You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கொரோனா உயிரிழப்பு அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட 18 மில்லியன் அதிகம்" - ஆய்வு
- எழுதியவர், மிஷெல் ராபர்ட்ஸ்
- பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர்
அதிகாரபூர்வ பதிவுகளில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட, மூன்று மடங்கு அதிகமாக, 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் (18 மில்லியன்) கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த ஆய்வு 'தி லேன்செட்' ஆராய்ச்சி இதழில் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார மையம் கொரோனா தொற்றுநோயை முதல் முறையாக அறிவித்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் குறித்து ஆராயும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் குழுவானது, 191 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுகுறித்து ஆய்வு செய்தது. இதனை உண்மையான உலகளாவிய இறப்பு எண்ணிக்கை என அழைக்கின்றனர்.
இந்த இறப்புகளில் சில கொரோனா தொற்றால் நேரடியாக ஏற்பட்டவையாகும். மற்ற இறப்புகள் கொரோனா தொற்றுடன் தொடர்புடையவை ஆகும்.
அதவாது, இதயம் அல்லது நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட ஏற்கெனவே உள்ள இணை நோய்கள் கொரோனா பாதிப்பால் மோசமடைந்து ஏற்படும் இறப்புகளாகும்.
தொற்று நோய் தாக்குதலுக்கு முன்பு, சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது எதிர்பார்த்ததை விட எத்தனை பேர் அதிகமாக இறந்துள்ளனர் என்ற அதிகப்படியான உயிரிழப்புகள் என அழைக்கப்படும் அளவீட்டு முறை மூலம் இந்த இறப்புகள் கணக்கிடப்பட்டன.
இதனை கணக்கிட, பல்வேறு அரசாங்க இணையதளங்கள், உலகளாவிய இறப்புகளின் தரவுத்தளம், மனித இறப்புகள் தரவுத்தளம் மற்றும் ஐரோப்பிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகள் உள்ளிட்ட தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் திரட்டினர்.
ஒவ்வொரு நாடு மற்றும் பிரதேசங்களில், இந்த அதிகப்படியான உயிரிழப்புகள் குறித்த விகிதங்களுக்கு இடையில் பெருத்த வித்தியாசம் இருந்தது கணக்கிடப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த உலகளாவிய இறப்பு விகிதம் 1,00,000 பேருக்கு 120 இறப்புகள் என இந்த ஆராய்ச்சியில் கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது, 2020இன் ஆரம்பம் முதல் 2021 இறுதிவரையிலான இரண்டு ஆண்டுகளுக்கிடையில், 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் (18.2 மில்லியன்) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட 5.9 மில்லியன் இறப்புகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்.
அதிகப்படியான இறப்புகள் முழு ஆய்வு காலத்திற்கு மட்டுமே கணக்கிடப்பட்டன, வாரம் அல்லது மாத வாரியாக அல்ல, ஏனெனில், கொரோனா இறப்புகள் குறித்த தரவுகளை பதிவு செய்வதில் உள்ள தாமதங்கள் மற்றும் முரண்பாடுகள், அதுகுறித்த மதிப்பீடுகளை அதிகளவில் மாற்றக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'தி லேன்செட்' இதழில் பதிவான ஆராய்ச்சியின்படி, கொரோனாவால் உயிரிழப்புகள், குறைந்த வருமானம் கொண்ட லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா ஆகியவற்றை சேர்ந்த நாடுகளில் அதிகமாக நிகழ்ந்துள்ளன. ஆனால், இத்தாலி மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் உள்ளிட்ட அதிக வருமானம் கொண்ட நாடுகளிலும் இந்த இறப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளன.
அதிகப்படியான உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ள முதல் 5 நாடுகள்:
- பொலிவியா
- பல்கேரியா
- ஈஸ்வாடினி
- வட மசிடோனியா
- லெசோத்தோ
குறைந்த உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ள 5 நாடுகள்:
- ஐஸ்லாந்து
- ஆஸ்திரேலியா
- சிங்கப்பூர்
- நியூஸிலாந்து
- தைவான்
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பிரிட்டனில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், 1,73,000 என்ற அளவில், அதிகாரபூர்வ தரவுகளை போலவே 1,73,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. 1,00,000க்கு 130 பேர் என்ற அளவில் இறப்பு விகிதம் இருந்தது.
இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய, சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் டாக்டர் ஹைடோங் வாங் கூறுகையில், "திறன்வாய்ந்த பொது சுகாதாரம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள உண்மையான இறப்பு எண்ணிக்கையை புரிந்துகொள்வது முக்கியமானது.
"ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகப்படியான உயிரிழப்புகளில் பெரும்பாலானவை கொரோனா தொற்றால் நேரடியாக ஏற்பட்டவை என்பதை இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆனால், பல பகுதிகளில் இதுகுறித்த போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இப்போது இல்லை.
"இந்த ஆராய்ச்சியை மேலும் தொடர்வது, கொரோனா தொற்றால் எத்தனை பேர் நேரடியாக உயிரிழந்தனர், எத்தனை பேர் மறைமுக காரணங்களால் உயிரிழந்தனர் என்பதை தெரிந்துகொள்ள உதவும்.
தடுப்பூசிகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகள் காரணமாக, கொரோனா தொற்றுடன் தொடர்புடைய அதிகப்படியான உயிரிழப்புகள் குறையும் என, ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
ஆனால், இந்த பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என அவர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா வைரஸின் புதிய, ஆபத்தான திரிபுகள் உருவாகலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- “தமிழ்நாடே இலக்கு”: பாஜக, ஆம் ஆத்மியின் வெற்றி தென் மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
- மூன்றாவது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா: அமெரிக்கா
- உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு யார் காரணம்? - யோகியா அல்லது மோதியா?
- மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு பெற்ற 4 பேர்
- டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்