You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மொராக்கோவில் 4 நாள்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவித்த சிறுவன் உயிரிழப்பு
மொராக்கோ நாட்டில், கடந்த நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவித்த ஐந்து வயது சிறுவனை, மீட்க எடுக்கப்பட்ட பெரு முயற்சிகள் பலனளிக்கவில்லை.
சிறுவனை வெளியே எடுத்தவுடன், அவன் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராயன் என்று பெயரிடப்பட்ட அச்சிறுவனை மீட்பதற்கான முயற்சி, அந்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடியும், ஆயிரக்கணக்கானோர் இணையத்தில் இது தொடர்பாக எதிர்வினையாற்றுவதுமாக இருந்தனர்.
அச்சிறுவன் கிணற்றின் குறுகிய ஆழ்துளையில் 32 மீ (104 அடி) ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்தான். அங்கு நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இறுதியாக, சனிக்கிழமை மாலை சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அவனது நிலை குறித்து அச்சமயத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொடக்கத்தில், இந்த மீட்புப்பணி அங்குள்ள கூட்டத்தின் ஆரவாரத்துடன் தொடங்கியது.
சமூக ஊடகங்களில், நாடு முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்த #SaveRayan என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தினர்.
ஆனால், சில நிமிடங்களில் ராயன் இறந்துவிட்டான் என்று அறிக்கை வெளியான போது, அது அவர்களுக்கு பெரும் மனவேதனையை உண்டாக்கியது.
அதன்பிறகு, ட்விட்டர் பயனர்கள் அதே ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அச்சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தவும், தங்கள் சோகத்தை வெளிப்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.
"ராயன் ஓரம் என்ற குழந்தையின் உயிரைப் பறித்த சோகமான விபத்தைத் தொடர்ந்து, கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனின் பெற்றோரை மன்னர் ஆறாம் முகமது அழைத்து பேசினார்", என்று அரச மாளிகையின் அறிக்கை கூறியுள்ளது.
அந்நாட்டு மன்னர், தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செவ்வாய்கிழமையன்று நடந்த இந்த விபத்தின்போது ராயனின் தந்தை கிணற்றை சரி செய்து கொண்டிருந்தார். விபத்து நடந்த மறுநாள் உள்ளூர் ஊடகங்களிடம் இதுகுறித்து அவர், "அந்த ஒரு கணத்தில் நான் பார்க்கவில்லை. அதன்பிறகு நான் ஒரு நொடிகூட தூங்கவில்லை", என்று கூறினார்.
செக்கெளவுன் (Chefchaouen) நகரத்திலிருந்து 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள சிறிய வடக்கு நகரமான டமோரோட்டில் (Tamorot) இந்த மீட்பு நடவடிக்கையை செவ்வாய்கிழமை மாலை தொடங்கியது மொராக்கோவின் சிவில் பாதுகாப்பு இயக்குநரகம்.
பாறை, மணல் கலந்த நிலப் பகுதியாக அது இருந்ததால், கிணற்றின் குறுகிய துளையை நோண்டுவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.
அதற்கு பதிலாக, புல்டோசர்களை பயன்படுத்தி கிணற்றுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் வெட்டப்பட்டது.
வியாழக்கிழமையன்று கிணற்றில் இறக்கப்பட்ட கேமரா சிறுவன் உயிருடன் இருப்பதையும், சுயநினைவுடன் இருப்பதையும் காட்டியது. ஆனால், அதன்பிறகு அவனது நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.
மீட்புக் குழுவினர் சிறுவனுக்கு ஆக்சிஜன், உணவு மற்றும் தண்ணீரை வழங்க முயன்றனர். ஆனால் அவனால் அவற்றைப் பயன்படுத்த முடிந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மீட்புக் குழுவினர் சிறுவனை மீட்க, கிடைநிலையில் தோண்டத் தொடங்கினர். சிலர் இரவு முழுவதும் சக்திவாய்ந்த ஃப்ளட்லைட்களைப் (Floodlights) பயன்படுத்தி 24 மணி நேரமும் வேலை செய்தனர்.
மலைப்பகுதி இடிந்து விழாமல் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும், கிணற்றுக்குள் எந்த மண்ணும் நுழையவில்லை என்பதையும் பணியாளர்கள் சரிபார்க்க, பலமுறை இந்த மீட்புப் பணியை சிறிது நேரம் நிறுத்த வேண்டியிருந்தது.
மேலும், கிணற்றின் பாதுகாப்பான பாதையை வழங்கி, மீட்புக் குழுக்களைப் பாதுகாக்க பெரிய குழாய்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த மீட்புப்பணியைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, மதப் பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்து, "அல்லாஹு அக்பர்" என்று கோஷமிட்டனர். சிலர் அந்த இடத்திலேயே முகாமிட்டு இருந்தனர்.
"மொராக்கோவிற்கும் உலகிற்கும் பிரியமான இந்தக் குழந்தையுடன் நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவிக்க இங்கு வந்தேன்", என்று ஹஃபிட் எல்-அஸ்ஸோஸ் என்ற ஓர் உள்ளூர்வாசி, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
2019ம் ஆண்டு திருச்சி, மணப்பாறை அருகே இது போல ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சுஜித், அதற்கு முன் இது போல தமிழ்நாட்டில் நிகழ்ந்த பல குழந்தை மரணங்களை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
பிற செய்திகள்:
- அண்டர்-19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன் ஆன இந்தியா
- எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு'
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொகுசு படகு பயணத்தால் நெதர்லாந்தில் கிளம்பும் சர்ச்சை
- கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: