்கிய கோவிட் பெருந்தொற்று ஆகியவற்றால் மலையேறுபவர்களின் எண்ணிக்கை குறைத்துள்ளது. இப்போது நிலைமை முன்னேறி, பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த நிலைமை திரும்பும் என்ற நம்பிக்கை இருந்தது. யுக்ரேன் போர் காரணமாக, மலையேற வருவோர் எண்ணிக்கை குறைந்து அந்த நம்பிக்கை தகர்ந்து வருகிறது.

அடிவார முகாமின் உச்சியில் உள்ள தனது மஞ்சள் கூடாரத்திற்கு வெளியே நின்றுகொண்டு, 50 வயதான ஷெர்பா மேலே உயர்ந்து நிற்கும் பரந்த கும்பு பனிப்பொழிவை சுட்டிக்காட்டினார்.

அபாயகர பனியில் பயணம்

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கும்பு பனிப்பொழிவின் புகைபடம். இது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் குழுக்களுக்கு ஆரம்ப சவாலை அளிக்கிறது

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கும்பு பனிப்பொழிவின் புகைபடம். இது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் குழுக்களுக்கு ஆரம்ப சவாலை அளிக்கிறது

"அது அபாயகரமான பகுதிகளில் ஒன்று. அங்குள்ள பனி பரப்புகளுக்கு இடையில் நிறைய பிளவுகள்உள்ளன. கவனமாக இல்லாவிட்டால், நீங்கள் அவற்றில் விழக்கூடும். நீங்கள் கயிறுகளால் ஒரு பாதையை அமைத்தாலும் அது ஒரு மாதத்திற்குப் பிறகு மறைந்துவிடும். இது ஆபத்தான வேலை," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

ஷெர்பா ஆறு பேர் கொண்ட உள்ளூர் வழிகாட்டிகளின் குழுவை வழிநடத்துகிறார். அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது கயிறுகளும் ஏணிகளும் அவர்களது கூடாரங்களைச் சுற்றி சிதறிக் கிடந்தன.

அவர்களைச் சுற்றி அடிவார முகாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பல்வேறு பயணங்களின் ஆரம்பகட்ட குழுக்கள் வசந்த காலம் தொடங்கும் போது கூடாரங்களை அமைத்து பொருட்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தன.

"ஐஸ்ஃபால் டாக்டர்கள்" பாதுகாப்பான வழியைக் கண்டறிந்து, முகாம் ஒன்று மற்றும் இரண்டு வரை கயிறுகளை சரிசெய்வார்கள். மற்றொரு குழு அதற்கு மேலே, மலையின் உச்சிவரை வேலைகளை மேற்கொள்கிறது.

அங் சர்க்கி ஷெர்பா மற்றும் அவரது குழுவினருக்கு இது ஆண்டின் மிகவும் பரபரப்பான நேரம்.

பட மூலாதாரம், BBC/ANBARASAN

படக்குறிப்பு, அங் சர்க்கி ஷெர்பா மற்றும் அவரது குழுவினருக்கு இது ஆண்டின் மிகவும் பரபரப்பான நேரம்.

ஷெர்பாவும் அவரது சகாக்களும் இதில் உள்ள ஆபத்துகளை நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டு கும்பு பனிப்பாறைக்கு மேலே ஏற்பட்ட பனிச்சரிவில் , கயிறுகளை சரிசெய்து கொண்டிருந்த 16 ஷெர்பாக்கள் உயிரிழந்தனர். ஒரு வருடம் கழித்து, நேபாளத்தில் நிகழ்ந்த பெரும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

எவரெஸ்ட் பகுதியில் மலையேற்றம் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் நிலைமை மேம்படும் என்று ஷெர்பாக்கள் நினைத்தனர்.ஆனால் அந்த நேரத்தில் ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்தது.

" போரின் காரணமாக அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பல அணிகள் தங்கள் திட்டங்களை ரத்து செய்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். அதனால், இந்த ஆண்டு எங்களிடம் பல பயணங்கள் இருக்காது," என்று ஷெர்பா என்னிடம் கூறினார்.

கட்டுப்பாடுகளுடன் மலையேற அனுமதி

ஐஸ் ஃபால் மருத்துவர்கள்" எவரெஸ்டில் மலையேற்றக்குழுக்களுக்கு கயிறுகள் மற்றும் ஏணிகளை அமைத்துக்கொடுப்பார்கள்.

பட மூலாதாரம், BBC/ANBARASAN

படக்குறிப்பு, "ஐஸ் ஃபால் மருத்துவர்கள்" எவரெஸ்டில் மலையேற்றக்குழுக்களுக்கு கயிறுகள் மற்றும் ஏணிகளை அமைத்துக்கொடுப்பார்கள்.

அடிவார முகாம் என்பது 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைய விரும்புபவர்களுக்கு மட்டுமானது அல்ல.

கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 5,400 மீ உயரத்தில் உள்ள இந்த முகாம், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.

எவரெஸ்ட் பகுதியின் நுழைவாயிலான லுக்லா நகரத்திலிருந்து தொடங்கும் நடைபயணத்தை முடிக்க இரண்டு வாரங்கள் ஆகலாம்.

2020 இல் கோவிட் தாக்கிய பிறகு நேபாளம், 2021 இல் எவரெஸ்டில் மலையேறுபவர்களை அனுமதித்தது. மலை உச்சிக்கு செல்ல 408 அனுமதிகளை வழங்கியது. இந்த ஆண்டு, நேபாள சுற்றுலா அமைச்சகம் ஏப்ரல் 19 ஆம் தேதிவரை 287 மலையேறும் அனுமதிகளை மட்டுமே வழங்கியுள்ளது.

"இந்த ஆண்டு ரஷ்யா மற்றும் யுக்ரேனில் இருந்து வரும் மலையேறுபவர்களை இந்தப் போர் பாதித்துள்ளது. யுக்ரேனைச் சேர்ந்த ஒரே ஒரு மலையேறுபவர் மட்டுமே இப்போதுவரை இங்கு வந்துள்ளார்," என்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத் துறையின் மலையேறும் பிரிவின் இயக்குநர் சூர்ய பிரசாத் உபாத்யாய.

பதினேழு ரஷ்யர்களுக்கு எவரெஸ்ட் ஏறும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் ரத்து செய்துள்ளனர். ரஷ்யாவின் நாணயம் ரூபிளின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் படையெடுப்பைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள், அந்த நாட்டின் பொருளாதாரம் குறிவைக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் கரன்சியை பெறுவதில் சிரமம் ஆகியவற்றால் ரஷ்யர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீசனுக்குத் தேவையான பொருட்கள் ஷெர்பாக்களின் கூடாரத்தைச் சுற்றி குவிந்துள்ளன.

பட மூலாதாரம், BBC/ANBARASAN

படக்குறிப்பு, சீசனுக்குத் தேவையான பொருட்கள் ஷெர்பாக்களின் கூடாரத்தைச் சுற்றி குவிந்துள்ளன.

அடிவார முகாம் வரை உள்ள சிறிய கிராமங்கள் ஆயிரக்கணக்கான ட்ரெக் செய்பவர்கள் மற்றும் மலையேறுபவர்களுக்கு உயிர்நாடியாக உள்ளன. இங்கும் யுக்ரேன் மீதான போர், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"போர் தொடங்கிய பிறகு எரிபொருள் விலையும், மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்தன. நாங்கள் தொழிலை நடத்த அவை மிகவும் முக்கியம். விலை மேலும் உயரக்கூடும் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அது மிகவும் கவலை அளிக்கிறது," என்று ஃபக்டிங்கின் கிராமத்தில், ஷெர்பா கிராம விருந்தினர் மாளிகையை நடத்தும் அங் தாவா ஷெர்பா கூறுகிறார்..

நேபாள அரசு இந்த ஆண்டு இதுவரை நான்கு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் பொருட்களை கொண்டு வருவதற்கு அதிக செலவாகிறது.

நேபாள அரசு என்ன சொல்கிறது?

சமீபத்திய ஆண்டுகளில் அதிகமான மக்கள் எவரெஸ்டில் ஏற விரும்புவதால், ஏறும் பாதைகளில் கூட்டம் அதிகரித்துவிட்டதா என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

2019 இல் பனி மூடிய பாதையில், நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளையும் எழுப்பியது.

நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறுகிறது.

"எவரெஸ்டில் உள்ள கூட்ட நெரிசலைத் தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். மலையேறுபவர்களுக்கு நீண்ட கால அனுமதிகளை வழங்க எங்கள் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. பயணங்களை ஒழுங்குபடுத்த இது உதவும்," என்கிறார் காத்மாண்டுவில் உள்ள சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் மகேஷ்வர் நியூபேன்.

2018 ஆம் ஆண்டு முகாம் 4 ஐச் சுற்றி சிதறிக்கிடக்கும் தூக்கி எறியப்பட்ட உபகரணங்கள் மற்றும் குப்பைகள்

பட மூலாதாரம், DOM SHERPA/AFP

படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு முகாம் 4 ஐச் சுற்றி சிதறிக்கிடக்கும் தூக்கி எறியப்பட்ட உபகரணங்கள் மற்றும் குப்பைகள்

பயணக் குழுக்களைக் கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு, மலையேறும் சீசன் முழுவதும் அடிவார முகாமில் நிறுத்தப்படும் என்று நியூபேன் கூறுகிறார்.

மக்கள் விட்டுச்செல்லும் குப்பைகளும் பெரும் பிரச்னையாகின்றன.

"இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. எவரெஸ்ட் மற்றும் பிற மலைகளில் எஞ்சிய குப்பைகள், இறந்த உடல்கள் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் இன்னும் உள்ளன," என்று சாகர்மாதா தேசிய பூங்காவின் தலைமை வார்டன் பூமிராஜ் உபாத்யாய பிபிசியிடம் தெரிவித்தார்.

"நேபாள ராணுவம் இப்போது அவற்றை அகற்றுவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இது கடினமான வேலை."என்கிறார் அவர்.

அடிவார முகாமில், ஆங் சர்க்கி ஷெர்பா மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் அடுத்த நாள் மலை ஏறுவது பற்றி விவாதிக்கின்றனர்.

எவரெஸ்ட் போன்ற மலைகள் வேலை செய்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் அவர்களைப் போன்றவர்களுக்கும், அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் இதுதான் வாழ்வாதாரமாக உள்ளது.

கூடுதல் செய்திகளை அளித்தவர்: நேபாளத்தில் உள்ள சுரேந்திர ஃபுயல்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :