யுக்ரேன் போர்: ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கலாகி வரும் மக்கள் மீட்பு நடவடிக்கைகள்

கீயவ் ரஷ்யா யுக்ரேன் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கீயவை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான புதிய முயற்சிகள் நடந்து வருகின்றன. படத்தில் உள்ள 3 வயது குழந்தை கீயவை விட்டு வெளியேற காத்திருக்கிறது.

யுக்ரேனில் ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான புதிய முயற்சிகள் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலால் சிக்கலாகி வருவதாக யுக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேரியோபோல், சுமி, தலைநகர் கீயவுக்கு வெளியே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து மனிதாபிமான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கீயவ் அருகே உள்ள பெரேமோஹா கிராமத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த வாகனத் தொடரணியின் மீது ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கீயவ் மற்றும் பிற நகரங்களைச் சுற்றி சண்டைகள் தொடர்வதையடுத்து, அவற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பித்து வருகின்றனர்.

யுக்ரேனிய ராணுவ உளவுப்பிரிவு செய்திக்குறிப்பின்படி, "பொதுமக்களில் பிரத்யேகமாக பெண்கள் மற்றும் குழந்தைகள், ஆக்கிரமிப்பு (ரஷ்ய) படையினரால் சுடப்பட்டனர்." மேலும், "ரஷ்ய படையினரின் செயலால் ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்," என அதில் கூறப்பட்டுள்ளது.

தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களில் ஒன்றான இர்பினில் உள்ள பிபிசியின் அப்துஜலில் அப்துரசுலோவ், வெடிச்சத்தங்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் காரணமாக மனிதாபிமான போர் நிறுத்தம் இந்த இடங்களில் அமலில் இருப்பதாக கூற முடியாது என்றார். தொடர்ந்து இந்த பகுதிகளில் சண்டை நடந்து வருவதாகவும், வான் பாதுகாப்பு தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் அப்துஜலில் குறிப்பிட்டார்.

காணொளிக் குறிப்பு, யுக்ரேனில் இருந்து தப்பி போலாந்து நாட்டை அடைந்த இந்தியர்களின் நிலை என்ன?

சனிக்கிழமையன்று சுமார் 13 ஆயிரம் யுக்ரேனியர்கள் மனிதாபிமான பாதைகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் அதில் ஒருவர் கூட கடும் தாக்குதலை சந்திக்கும் மேரியோபோல் நகரில் இருந்து வரவில்லை என்கிறார் யுக்ரேனிய துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கூறினார்.

இரண்டு வார குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு மேரியோபோல் நகரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உணவு, தண்ணீர், மின்சார வசதிகள் குறைவாகவே உள்ளன என்கிறது ஐ.நா.

"உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான மருந்துகள் விரைவில் தீர்ந்து வருகின்றன, மருத்துவமனைகள் ஓரளவு மட்டுமே செயல்படுகின்றன, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது" என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

துணை மேயர் செர்ஹி ஓர்லோவ் பிபிசியிடம் பேசுகையில், "ஸாப்போரீஷியா நகருக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை சுமந்து கொண்டு ஒரு கான்வாய் புறப்பட்டுச் சென்றுள்ளது. அங்குள்ள மக்களை வெளியேற்றி அழைத்து வரும் பேருந்துகளும் அதில் அடக்கம்," என்று கூறினார்.

முன்னதாக, "இந்த கான்வாய்கள் செல்ல ரஷ்ய படையினர் அனுமதிக்கவில்லை. அவர்கள் குண்டுகளை வீசினார்கள், சாலைகளை முடக்கினார்கள், நகரின் பல இடங்களில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது," என்று ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 1,300 யுக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேட்டோ ராணுவ கூட்டணி போன்ற மேற்கு நாடுகள் தலைமையிலான ராணுவ கூட்டணியில் சேரும் நோக்கத்தில் யுக்ரேன் செயல்படுவது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் எனக் கூறி யுக்ரேன் மீது பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா படையெடுப்பை தொடங்கியது.

லுவீவ் நகரில் வான் தாக்குதல்

பிபிசி யுக்ரேனிய சேவையின்படி, லுவீவ் நகரில் ரஷ்யா வான் தாக்குதல்களை நடத்தியதாக யுக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அங்குள்ள சர்வதேச அமைதி காப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தை இலக்கு வைத்து ரஷ்யா எட்டு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மையம் யாவோரிவ் மாவட்டத்தில், லுவீவ் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ராணுவத்தின் பயிற்சி மைதானம் அமைந்துள்ளது. அங்கு தாக்குதலுக்குப் பிறகு காற்றில் புகை மாசு படர்ந்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சமீபத்திய தகவல்கள்

  • கீயவுக்கு வெளியே மோதல்கள்: ரஷ்ய படைகளின் பெரும்பகுதி தலைநக்ர கீயவில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக பிரிட்டிஷ் உளவுத்துறை எச்சரித்த வேளையில், தலைநகரின் வெளிப்பகுதியில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. ரஷ்ய படையினர் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த தயாராகி இருக்கலாம் என யுக்ரேனிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
  • முக்கிய நகரங்கள் சுற்றிவளைப்பு: யுக்ரேன் முழுவதும் பல நகரங்களில் சைரன் ஒலிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. முற்றுகையிடப்பட்ட நகரங்களான கார்ஹிவ், மேரியோபோல், மிக்கோலைவ் மற்றும் சுமி நகரில் இடைவிடாத ஷெல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
  • புதிதாக வான் தாக்குதல்: டினீப்ரோ, க்ரோபிவினிட்ஸி நகரங்களில் பீரங்கி தாக்குதல்களும் வான் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
  • ரஷ்யா எச்சரிக்கை: யுக்ரேனுக்கு மேற்கு நாடுகள் வழங்கி வரும் ஆயுதம் தாங்கிய தளவாடங்கள்தான் ரஷ்ய படையினருக்கான இலக்கு என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
  • மேயரை சிறைப்பிடித்த ரஷ்ய படை: தென்கிழக்கு நகரான மெலிட்டோபோலில் நகர மேயரை ரஷ்ய படையினர் சிறைப்பிடித்துச் சென்றதற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • புதிய பேச்சுவார்த்தை: தாக்குதல் நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாகி வரும் வேளையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை தொலைபேசி வாயிலாக மேற்கொண்டனர்.
  • வெளியேறும் அகதிகள்: யுக்ரேன் மீதான தாக்குதல்களால் அந்த நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு தப்பி வந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. தமது நாட்டுக்கு 16 லட்சம் யுக்ரேனியர்கள் வந்துள்ளதாக போலாந்து கூறியுள்ளது. மால்டோவா அரசு அகதிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத கட்டத்தை எட்டி விட்டதாக தெரிவித்துள்ளது.
line

சமீபத்திய படையெடுப்பை காட்டும் வரைபடம்

Map of areas under Russian attack or control

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: