மண்ணுக்கு 'முழு உடல் பரிசோதனை' செய்தீர்களா? அது ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
மனிதர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கிறோம். இந்த மனித உடலுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகள் தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் உணவை வழங்கும் மண்ணுக்கு ஏன் உடற்பரிசோதனை செய்யவேண்டும்? மண்ணுக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது?
இது தொடர்பாக 5 கேள்விகளைக் கேட்டு பதில்களைப் புரிந்து கொள்வோம்.
1. மண் என்ன செய்கிறது?
ஒன்றிரண்டு அங்குல ஆழமுள்ள மேல் மண்ணில்தான் ஆகப் பெரும்பாலான உயிரியல் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. நுண்ணுயிரிகள் வளர்வது முதல் தாவரங்கள் வேர்கொள்வதில் இருந்து சிற்றுயிர்கள் உயிர்கொள்வது வரை எல்லாம் இந்த ஒன்றிரண்டு அங்குல மண்ணில்தான்.
மனித உடலுக்குத் தேவையான 16 வகை ஊட்டச் சத்துகளும், மிக நுண்ணிய அளவிலான பிற சத்துகளும் மண்ணில் உள்ளன. தண்ணீர் இந்த சத்துகளைக் கரைத்துக்கொடுத்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் இவற்றைக் குழைத்து தாவரங்களின் வேர்களுக்கு ஊட்டும் வேலையைச் செய்யும். இந்த நுண்ணுயிரிகளும், மண்ணும் நலமுடன் இருக்கவேண்டுமானால், மட்கிய தாவரப் பொருள்கள் தேவை.
தாவரங்களை மண் இப்படி போஷிக்கிறது என்றால், இன்றைக்கு உலகை ஆட்டிவைக்கும் உலக வெப்பமயமாதலையும், கார்பன் உமிழ்வையும் கட்டுப்படுத்துவதில் மண் முக்கியப் பங்கு வகிக்கிறது. காற்றுமண்டலத்தில் விடாமல் கரிமத்தை பெரிய அளவில் புதைத்துவைத்துக்கொள்கிற ஒரே விஷயம் மண்தான் என்கிறார் ஒரு வேளாண் அலுவலர்.
நீங்கள் எரித்தால் கார்பன் காற்றில் கலக்கிறது. அதுவே புதைத்தால் கார்பன் மண்ணில் கலந்துவிடுகிறது. காற்றில் கலந்த கார்பன் புவியை வெப்பமாக்கும். காற்று மண்டலத்தை மாசுபடுத்தும். உடலுக்கு தீங்கு செய்யும். ஆனால், மண்ணில் கார்பன் கலந்துவிட்டால், தீவிளைவுகள் ஏதும் செய்யாமல் சாந்தமாக மண்ணில் உறங்கிவிடும்.

பட மூலாதாரம், Getty Images
உலகின் மிகப்பெரிய கார்பன் சிறைச்சாலை, கார்பன் புதைகுழி மண்தான்.
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி என்று தொடங்கும் குறளில், தண்ணீர் உணவை விளைவிப்பது மட்டுமல்லாமல் தாமே உணவாகிறது என்று கூறியிருப்பார் திருவள்ளுவர். ஆனால், மண்ணோ, இதற்கு மாறாக உணவை, உயிர்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் சூழலுக்கு நஞ்சாகும் கார்பனை புதைத்தும் வைத்துக்கொள்கிறது.
மண்ணுக்கு என்ன பிரச்னை?
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஒரு கல்லூரி விழாவுக்கு வந்திருந்த அப்போதை பிரதமரின் அறிவியல் ஆலோசகரும் பின்னாளைய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம், ஒரு தகவலை சொன்னார். பசுமைப் புரட்சி நாயகரான முன்னாள் இந்திய வேளாண் அமைச்சர் சி.சுப்ரமணியன் சாகும் முன்பு இரண்டாவது பசுமைப்புரட்சி காணவேண்டும் என்று விரும்பியதாகவும் அது மண் வளப் பாதுகாப்பில் தொடங்கி, சந்தைப்படுத்தல் வரை வேளாண்மையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று விரும்பியதாகவும் கூறினார்.
1960களில் தொடங்கிய பசுமைப் புரட்சி இந்தியாவின் உணவுப்பொருள் பற்றாக்குறையை வெற்றிகொள்ள உதவிய அதே நேரம் அது மண்வளத்தை பாழ்படுத்துவதாக தொடர்ந்து சுற்றுச்சூழல் வாதிகளால் முன்வைக்கப்படும் விமர்சனத்தை உள்வாங்கிக் கொண்டுதான் சி.சுப்ரமணியம் இதைக் கூறியிருக்கக்கூடும். அதாவது, அப்துல் கலாம் கூறிய தகவல் உண்மையானால்.
பசுமைப் புரட்சி எப்படி மண் வளத்தைப் பாழ்படுத்தியது? வீரிய விதைகல், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நவீன கருவிகள் உதவியோடு இந்தியாவின் வேளாண்மையை நவீனப்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கியதே பசுமைப்புரட்சி செய்த பணி.
நுண்ணுயிர்களை செழிக்கவைக்கும் மட்கல்களுக்குப் பதில் வேதி உரங்களை அதிகம் பயன்படுத்தியது மண்ணின் நலனைப் பாதுகாக்கும் அங்ககப் பொருள்களை மண்ணில் இல்லாமல் செய்து, மண்ணை இறுகிப் போகச்செய்தது என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு வேளாண் அலுவலர்.

பட மூலாதாரம், Getty Images
வேதி உரங்களின் ஒரு பகுதியாக பரவலாகப் பயன்படுத்தப்படும் யூரியாவில் பெருமளவில் நைட்ரஜன் இருக்கிறது. பயிர்களுக்கு இடப்படும் யூரியா இலைகள் செழித்து வளரப் பயன்படுகின்றன. ஆனால், விவசாயிகள் தேவைக்கு அதிகமாக யூரியாவை பயன்படுத்தும் நிலைக்கு சென்றுவிட்டனர். நிலத்தில் போடப்படும் யூரியாவில் சிறிய அளவே பயிர்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மிகுதியான யூரியா காற்றையும், மண்ணையும் மாசு படுத்துகிறது என்கிறார் அவர்.
"மண்ணின் வேதி உள்ளடக்கம் மிகவும் சிக்கலானது. ஒரு வேதிப் பொருளை அதில் செயற்கையாக சேர்த்தால், மண்ணில் உள்ள இன்னொரு வேதியியல் கூறு பாதிக்கப்படும். எனவே கவனமாக கண்காணித்து, தேவை அறிந்து மற்ற வேதிப் பொருள்களின்மீதான அதன் தாக்கம் அறிந்தே உரம் போடவேண்டும். பழைய கேமிராக்களின் லென்ஸ்களை இடதும், வலதுமாகத் திருப்பி ஃபோகஸ் செய்வதைப் போல தேவைக்கேற்ப வேதி உள்ளடக்கத்தை கவனமாக மாற்றியமைப்பதே உகந்தது," என்கிறார் வேளாண் விஞ்ஞானியும் தமிழ்நாடு பல்லுயிர்ப்பெருக்க வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான முனைவர் வெ.அறிவுடைநம்பி.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க உலகம் முழுவதும் வேதி உரங்களை மிகையாகப் பயன்படுத்தியதன் விளைவாக மண்ணின் நலம் கெட்டுக் கிடக்கிறது. அதன் வளமும், திறனும் குறைகிறது. இதனால், மேலும் அதிகம் வேதி உரங்களைப் பயன்படுத்தும் நெருக்கடிக்கு விவசாயிகள் ஆளாகிறார்கள். இதனால், மண் வளம் மேலும் வேகமாக கெடுகிறது. இது ஒரு அபாயமான பிரச்சனையாக உருவெடுக்கிறது. இதை கவனமாக கையாளத்தான் வேண்டும் என்கிறார் அவர்.
மண் நலத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?
"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்" என்கிறார் வள்ளுவர். ஒரு மடங்கு மண் கால் மடங்காகும் அளவுக்கு உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும்கூட தேவையில்லை என்று உரையாசிரியர்கள் இதற்குப் பொருள் சொல்கிறார்கள். மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகளை பயிர் எடுத்துக்கொள்ள ஏதுவாக நைய உழுதுவிடுவதால், வேறு உரமே தேவைப்படாது என்ற பொருளில் அவர் அப்படிக் கூறியிருக்கலாம்.
ஆனால், உரம் போடவேண்டும் என்ற நிலை வரும்போதுகூட அந்த மண்ணில் எந்த சத்துகள் உள்ளன. எந்த சத்துகள் குறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு தேவையான அல்லது குறைவாக உள்ள சத்துகளை மண்ணுக்கு அளிக்க வேண்டும். அல்லது உள்ள சத்துக்கு ஏற்ற பயிரை செய்யவேண்டும். பயிர் சுழற்சிகள் மூலமும், பசுந்தாள் உரங்கள் மூலமும் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகளை மீட்டமைக்க வேண்டும் என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு வேளாண் அலுவலர்.
அத்துடன், நம் பயிர்களுக்கு சுமார் 16 வகை ஊட்டச் சத்துகள் தேவைப்படும் நிலையில், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய மூன்றை மட்டுமே மண்ணுக்கு வழங்கும் என்.பி.கே. உரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த என்.பி.கே. விளைச்சலைக் கூட்டலாம், ஆனால், பிற சத்துகள் குறைவாக உள்ள மண்ணில் உற்பத்தியாகும் உணவில் நுண் சத்துகள் குறைபாடு இருக்கும். இது மக்களின் உடல் நலத்திலும் பிரதிபலிக்கும் என்கிறார் அவர். ட்ரேசபிள் நியூட்ரியன்ட் என்று கூறப்படும் மிகக் குறைவான அளவிலேயே உள்ள சில சத்துகள் நம் உடலில் உள்ள பல முக்கிய சுரப்பிகளின் நலனுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.
மண்ணின் நலனை மீட்டு பல்வகை ஊட்டச் சத்துகளை மண்ணுக்கு மீளக் கொடுப்பதற்கும், மண்ணின் நுண்ணுயிர்த் திரளை நலமுடன் காப்பதற்கும் பசுந்தாள் உரங்களும், மட்கல்களும் மிக முக்கியம் என்று கூறும் அவர், மண்ணில் குறையும் ஊட்டச்சத்துகளை, மண்ணில் உள்ள சத்துகளைக் கண்டறிய அனைவரும் மண் பரி சோதனை செய்வது மிக மிக இன்றியமையாதது என்கிறார் அவர். தொடர்ந்து சில வகை உணவுப்பயிர்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பயிரிட்டு மண்ணில் குறிப்பிட்ட வகை சத்ததுகளை உறிஞ்சியிருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு சாகுபடிக்கு முன்பும், பின்பும் மண்ணில் என்ன சத்து எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பது மிக முக்கியம் என்கிறார் அவர்.
மண் பரிசோதனை செய்வதில் என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மண் பரிசோதனை மையங்கள் உள்ளன. தவிர, நடமாடும் மண் பரிசோதனை நிலையம் ஒன்றும் உண்டு. ஆனால், மிகக் குறைவான அளவிலேயே இவற்றில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். முடிவுகள் துல்லியமாகவும் இருக்க வாய்ப்பில்லை என்று பிரச்சனையை அடுக்குகிறார் ஒரு வேளாண் அலுவலர். மின்னணு முறையில் செயல்படக்கூடிய மிக விரைவாக சில நொடிகளில் துல்லியமான முடிவைத்தரக்கூடிய கருவிகளை தருவித்து தேவையான அளவில் நிறுவவவேண்டும் என்கிறார் அவர்.
எடுத்துக்காட்டாக ஒரு மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக கொண்டால், இரண்டு போகத்துக்கு 10 லட்சம் ஏக்கர் பயிர் செய்யப்படும். ஒவ்வொரு பயிருக்கும் முன்பு ஒரு ஏக்கருக்கு ஒரு மாதிரியை பரிசோதனை செய்யவேண்டும் என்றால் 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் அதற்குத் தேவையான அளவில் நவீனமான கருவிகள் தேவை என்கிறார் அவர்.
ஆனால், வேறு சில அலுவலர்களோ அவரோடு மாறுபடுகிறார்கள். இவ்வளவு பரிசோதனைகள் தேவையில்லை என்கிறார்கள். ஆனால், துல்லியமான முடிவுகளைத் தரும் வகையில் கருவிகள் நவீனமடையவேண்டும் என்பதில் அனைவரும் உடன்படுகிறார்கள்.
மண் வளத்தை மீட்டமைக்க என்ன செய்யவேண்டும்?
பரிசோதனை செய்து, அதன் முடிவுகளுக்கு ஏற்ப தேவையான சத்துகளை மண்ணுக்கு அளிப்பது, பயிர் சுழற்சி செய்வது, மண்ணுக்கு ஏற்ற பயிர்களைச் செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் மண் வளத்தை மீட்டமைக்க முடியும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.
தழை உரங்களையும், எரு, வண்டல் முதலியவற்றையும், கடையில் விற்கும் நுண்ணூட்டச் சத்துகளையும், அமிர்தக் கரைசல் போன்ற இயற்கை விவசாய திரவங்களையும், உரங்களையும் தேவையான அளவில் தேவையான முறையில் கலந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள் சில வேளாண் அலுவலர்கள்.
ஆனால், மண் வளம் குறித்து கவலைப்படவும், அதன் மீது வினையாற்றுவதற்குமான தேவை தற்போது தீவிரமாக எழுந்திருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.
இப்போது ஏன் மண்வளம் குறித்து திடீர் அக்கறை தோன்றியிருக்கிறது என்று கேட்டபோது, "2021-2030 காலகட்டத்தை சூழல் அமைப்புகள் மீட்டெடுப்பு பதிற்றாண்டாக ஐ.நா அனுசரிக்கிறது. சூழல் அமைப்புகள் மீட்டெடுப்பு எனில், அதில் காடுகள் மீட்டெடுப்பு, சதுப்பு நில மீட்டெடுப்பு, கடற்கரைகள் மீட்டெடுப்பு என்ற வரிசையில் வேளாண் நிலங்களை மீட்டெடுப்பதும் வருகிறது. ஒரு அங்குல மேல் மண் உருவாக பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். ஆனால், வெள்ளத்தால், காடுகள் அழிப்பால் மண் அரிப்பு ஏற்படுகிறது. மிகையான வேதி உரங்கள் பயன்பாட்டாலும் மண் வளம் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மண்தான் உயிர்ப்பின் தொட்டில் எனவே, அதை மீட்டமைக்க வேண்டிய தேவை குறித்த விழிப்புணர்வு இப்போது ஏற்பட்டிருப்பது இயல்பானது" என்கிறார் அறிவுடை நம்பி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












