நெட்ஃபிளிக்ஸ்: மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை இழந்ததற்கு காரணம் என்ன?

நெட்ஃபிளிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சந்தாதாரர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் தங்கள் தளத்தில் பதிவு செய்யும் நோக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், சந்தாதாரர்கள் குடும்பத்திற்கு இடையே கடவுச்சொற்களைப் பகிர்வதைத் தடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த துறையில், கடுமையான போட்டி நிலவி வருவதால், நெட்ஃபிலிக்ஸை பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 2,00,000 குறைந்துள்ளது.

இந்நிறுவனம் சில நாடுகளில் அதன் சந்தா விலையை உயர்த்தியதும், சமீபத்தில் ரஷ்யாவை விட்டு வெளியேறியதும் இதன் பாதிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஜூலை முதல் மூன்று மாதங்களில், மேலும் இரண்டு மில்லியன் சந்தாதாரர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அதன் பங்குதாரர்களை எச்சரித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, "எங்கள் வருவாய் வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ளது," என்று அந்நிறுவனம் அதன் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு பங்குதாரர்களிடம் கூறியுள்ளது.

"ஒப்பீட்டளவில் குடும்பங்களுக்கிடையே நடக்கும் நெட்ஃபிளிக்ஸ் கணக்கு பகிர்வு உயர்ந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தங்களுக்குள் கணக்குகளைப் பகிர்ந்துகொள்வதும், துறைசார்ந்த போட்டியுடன் இணைந்து, வருவாய் வளர்ச்சியின் விதியை மாற்றியுள்ளது" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் கடவுச்சொற்களைப் பகிர்வதன் மூலம் தனது நிறுவனத்தின் விதிகளை மீறுவதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இந்த கணக்குப் பகிர்வு போக்கும், நெட்ஃபிளிக்ஸ் வளர்ச்சியில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், சந்தாதாரர்களின் இந்த செயல்பாடு தங்களது நிறுவனம் சில நாடுகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை மிகவும் கடினமாக்குகிறது என்று செவ்வாய்கிழமையன்று ஹேஸ்டிங்ஸ் கூறியுள்ளார்.

"நாங்கள் வேகமாக வளர்ச்சியடையும்போது, கணக்குகளை பகிர்வது குறித்து சிந்திப்பது எங்களின் முக்கிய நோக்கமாக இருக்கவில்லை. ஆனால், தற்போது, நாங்கள் அதற்கு மிகவும் கடினமாக வேலை செய்கிறோம்", என்று பங்குதாரர்களிடம் அவர் தெரிவித்தார்.

நெட்ஃபிளிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

லத்தீன் அமெரிக்காவில் கடவுச் சொல்லைப் பகிர்வதைத் தடுக்கும் கட்டண திட்டங்கள் பரிசோதிக்கப்படுவதாகவும், அது மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த மாதம் முதல், சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெருவில், நெட்ஃபிளிக்ஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கான பயனர் சுயவிவரங்களைச் சேர்க்க பணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. (தற்போது அந்நிறுவனம் வீட்டில் ஒன்றாக வசிப்பவர்கள், தங்கள் நெட்ஃபிளிக்ஸ் கணக்கைப் பகிர அனுமதிக்கிறது).

இதன்படி, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2 முதல் 3 டாலர் செலவில், இரண்டு கூடுதல் நபர்களை தங்கள் வழக்கமான சந்தா கட்டணத்தில் சேர்க்கலாம்.

நெட்ஃபிளிக்ஸ் இந்த விதியை எவ்வாறு செயல்படுத்தவுள்ளது என்பதை விரிவாக விளக்கவில்லை. அந்நிறுவனம் "வாடிக்கையாளர்களை மையமாகக்கொண்ட" தீர்வை காண்பதற்கு முயற்சி செய்வதாக கூறுகிறது.

இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் கூறுகையில், "எங்கள் சந்தாதாரர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சேவையைப் பகிர்ந்து கொள்ள இன்னும் சற்றே கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்பதே எங்களிடம் உள்ள அடிப்படை வழி" என தெரிவிக்கிறார்.

கன்டார் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் டொமினிக் சன்னெபோ, நுகர்வோர் பணத்தைச் சேமிப்பதற்கான வழிகளைத் தேடும் நேரத்தில் இந்தத் திட்டம் அதற்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கிறார்.

"கடவுச்சொல் பகிர்வை எதிர்ப்பதற்கான திட்டங்கள் மிக வேகமாகவும் மிகவும் அதிரடியாகவும் நடந்தால், அது எதிர்கால வாடிக்கையாளர்களை அந்நியப்படுத்தும் அபாயமும் உள்ளது. குடும்பத்திற்கு வெளியே கடவுச்சொல் பகிர்வு செய்யும் பலருக்கு உண்மையில் அவர்கள் சந்தா விதிமுறைகளை மீறுவது தெரியாது" என்று அவர் கூறுகிறார்

வாழ்வாதாரம் பாதிப்பு

யுக்ரேன் போருக்கு பதிலளிக்கும் விதமாக மார்ச் மாதம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதால் 700,000 சந்தாதாரர்களை இழந்ததாக நெட்ஃபிளிக்ஸ் கூறியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மேலும் அமெரிக்காவிலும் கனடாவிலும், ஜனவரியில் விலைகளை உயர்த்திய பிறகு, 6,00,000 பேர் அதன் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

அமெரிக்காவில், அந்நிறுவனம் அதன் அனைத்து திட்டங்களிலும் விலைகளை உயர்த்தியது. அடிப்படைத் திட்டமானது மாதத்திற்கு 9 டாலரில் இருந்து 10 டாலராகவும், ஸ்டாண்டார்ட் திட்டமானது 14 டாலரில் இருந்து 15.50 ஆகவும் அதிகரித்தது.

சந்தா ரத்து செய்யப்பட்ட போதிலும், இந்த விலை உயர்வு நிறுவனத்திற்கு அதிக லாபத்தை அளிக்கும் என்று நெட்ஃபிளிக்ஸ் நம்புகிறது.

ஆனால், வாழ்வாதாரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதால், ஸ்ட்ரீமிங் சேவைகளின் விலை உயர்வு, வீடுகளில் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள குடும்பங்கள் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் சந்தாக்களை ரத்து செய்துள்ளன. அவர்களில் 38% பேர் பணத்தைச் சேமிக்க விரும்புவதாகக் கூறுகின்றனர்.

எனவே, நெட்ஃபிக்ஸ் அதன் போட்டியாளர்களான டிஸ்னி மற்றும் எச்பிஓ போன்று விளம்பரங்களை அனுமதிக்க ஆலோசித்து வருவதாக என்று ஹேஸ்டிங்ஸ் கூறினார்.

இதுவரை விளம்பரங்களைத் தவிர்த்து வந்த இந்நிறுவனத்திற்கு, அது குறிப்பிடத்தக்க புதிய வருமானத்தை அளிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நெட்ஃபிளிக்ஸ் தனது சந்தாதாரர்களைத் தக்கவைத்து வருவாயை உயர்த்துவதன் மூலம் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. இதுகுறித்து, 'பிபி ஃபார்ஸைட்' என்ற நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளரான பவ்லோ பெஸ்க்டோர், நெட்ஃபிளிக்ஸின் சந்தாதாரர் இழப்பு ஒரு "உண்மை நிலையை அறிதல்" என்று கூறினார். நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிற சேவைகள் ஊரடங்கின்போது அதிகம் பயன்படுத்தப்பட்டபோதிலும், பயனர்கள் இப்போது மாறிவரும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இத்தகைய விஷயங்களில் செலவிடும் போக்கை பற்றி இருமுறை யோசித்து வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

சந்தாதாரர்களின் வெளியேற்றம்

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 22 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையாக உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சந்தாதாரர்களில் தடையின்றி காலாண்டு வளர்ச்சியை அனுபவித்து வருகிறது.

இருப்பினும், கொரோனா தொற்று காலத்தின் போது, சந்தாதாரர்களின் திடீர் வளர்ச்சி, அதை சுற்றியுள்ள உண்மையான நிலைமையை "மறைத்து விட்டது" என்று அந்நிறுவனம் கூறுகிறது. இது ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 7.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 9.8% அதிகமாகும்.

இது முந்தைய காலாண்டுகளில் இருந்து ஒரு மந்தநிலையைக் குறித்தது. அதே நேரத்தில் லாபம் 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, சுமார் 1.6 பில்லியன் டாலர் ஆக இருந்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :