53 வயது பெண்ணின் தோல் செல்களை 23 வயது போல் ஆக்கிய ஆய்வு: பிற உறுப்புகளில் சாத்தியமாகுமா?

பட மூலாதாரம், FÁTIMA SANTOS
- எழுதியவர், பல்லவ் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
ஆய்வாளர்கள் 53 வயதான பெண் ஒருவரின் தோல் உயிரணுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளனர். அதனால், அவருடைய தோல் உயிரணுக்கள் சில தற்போது 23 வயது இளைஞருடைய தோல் அணுவுக்கு நிகராக உள்ளது.
கேம்ப்ரிட்ஜில் உள்ள விஞ்ஞானிகள், உடலில் உள்ள மற்ற திசுக்களிலும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற வயது தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையை உருவாக்குவதே இதன் இறுதி நோக்கமாகும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு குளோன் செய்யப்பட்ட டாலி என்ற செம்மறி ஆட்டை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் குழுவின் தலைவர், கேம்ப்ரிட்ஜில் உள்ள பாப்ரஹாம் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் வுல்ஃப் ரெய்க், பிபிசி நியூசிடம் பேசியபோது, இந்த நுட்பம் மக்கள் வயதாகும்போது ஆரோக்கியமாக இருக்கப் பயன்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
"நாங்கள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தோம். பல பொதுவான நோய்கள் வயதுக்கு ஏற்ப மோசமடைகின்றன. இந்த வழியில் மக்களுக்கு உதவ முடியும் என்று நினைப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
மேலும், இலைஃப் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இதுகுறித்த ஆய்வு, ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக பேராசிரியர் ரெய்க் வலியுறுத்தினார். இந்த நுட்பம் தனது ஆய்வகத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனைகளுக்கு பயன்பாட்டிற்குச் செல்வதற்கு முன்பு பல அறிவியல் சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியுள்ளதாகக் கூறினார். அதோடு, உயிரணுக்களுக்கு புத்துணர்ச்சி வழங்குவது சாத்தியம் என்பதை முதன்முறையாக நிரூபிப்பது ஒரு முக்கியமான நகர்வு என்றும் கூறினார்.
குளோன் செய்யப்பட்ட செம்மறி ஆடு
இந்த வகையான நுட்பம், 1990-களில் உருவாக்கப்பட்டது. எடின்பரோவுக்கு வெளியே இருக்கும் ரோஸ்லின் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வயது வந்த செம்மறி ஆட்டில் இருந்து எடுக்கப்பட்ட பாலூட்டி சுரப்பி அணுவை கருவாக மாற்றும் முறையை உருவாக்கினார்கள். அது, டாலி என்ற க்ளோன் செய்யப்பட்ட செம்மறி ஆட்டை உருவாக்க வழிவகுத்தது.
ரோஸ்லின் குழுவின் நோக்கம், குளோன் செய்யப்பட்ட செம்மறி ஆடுகளையோ மனிதர்களையோ உருவாக்குவதாக இருக்கவில்லை. மனித கரு ஸ்டெம் செல்களை உருவாக்க அந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. இவை, தசை, குருத்தெலும்பு, நரம்பு அணுக்கள் போன்ற குறிப்பிட்ட திசுக்களாக வளர்த்து தேய்ந்து போன உடல் பாகங்களை மாற்ற முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

2006-ஆம் ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர் ஷின்யா யமனகாவால் டாலி நுட்பம் எளிமைப்படுத்தப்பட்டது. ஐபிஎஸ் எனப்படும் புதிய முறை, வயது வந்த அணுக்களில் சுமார் 50 நாட்களுக்கு வேதிப்பொருள்கள் சேர்ப்பதை உள்ளடக்கியது. இதன் விளைவாக மரபணு மாற்றங்கள் வயது வந்த உயிரணுக்களை ஸ்டெம் செல்களாக மாற்றியது.
டாலி மற்றும் ஐபிஎஸ் நுட்பங்கள் இரண்டிலும் உருவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அணுக்கள் மற்றும் திசுக்களாக வளர வேண்டும். இது கடினமானது. பல பத்தாண்டு கால முயற்சிகள் இருந்தபோதிலும், நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்துவது தற்போது மிகவும் குறைவாகவே உள்ளது.
பேராசிரியர் ரெய்க் மற்றும் அவரது குழுவினர், 53 வயதான தோல் உயிரணுக்களில் ஐபிஎஸ் நுட்பத்தைப் பயன்படுத்தினர். ஆனால், அவர்கள் உயிரணுக்களை ரசாயனத்தில் வைத்திருப்பதை 50 நாட்களில் இருந்து சுமார் 12 நாட்களாகக் குறைத்துக் கொண்டனர். உயிரணுக்கள், கரு ஸ்டெம் செல்களாக மாறவில்லை. ஆனால், அவை 23 வயதான ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்டதைப் போலத் தோற்றமளிக்கும் அளவுக்கு புத்துயிர் பெற்றது. இதைக் கண்டு டாக்டர் தில்கீத் கில் ஆச்சர்யப்பட்டார்.
"ஆய்வின் முடிவுகள் எனக்குக் கிடைத்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. மேலும், சில உயிரணுக்கள் இருக்கவேண்டிய வயதை விட 30 ஆண்டுகள் இளையவையாக இருந்ததை நான் நம்பவே இல்லை. அது மிகவும் உற்சாகமான நாளாக இருந்தது," என்று அவர் கூறினார்.
முதிர்ச்சியடைவதைத் தடுக்கும் மாத்திரைகள்
இந்த நுட்பத்தை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப முடியாது. ஏனெனில், ஐபிஎஸ் செயல்முறை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால், பெராசிரியர் ரெய்க் உயிரணுக்களுக்கு புத்துயிர் அளிப்பது சாத்தியம் என்பது தெரிந்துவிட்டதாகவும் அவருடைய குழு இந்தச் சிக்கலுக்கு மாற்றாக, ஒரு பாதுகாப்பான முறையைக் கண்டுபிடிக்கும் என்றும் நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"மனிதர்களின் ஆயுட்காலத்தைவிட, ஆரோக்கியத்தை நீட்டிப்பதே இந்த ஆய்வின் நீண்டகால இலக்கு. இதன்மூலம் மக்கள் ஆரோக்கியமாக தங்கள் முதிர்ச்சியை அடைய முடியும்," என்று அவர் கூறினார்.
முதியவர்கள் வெட்டப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடலின் சில பகுதிகளில் தோலை புத்துயிர் பெறச் செய்வதற்கான மருந்துகளை உருவாக்குவதே இதன் முதல் பயன்பாடாக இருக்கலாம் என்று பேராசிரியர் ரெய்க் கூறுகிறார். காயத்தின் மீதான சோதனைகளில் புத்துயிர் பெற்ற தோல் அணுக்கள் அதில் விரைவாக நகர்வதைக் காட்டுவதன் மூலம், இது கோட்பாட்டளவில் சாத்தியம் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதற்கு அடுத்தகட்டம், தசை, கல்லீரல், ரத்த அணுக்கள் போன்ற மற்ற திசுக்களில் தொழில்நுட்பம் செயல்படுமா என்பதைப் பார்ப்பதாகும்.
டாலி செம்மறி ஆட்டை உருவாக்க வழிவகுத்த ஆய்வுக்கான ஒரு பகுதி நிதியுதவியை அளித்த உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் நிர்வாகத் தலைவரான பேராசிரியர் மெலனி வெல்ஹாம், இந்தத் தொழில்நுட்பத்தால் கிடைக்கக் கூடிய நீண்டகால மருத்துவப் பலன்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிபிசி நியூசிடம் கூறினார்.
"இதேபோன்ற அணுகுமுறைகள் அல்லது புதிய சிகிச்சைகள், முதிர்ச்சியடையும்போது எதிர்செயலாற்றும் திறன் குறையக்கூடிய நோய் எதிர்ப்பு உயிரணுக்களை புத்துணர்ச்சியடையச் செய்யுமானால், எதிர்காலத்தில் தடுப்பூசிக்கு எதிர்செயலாற்றக்கூடிய மக்களின் திறனையும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனையும் அதிகரிக்க முடியும்," என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Science Photo Library
இந்த ஆய்வு முயற்சிகள், முழு உடலையும் மீட்டுருவாக்குவது, முதிர்ச்சியடைவதைக் கட்டுப்படுத்தும் மாத்திரை ஆகியவற்றுக்கு வழிவகுக்குமா என்ற பெரிய கேள்வி எழுகிறது. இது முற்றிலும் தொலைவில் இல்லை என்கிறார் ரெய்க்.
மேலும், "இந்த நுட்பம் மரபணு மாற்றப்பட்ட எலிகளுக்குப் பயன்படுத்தப்பட்டபோது புத்துணர்ச்சிக்கான சில அறிகுறிகள் உள்ளன. ஓர் ஆய்வு, நீரிழிவு நோயைச் சமாளிக்கும் திறனைக் கொண்டுள்ள, கணையம் புத்துணர்வூட்டப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டியது," என்றும் கூறினார்.
முழு உடலும் பாதுகாப்பாக இருக்குமா?
ஆனால் லண்டனில் உள்ள க்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த ராபின் லாவெல்-பேட்ஜ், ஆய்வகத்தில் ரெய்க்கின் முடிவு மற்றும் எளிமையான மருத்துவ பயன்பாடுகளுக்கு இடையேயுள்ள அறிவியல் தடைகள் கணிசமானவை என்று நம்புகிறார். அவர், புத்துணர்வு செயல்முறையை மற்ற வகை திசுக்களுக்கு அல்லது உண்மையில் முதிர்ச்சியடைவதைக் கட்டுப்படுத்தும் மாத்திரையாக உருவாக்குவதை அற்பமானதாக நினைக்கவில்லை.
"இதே செயலைச் செய்ய மற்ற ரசாயனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தால், அது நன்றாக இருக்கலாம். ஆனால், அதேநேரம் அவை மோசமான விளைவுகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். எனவே, இந்த ரசாயனங்களை நீங்கள் எளிதாகக் கண்டுபிடிபீர்கள் என்றும் அவை பாதுகாப்பாக இருக்கும் என்றும் நினைப்பது மிக உயர்ந்த லட்சியமாகும்," என்றும் கூறுகிறார் பேராசிரியர் லாவெல்-பேட்ஜ்
கட்டுப்படுத்த கடினமான இருக்கக்கூடிய மற்ற வகை அணுக்களைக் கட்டுப்படுத்த வெவ்வேறு சூழ்நிலைகள் தேவைப்படலாம். உங்கள் முழு உடலையும் இந்தச் செயல்முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது மிகவும் தொலைவில் இருக்கக்கூடிய ஊகமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













