You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தண்டனை: நான்கு பேரை கொன்று உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டனர்
ஆப்கானிஸ்தானில் 'ஆள் கடத்தலில் ஈடுபட்டார்கள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் 4 பேரைக் கொன்று அவர்கள் உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டார்கள் தாலிபன்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி பாரசீக சேவை தெரிவிக்கிறது.
முதலில் தாலிபன்களுடன் நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் பிறகு அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பில் இவர்களுடைய உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகின்றன.
இவர்கள் 'ஒரு வணிகரையும், அவரது மகனையும் கடத்தி' அவர்கள் குடும்பங்களிடம் இருந்து பணம் கேட்டதாக ஒரு தாலிபன் அதிகாரியை மேற்கோள் காட்டி டோலோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தாலிபன்கள் மரண தண்டனை வழங்கியதாக சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்பைப் பராமரிப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைதான் கை, கால்களை வெட்டுவது என்று தாலிபன்களின் புதிய சிறை நிர்வாக அமைப்பின் தலைவர் நூருதீன் தொராபி அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம் அண்மையில் கூறியிருந்தார். மரண தண்டனை தொடர்பாக தாலிபன் அமைச்சரவை ஒரு ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் விரைவில் அது பொதுவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
கை, கால்களை வெட்டும் தண்டனை மீண்டும் ஆப்கானிஸ்தானில் அறிமுகம் செய்யப்படும் என்ற செய்திக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் இதற்கு மிகக் கடுமையான கண்டனங்கள் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக பிபிசியிடம் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய தாலிபன் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக இன்னும் ஆலோசனை செய்யப்பட்டுவருவதாகவும் விரைவில் இஸ்லாமிய எமிரேட் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறியிருந்தார்.
கடந்த இரண்டு பத்தாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் மரண தண்டனை இன்னும் உள்ளது. சில வழக்குகளில் விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் காலடித் தடம்: அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா?
- இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி
- அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதல்; போலீசார் துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது?
- “ஆப்கானிஸ்தானில் கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும்” : மூத்த தாலிபன் அதிகாரி
- தவறாக முடி வெட்டியதால், தொழில் இழப்பு, மன உளைச்சல்: சலூனுக்கு ரூ.2 கோடி அபராதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்