You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தமிழர்; U19 உலக கோப்பை அணியில் நிவேதன் ராதாகிருஷ்ணன்
கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் ஆல்ரவுண்டராக ஜொலிப்பதற்கு பெரும் உழைப்பு தேவை. ஆனால் இங்கு ஒரு 19 வயது தமிழர், இரண்டு கைகளாலும் மிகத்துல்லியமாக சுழற்பந்து வீசுவதோடு U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியவுக்காக விளையாடி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அத்தியாயம் படைக்க முனைப்பு காட்டும் அந்த தமிழக வீரரின் பெயர் நிவேதன் ராதாகிருஷ்ணன். இவரது தந்தை அன்புசெல்வன், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்.
2002இல் பிறந்த நிவேதன், சிறுவயதில் தனது தந்தையிடம் இருந்து கிரிக்கெட்டின் பாலபாடங்களை கற்கத் தொடங்கியிருக்கிறார்.
இரண்டு கைகளிலும் ஒருவரால் சிறப்பாக பந்து வீச முடியுமா? இந்த கேள்விக்கு விடை காண முற்பட்டபோதுதான், அயராத உழைப்பின் மூலம் அதை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்.
இந்த அரிய திறமைகள் பலருக்கும் வாய்ப்பதில்லை. சமகால கிரிக்கெட்டில் இலங்கையின் கமிண்டு மெண்டிஸ் ( Kamindu Mendis) பாகிஸ்தானின் யாஸிர் ஜான் (Yasir Jan) என விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இந்த திறமையுடன் களத்தில் அறியப்படுகின்றனர்.
சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் வீரர், ஆஸ்திரேலிய அணிக்காக தனித்துவமான திறனை வெளிப்படுத்துவது என்பது மிகச்சிறந்த அங்கீகாரம்.
சென்னை டூ ஆஸ்திரேலியா
2013ஆம் ஆண்டு சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த நிவேதன், அங்கு கிரிக்கெட் பயிற்சியில் அதீத கவனம் செலுத்தியிருக்கிறார். இரண்டு கைகளிலும் நேர்த்தியாக பந்துவீசி உள்ளூர் போட்டிகள் மூலம் கவனம் பெறத் தொடங்கிய நிவேதனுக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரிஸ் ரோஜெர்ஸ் பயிற்சியில் ஆஸ்திரேலிய அணியில் இணைந்ததும் நிவேதனின் பந்துவீச்சு மேலும் மெருக்கூட்டப்பட தொடங்கியது. 2019ல் பாகிஸ்தானுக்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட 50 ஓவர் தொடரில் விளையாடிய நிவேதன், ஆஸ்திரேலிய தரப்பில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை பெற்றார். இதுதவிர பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 4 போட்டிகளில் 145 ரன்கள் சேர்த்தார்.
நிவேதனின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் தமிழ்நாடு பிரீமியர் லீக், ஐபிஎல் போட்டிகளிலும் நிவேதன் கவனம் செலுத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்ட நிவேதன், பண்ட், ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தனது இரு கை சுழற்பந்துவீசும் திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் நிவேதனுக்கு வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. இது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா அணியில் விளையாடவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதன்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மிக முக்கியவராக அறியப்பட்டவர் நிவேதன் ராதாகிருஷ்ணன்.
கொரோனா பரவல் காரணமாக ஸ்காட்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நிவேதன் விளையாடவில்லை. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இரு கைகளால் அவர் பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதன் மூலம் நிவேதன் ராதாகிருஷ்ணன் கிரிகெட் உலகில் பேசுபொருளாக தொடங்கியிருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியிருந்தாலும், நிவேதனின் ஆட்டம் சிறப்பாகவே அமைந்திருந்தது.
தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறினாலும், இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றிருக்கிறார் நிவேதன்.
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தமிழக வீரர் அதுவும் ஆஸ்திரேலிய சீருடையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரு கைகளால் பந்துவீசுவது என்பது தனித்துவமான அடையாளம்.
கிரிக்கெட் பாரம்பரியம் ஊறிப்போன ஆஸ்திரேலிய அணியில் இரண்டு கைகளால் பந்துவீசி சர்வதேச அரங்கில் ஜொலித்த வீரர் என்று எவரும் இல்லை.
பெரும் ஜாம்பவான்கள் தடம் பதித்த ஓர் கிரிக்கெட் அணியில் தனது இரட்டை பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு புதிய பெருமையை சேர்த்துக் கொடுக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த நிவேதனுக்கு பிரகாசமாகவே உள்ளது.
பிற செய்திகள்:
- உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் நீடிக்கும் கலவர தாக்கம் - கள நிலவரம்
- பட்ஜெட் 2022: நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கிறதா?
- "அதிகரிக்கும் சிலிண்டர் விலை; விறகடுப்பில் சமைக்கும் எங்களுக்கு தீர்வு வேண்டும்" - தேர்தல் குறித்து உ.பி கிராமப் பெண்கள்
- பூமியில் நினைத்ததை விட அதிக அளவில் மர இனங்கள் - எந்த நாடு முதலிடம்?
- யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?
- எளிய மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட்டா இது? - ஓர் அலசல்
- நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய சிறுவயது கனவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: