ரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்த கிறிஸ்தவ பாதிரியார்: பாலியல் வல்லுறவு செய்ததாக 21 ஆண்டுகள் சிறை

பட மூலாதாரம், ORENBERG DI
ரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததாகக் கூறும் பழமைவாத கிறிஸ்தவ பாதிரியாராக இருந்த ஒருவருக்கு குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ரஷ்யாவில் யுரல் மலைத் தொடர் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இவரது தேவாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பல குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அவர்களிடம் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் நிக்கோலாய் ஸ்ட்ரெம்ஸ்கை எனும் இவர்மீது குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது.
நிறையக் குழந்தைகளைத் தத்தெடுத்ததால் ''ரஷ்யாவில் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர்'' என்று புகழப்பட்ட நிக்கோலாய் ஸ்ட்ரெம்ஸ்கை, தேசிய அளவில் வழங்கப்படும் 'ஆர்டர் ஆஃப் பேரெண்ட்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியான பின்பு பாதிரியார் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இவருக்கு வழங்கப்பட்ட விருதும் இப்போது நீதிமன்ற உத்தரவால் திரும்பப் பெறப்பட்டது.
சராக்டாஷ் எனும் நகரத்தில் இருந்த துறவிகள் மடத்தின் தலைவராக இருந்த நிக்கோலாய் அவரது மனைவியுடன் சேர்ந்து குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
1990களின் தொடக்கத்தில் அப்பகுதியில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த பல குழந்தைகளை இந்த தம்பதியினர் தத்தெடுத்தனர்.
நிக்கோலாய் ஸ்ட்ரெம்ஸ்கை மற்றும் அவரது மனைவி தத்தெடுத்த 70 குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டனர்.

தமது தேவாலயத்தின் கீழுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழு சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 2019ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.
தமது நற்பெயரைக் கெடுக்க செய்யப்படும் அவதூறாகவே இந்த குற்றச்சாட்டுகள் தன் மீது வைக்கப்பட்டுள்ளன என்று அப்பொழுது அவர் கூறியிருந்தார்.
நிக்கோலாய் ஸ்ட்ரெம்ஸ்கை மற்றும் அவரது மனைவியால் குழந்தையாகத் தத்தெடுக்கப்பட்ட ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தைகளைச் சுதந்திரமாக இருக்க விடாமல் தடுத்து வைத்ததாக இடை நிறுத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை பெற்றனர்.
பொதுச் சமூகத்தில் இருந்து சிறை தண்டனை பெறுபவர்களைப் பிரித்து வைக்கும் இடம் ஒன்றில் இருக்கும் சிறையில் நிக்கோலாய் ஸ்ட்ரெம்ஸ்கை அடைக்கப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமையன்று சராக்டாஷ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
20 ஆண்டுகளுக்கு குழந்தைகளுடன் பணியாற்றவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- உத்தராகண்ட்: தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
- பிரிட்டன் மக்களின் மரபணுவை மாற்றிய பழங்கால புலம்பெயர்வு: எலும்புக்கூடுகள் வெளிக்காட்டிய சுவாரஸ்யம்
- ஆயுள் கைதிகள் முன்விடுதலையை ஆராய அரசு குழு: 34 ஆண்டுகளை கடந்தவர்களுக்கு பலன் உண்டா?
- உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
- பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்த இந்து அமைப்பினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








