You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்மார்ட் வாட்டர்: இந்தத் தண்ணீரை தெளித்தால் குற்றவாளியை எளிதில் கண்டுபிடிக்க முடியும்
- எழுதியவர், ஷியோனா மெக்கலம்
- பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
புற ஊதாக் கதிர்களின் ஒளியின் கீழ் மட்டுமே தெரியக்கூடிய ஒரு தடயவியல் திரவமான 'ஸ்மார்ட் வாட்டர்' தெளிக்கப்பட்டு, குடும்ப வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொழில்நுட்பம் காவல்துறையினரால் பரிசோதிக்கப்படுகிறது.
இந்தத் திரவம் தோலில் ஆறு வாரங்கள் வரை இருக்கும். அதுமட்டுமின்றி ஆடைகளில் அதைவிட அதிக நேரம் இருக்கும்.
குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மேற்கு யார்க்ஷயரை சேர்ந்த பெண், இங்கிலாந்தில் இந்த திரவத்தை இப்போது வைத்திருக்கும் 200 பெண்களில் ஒருவர். அவர்கள் இப்போது தங்கள் வீடுகளில் இந்தத் தடயவியல் திரவத்தை வைத்துள்ளனர். கதவு மற்றும் கதவின் கைப்பிடிகளுக்கான ஜெல் போன்ற திரவம், ஸ்ப்ரே, யாராவது வீட்டை நெருங்கினால் திரவத்தைத் தெளிக்கக்கூடிய தானியங்கி பொறி ஆகியவை அவர்களிடம் வழங்கப்பட்டுள்ள பேக்கேஜில் அடங்கும்.
மேற்கு யோர்க்ஷயர், தெற்கு யோர்க்ஷயர் மற்றும் ஸ்டாஃபோர்ட்ஷயர் காவல்துறை படைகள் அனைத்தும் குடும்ப வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான வியூகத்தின் ஒரு பகுதியாக, ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 150 யூரோ செலவாகக்கூடிய கருவியைப் பயன்படுத்துகின்றன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் குற்றவியல் கணக்கெடுப்பின்படி, குடும்ப வன்முறை சம்பவத்திற்கு எதிர்செயலாற்ற சராசரியாக காவல்துறைக்கு சுமார் 640 யூரோ செலவாகிறது. தடயவியல் குறியீடு செய்வதை ஒரு தடுப்பு முயற்சியாகப் பயன்படுத்தினால், ஒவ்வொரு சம்பவத்திற்கும் எதிர்செயலாற்றும் போது, 500 யூரோ சேமிக்கப்படும் என்று இந்த யோசனையை முன்னெடுத்த டி.எஸ்.பெர்ரி கூறினார்.
குடும்ப வன்முறை, ஆண்கள், பெண்கள் இருவரையுமே பாதிக்கிறது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக காவல்துறையிடம் கூறியுள்ளனர். மேலும் முப்படைகளிலும் நடந்த கணக்கெடுப்பில் 94% பேர் இதை மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளனர்.
"மற்ற காவல்துறை படைகளும் மேற்கு யோர்க்ஷயரில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களை நாம் எவ்வளவு அதிகமாகப் பாதுகாக்கிறோமோ, எவ்வளவு அதிகமாக அவர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக உணர்கிறார்களோ, அவ்வளவு நல்லது. அதுதான் இங்கு உண்மையான வெற்றிக் கதையாக இருக்கும்." என்கிறார் டி.எஸ்.பெர்ரி.
பல ஆண்டுகளாக, ஸ்மார்ட்வாட்டர், சொத்துகளைப் பாதுகாக்கவும் மதிப்பு வாய்ந்த பொருட்களின் மீது பயன்படுத்துவதன் மூலம் திருடர்களைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திரவம் உலர்ந்துவிட்டால், சராசரியாகக் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், அது காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் புற ஊதா விளக்குகள் மற்றும் டார்ச் லைட்டுகளின் கீழ் மஞ்சள் நிறத்தில் ஒளிரும்.
ஒருவேளை மதிப்பு வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டால், ஆய்வகப் பரிசோதனைக்குப் பிறகு அவற்றின் அசல் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியும்.
தேசிய காவல்துறை தலைவர்கள் கவுன்சிலின் கூற்றுப்படி, கார்களில் உள்ள வெளியேற்ற உமிழ்வு கட்டுப்பாட்டு சாதனம் திருடப்படுவதை பாதியாகக் குறைப்பதில் இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே பலன் அளித்துள்ளது.
ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை குடும்ப வன்முறையைச் சமாளிக்கப் பயன்படுத்துவது இதுதான் முதல்முறை.
மேற்கு யோர்க்ஷயரில் உள்ள வேக்ஸ்ஃபீல்டில் இருந்த ஒரு நபர், தனது முன்னாள் துணையைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார். அதோடு, அவரைத் தனியாக விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனையை மீறினார். அந்த நபர் திரும்பி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, ஜன்னலுக்குப் பின்னால் பாதுகாப்பாக நின்றுகொண்ட அந்த பெண், ஸ்ப்ரே குப்பியிலிருந்த தடயவியல் திரவத்தை அந்த நபர் மீது தெளித்தார்.
அதிகாரிகள் அந்த நபரைப் பிடிக்க, ஸ்மார்ட் வாட்டர் அவர்களுக்கு உதவியது. ஏனெனில், அது அவரைக் குற்றம் நடந்த இடத்தில் தடயவியல் ரீதியாகக் கொண்டுபோய் நிறுத்த வைத்தது.
அவர் 24 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இரண்டு ஆண்டுகள் தடை உத்தரவு வழங்கப்பட்டது.
ஸ்மார்ட் வாட்டரின் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ரேச்சல் ஓக்லி இதுகுறித்துப் பேசியபோது, சிசிடிவி போன்ற பிற தடயவியல் அடையாளங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்கள் இதில் ஏற்படாது என்றார்.
மேலும், "ஸ்மார்ட் வாட்டர் உலகில் வேறு எங்கும் இயற்கையாகக் காணப்படாத அரிய மூலக்கூறுகளின் கலவையால் ஆனது. ஒவ்வொரு பாட்டிலிலும் அந்தப் பொருட்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. மேலும் ஒவ்வொரு தொகுதியும் தனித்துவமானது. அதாவது எந்தத் தொகுதி திரவம் கண்டறியப்பட்டுள்ளது என்பதை நாம் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.
எங்கள் தரவுத்தளம் அந்த நபருக்கான தடயவியல் இணைப்பாக இருக்கும்." என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்