You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன் ஆனது - வரலாற்று சாதனை
- எழுதியவர், அஷ்ஃபாக் அஹ்மத்
- பதவி, பிபிசி தமிழ்
அண்டர்-19 (U19) உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த நாடும் படைத்திராத சாதனையை இந்தியா பதிவு செய்திருக்கிறது.
ஆண்டிகுவாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யஷ் துல் தலைமையிலான இந்திய இளம் பட்டாளம் நாட்டிற்காக 5வது முறை கோப்பையை வென்றுள்ளது.
U19 உலகக்கோப்பை தொடரில் 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை கோப்பை வென்ற ஒரே அணி எனும் வரலாற்றிச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா
டாஸில் தோற்ற இந்திய அணி
இந்தியா - இங்கிலாந்து இடையிலான U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. டாஸில் வென்று முதலில் பேட்டிங் ஆடுவதே இந்திய அணியின் வியூகமாக இருந்தது.
போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டதால் முதலில் பேட் செய்யும் அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இதனால் டாஸை வென்ற இங்கிலாந்து அணி மகிழ்ச்சியுடன் பேட்டிங் ஆட களமிறங்கியது. ஆனால் இறுதி ஆட்டத்தில் பெரியளவில் மழை குறுக்கிடவில்லை.
டாஸில் தோல்வியைத் தழுவிய இந்திய அணியும் நம்பிக்கை தளராமல் பந்துவீசத் தொடங்கியது.
இங்கிலாந்தை சரித்த ராஜ் - ரவி கூட்டணி
தொடக்கம் முதலே இந்திய அணி தனது வேகப்பந்துவீச்சு மூலம் இங்கிலாந்தை கடுமையாக சோதித்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் ராஜ் பாவா - ரவி குமார் கூட்டணி பேட்ஸ்மேன்கள் மீது துல்லிய தாக்குதலை தொடுத்தது. ஆட்டத்தில் 2வது ஓவரில் ஓபனிங் பேட்ஸ்மேன் பெத்தெல் ரவி குமார் பந்துவீச்சில் 2 ரன்களில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
ஆட்டத்தை சிறப்பாக தொடங்கி வைக்க வேண்டிய பொறுப்பு இங்கிலாந்து கேப்டன் டாம் பிரெஸ்ட் வசம் வந்தது. சிறந்த பேட்ஸ்மேனான டாம் பிரெஸ்ட் நடந்து முடிந்த தொடரில் மட்டும் 292 ரன்கள் விளாசி கவனம் பெற்றிருந்தார். ஆனால் அவரை நின்று நிதானமாக விளையாடுவதற்கு ரவிக்குமாரின் பந்துகள் விட்டுவைக்கவில்லை.
4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட இங்கிலாந்து கேப்டன் டாம் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 120 ரன்களில் இங்கிலாந்து சுருண்டுவிடும் என்றே கணிக்கப்பட்டது. இருப்பினும் மறுமுனையில் கணிசமான ரன்களை சேர்க்க ஜேம்ஸ் ரீவ் போராடினார். 116 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்தை கடும் சரிவில் இருந்து மீட்டார் ஜேம்ஸ்.
அவருடன் இணைந்து ஆடிய ஜேம்ஸ் சேல்ஸ் 34 ரன்கள் விளாச இங்கிலாந்து அணி 44வது ஓவரிலேயே 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் ராஜ் பாவா 5 விக்கெட்களும் ரவிகுமார் 4 விக்கெட்களும் குஷால் டம்பே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
நெருக்கடி கொடுத்த இங்கிலாந்து
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கினாலும் இங்கிலாந்தும் கடும் நெருக்கடிகொடுத்தது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே இந்திய வீரர் ரகுவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் பெரிய ஷாட்களுக்கு மெனக்கிடாமல் நிதானமாக விளையாடத் தொடங்கியது இந்தியா.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் யஷ் துல் 17 ரன்களில் வெறியேறினாலும் அணியின் சுமையை போக்க சிறப்பாக விளையாடி அரைசதத்தை பதிவு செய்து விடைபெற்றார் ஷேக் ரஷீத். தனது பங்கிற்கு அதிரடி காட்டிய நிஷாந்த் சிந்துவும் அரைசதம் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் ஜொலித்த ராஜ் பாவா பேட்டிங்கிலும் 35 ரன்கள் சேர்த்தார்.
தோனி பாணியில் சிக்சர் - வரலாறு படைத்த இந்தியா
இங்கிலாந்து அணி பந்துவீச்சில் தொடர்ந்து நெருக்கடி அளித்தாலும் இந்திய அணியின் ரன் குவிப்பை யாராலும் தடுக்க இயலவில்லை. 47 ஓவரில் ஜேம்ஸ் சேல்ஸ் வீசிய 4வது பந்தை இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் பானா சிக்சருக்கு விளாச, 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று இந்தியா வரலாறு படைத்தது. முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரித்வி ஷா வரிசையில் இளம் வீரர் யஷ் துல்லும் இணைந்து கொண்டார்.
"உலகக்கோப்பை தொடரில் சாதித்தது இந்தியாவுக்கான பெருமையான தருணமாக கருதுகிறேன். அணியில் நல்ல கலவையை உருவாக்குவதற்கு முதலில் கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் குடும்பமாக மாறி சிறப்பாக செயல்பட்டோம்" என்றார் இந்திய அணி கேப்டன் யஷ் துல்.
"முதலில் பேட்டிங் செய்ய நினைத்தோம்"
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கனிட்கர் கூறுகையில்; "நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய எதிர்பார்த்தோம். ஆனால் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் அதைப் பயன்படுத்த நினைத்தோம். இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த, இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது" என்றார்.
"முடிவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம், முழு திறனையும் வெளிப்படுத்திக் கொண்டே இரு என பயிற்சியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினர். இறுதிப்போட்டியில் நல்ல லெந்த் வீச வேண்டும் என்பதே எனது திட்டம். ஆட்டத்தின் முதல் விக்கெட் தான் எனக்கு மிகவும் பிடித்த விக்கெட்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் இங்கிலாந்தை சாய்த்த வேகப்புயல் ரவி குமார்
5 விக்கெட்களை கைப்பற்றியதோடு 35 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ராஜ் பவா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். "எந்தவொரு ஆட்டத்திலும் வெற்றி பெறுவது என்பது சிறப்பான தருணமாக இருக்கும். ஆனால் இறுதிப் போட்டியில் வெல்வது என்பது மிகப்பெரிய உணர்வு. பயிற்சியாளர் மற்றும் கேப்டனுடன் விவாதித்த திட்டங்களைச் செயல்படுத்தவே களத்தில் இறங்கினேன்" என்றார் ஆட்டநாயகன் ராஜ் பாவா.
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 40 லட்சம் ரூபாயும் பயிற்சியாளர்களுக்கு தலா 25 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
பிற செய்திகள்:
- எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு'
- மாநிலத்தின் ஆளுநரை திரும்ப பெறுவது சட்ட ரீதியாக சாத்தியமா?
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொகுசு படகு பயணத்தால் நெதர்லாந்தில் கிளம்பும் சர்ச்சை
- "நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" - அயோத்தி இளைஞர்களின் குரல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: