இந்தியா - சீனா எல்லை பிரச்னை: 22,000 கி.மீ நில எல்லையைப் பாதுகாக்க சீனா புதிய சட்டம்: இந்தியாவை பாதிக்குமா?

மோடி.,ஷி

பட மூலாதாரம், Getty Images

14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் தனது 22,000 கி.மீ நீளம் கொண்ட நில எல்லையில் பாதுகாப்பை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவரிக்கும் தனது முதல் தேசிய அளவிலான சட்டத்துக்கு சீனாவின் நாடாளுமன்றமாகச் செயல்படும் தேசிய மக்கள் மன்றத்தின் (NPC) நிலைக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

"எல்லையில் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தவும், வலுப்படுத்தவும், உறுதிப்படுத்தவும்" வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நில எல்லைச் சட்டம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது.

எல்லைப் பாதுகாப்பு மற்றும் அண்டை நாடுகளுடனான தகராறுகளை நிர்வகிக்கும் சீன ராணுவத்தின் பணியை இந்தச் சட்டம் முறைப்படுத்துகிறது. இதற்காக சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டுபவர்களுகளைத் தடுப்பது, காவல் கருவிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்குகிறது.

எல்லை கடந்திருக்கும் ஆறுகள் மற்றும் ஏரிகளைப் பாதுகாப்பதற்கும், நீர் வளங்களை உத்திசார்ந்து பயன்படுத்துவதற்கும் தேசிய அரசுக்கு கடமை இருப்பதாகவும் அது கூறுகிறது.

இந்தச் சட்டத்தை சீன ஊடகங்கள் பரவலாக ஆதரித்துள்ளன. இந்தியாவுடனான தற்போதைய எல்லை மோதல்களுக்கு இடையே, தேசிய பாதுகாப்பை நிர்வகிப்பதற்கான சட்ட ரீதியிலான கட்டமைப்பை இந்த சட்டம் அளிக்கிறது.

என்ன நடந்தது?

நில எல்லைச் சட்டத்தை தேசிய மக்கள் மன்றத்தின் நிலைக்குழு ஏற்றுக்கொண்டிருப்பதாக அரசு ஊடகமான ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஏழு அத்தியாயங்களில் மொத்தம் 62 ஷரத்துக்களை இந்தச் சட்டம் கொண்டிருக்கிறது. "சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை புனிதமானவை. அவை மீற முடியாதவை" என்று இந்தச் சட்டம் கூறுகிறது.

எல்லை

பட மூலாதாரம், Getty Images

"பிராந்திய ஒருமைப்பாடு, நில எல்லையை உறுதியுடன் பாதுகாக்கவும், இறையாண்மை மிக்க எல்லைகளை பாதிக்கும் எந்தச் செயலை தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்" என்று புதிய சட்டம் கூறுகிறது.

சட்ட விரோதமாக எல்லையைக் கடப்பவர்கள், உடல் ரீதியாகத் தாக்குதலில் ஈடுபட்டாலோ, கைது செய்யப்படுவதைத் தடுத்தாலோ, சீன உடைமைகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான பிற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு எதிராக ஆயுதங்களையும் கருவிகளையும் பயன்படுத்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலமாக அதிகாரம் வழங்கப்படுகிறது.

எல்லை தாண்டுவதைத் தடுப்பதற்கும், இறையாண்மையை பாதுகாப்பதற்கும் நிலைகளை உருவாக்குவதற்கும் இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டம் ஏன் இயற்றப்பட்டது?

17 மாதங்களாக நீடித்து வரும் இந்தியாவுடனான எல்லை மோதலுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக சீன அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பிறகு எல்லையில் இரு நாடுகளுமே ராணுவத்தைக் குவித்திருக்கின்றன.

ஆப்கானிஸ்தான், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாவோஸ், மங்கோலியா, மியான்மர், நேபாளம், வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், வியட்நாம் ஆகிய 14 நாடுகளுடன் நில எல்லையை சீனா பகிர்ந்து கொள்கிறது. இவற்றில் இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான எல்லையில் சர்ச்சை நீடித்து வருகிறது.

இந்தியாவுடனான எல்லையில் பதற்றம் நீடித்திருக்கும் வேளையில், பூட்டானுடன் பேச்சுகளை விரைவுபடுத்துவதற்காக மூன்று படி வழிமுறைகளைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட்டது.

நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி மோதலுக்கு முடிவுகட்டுவதற்காக இந்திய, சீன தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவரையொருவர் குற்றம்சாட்ட, அந்தப்பேச்சுகள் தோல்வியடைந்தன.

"நியாயமில்லாத, சாத்தியமில்லாத கோரிக்கைகளை இந்தியா வலியுறுத்தியதால் பேச்சுகளில் சிக்கல் கூடியது," என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

"சீன தரப்பு கோரிக்கைகள் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான திட்டங்களை வழங்கவில்லை" என்று இந்தியா பதில் கூறியது

எதிர்வினை என்னென்ன?

அமெரிக்காவுடன் உடன்பட்டு "சந்தர்ப்பவாத மற்றும் நிர்பந்திக்கும் கொள்கைகளை" இந்தியா பின்பற்ற இந்தியா முயற்சிக்கிறது, சீன எல்லையில் அடிக்கடி மோதல்களை உருவாக்குகிறது என்று பைடு சமூக வலைதளத்தில் சீனாவின் தேசிய பாதுகாப்பு செய்தித்தாள் பதிவு செய்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நில எல்லைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக எதிர்கொள்ளவும், தேசிய இறையாண்மையை உறுதியுடன் பாதுகாப்பதற்கும் சாதாரண மக்களுக்கும் ராணுவத்துக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது" என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

புதிய சட்டம் வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, இந்தியாவில் உள்ளவர்கள், தங்கள் நாட்டை இந்தச் சட்டம் குறிவைக்கிறது கவலைப்படுவதாக க்ளோபல் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

எல்லை தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்கு தரமாக்கப்பட்ட சட்ட வழிமுறைகளை புதிய சட்டம் வழங்குவதாக தேசிய மக்கள் மன்ற வெளிநாட்டு விவகாரக் குழுவின் அதிகாரியான காவ் ஜின்லு சீனாவின் அரசு செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.

இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள திபெத்திய கிராமவாசிகள் போன்ற எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் நெருக்கமாகப் பணிபுரியும் மக்கள் விடுதலை ராணுவத்தின் கொள்கையை சீனா மேலும் வலுப்படுத்த சட்டம் அனுமதிக்கிறது என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.

ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இதழ் தனது கட்டுரையில் மாறுபட்ட ஒரு கருத்தைக் கூறியுள்ளது. தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து சீனாவின் ஜின்ஜியான் மாகாணத்துக்கு அகதிகளோ, தீவிரவாதிகளோ ஊடுருவுவது, அண்டை நாடுகளில் இருந்து கொரோனா பரவுவதைத் தடுப்பது போன்ற அம்சங்கள் இந்தச் சட்டத்தில் பிரதிபலிக்கின்றன என்று அந்த இதழ் கூறியுள்ளது.

அடுத்து என்ன நடக்கும்?

சீனாவின் நில எல்லைச் சட்டம் 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாலும், இரு நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய ராணுவப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாலும், சீனா-இந்தியா எல்லையில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவுடனான எல்லையில் சீனா 100 க்கும் மேற்பட்ட மேம்பட்ட நீண்ட தூர ராக்கெட் லாஞ்சர்களை நிலைநிறுத்தியுள்ளதாக சீன ராணுவத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, எதிர்காலத்தில் உத்திசார்ந்த அளவில் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) துருப்புக்களை நிர்வகிப்பது தொடர்பாக சீனாவுடனான நெறிமுறைகளை இந்தியா மறுஆய்வு செய்யும் என்று இந்தியாவின் கிழக்கு ராணுவ கமாண்டர் மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :