You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“ஆப்கானிஸ்தானில் கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும்” : மூத்த தாலிபன் அதிகாரி
தாலிபனின் கொடிய செயல்களுக்கு பெயர்போன மோசமான முன்னாள் தலைவர் ஒருவர் கடுமையான தண்டனைகளான மரண தண்டனை மற்றும் கை கால்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
முல்லா நூருதீன் துரபி என்னும் அந்த மோசமான தலைவர் தற்போது சிறைகளுக்கான நிர்வாகியாகவுள்ளார்.
"ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு இம்மாதிரியான, கை கால்களை துண்டிக்கும் தண்டனை மிக முக்கியம்" என அவர் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த தண்டனைகள் கடந்த தாலிபன் ஆட்சியில் வழங்கப்பட்டதை போல பொதுவெளியில் வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கடந்த காலங்களில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் குறித்த விமர்சனங்களை நிராகரித்த அவர், "நாங்கள் எந்த சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என யாரும் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை," என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் அதிகாரத்திற்கு வந்த பிறகு கடந்தகால ஆட்சியை போல அல்லாமல் மிதமான ஒரு ஆட்சியை தாங்கள் வழங்குவோம் என தாலிபன்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஏற்கனவே நாடு முழுவதும் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
வியாழனன்று ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உயர் பதவிகளில் இருந்த பெண்களை தாலிபன்கள் தேடி வருவதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.
தாலிபன்கள் பெண்கள் வெளியே வருவதை தடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு கட்டாய ஆடை கட்டுப்பாட்டை விதிப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டு மாதம் ஹசரா சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் தாலிபன்கள் இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இந்த படுகொலைகள் தாலிபன்களின் கடந்தகால கொடுமையான ஆட்சியை நினைப்படுத்துகிறது. இதன்மூலம் தற்போது தாலிபன்களின் ஆளுகை எவ்வாறு இருக்கும் என்பது தெரிகிறது என அம்னெஸ்டியின் பொதுச் செயலர் அக்னேஸ் கல்லாமார்ட். தெரிவித்துள்ளார்.
தாலிபன்கள் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக தாலிபன் நீதிபதி பத்ருதின் பிபிசி செய்தியாளர் சிகேந்தர் கெர்மானியிடம், தாலிபன்கள் ஷரியா சட்டத்தின் கடுமையான வடிவத்தை கடைபிடிப்பதை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
"ஷரியா சட்டத்தின்படி, திருமணம் ஆகாமல் பாலுறவு வைத்துக் கொண்டால் அவர்களுக்கு பொதுவெளியில் 100 கசையடிகள் கொடுக்கப்படும்" என பத்ருதின் தெரிவித்தார்.
"அதேபோன்று திருமணம் ஆனவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். திருடுபவர்கள் அதை ஒப்புக் கொண்டால் அவர்களின் கை துண்டிக்கப்பட வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கடும்போக்கு தன்மையுடன் சில, அதீத பழமைவாத ஆப்கன் மக்கள் ஒத்து போகின்றனர்.
மதம் சார்ந்த பிற இசையை கேட்டவர்கள், தாடியை ட்ரிம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கிய ஆபத்தான துரபி, கடுமையான தண்டனைகள் தொடர்ந்தாலும் தொலைக்காட்சி, அலைப்பேசி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றிற்கு அனுமதி உண்டு என ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
துரபியின் கடந்தகால செய்கைகளால் அவர் ஐநாவின் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளார். இந்த தண்டைகள் பொதுவெளியில் வழங்கப்பட வேண்டுமா என தாலிபன்களின் அமைச்சரவை ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
1990களில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி செய்தபோது காபூலின் விளையாட்டு மைதானத்தில் அல்லது ஈத் கா மசூதியின் பெரிய மைதானங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த சமயம் தாலிபன்களின் நீதித்துறை அமைச்சராக இருந்தவர் துரபி, அதேபோன்று நல்லொழுக்கத்தை பரப்புதல் மற்றும் பாதுகாத்தலுக்கான அமைச்சகத்தின் தலைவராக இருந்தார்.
மதம் தொடர்பான விதிகளை மக்கள் கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் `மத காவலராக` இருந்தார்.
"விளையாட்டு அரங்கில் நாங்கள் தண்டனை வழங்கியது குறித்து அனைவரும் விமர்சனம் செய்தனர். ஆனால் விமர்சனம் செய்தவர்களின் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து நாங்கள் எதுவும் இதுவரை பேசவில்லை." என துரபி தனது சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தாலிபன்கள், ஐநா பொது சபையில் பேச அனுமதி கோரியிருந்தனர்.
"தாலிபனிடம் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம்தான் ஆனால் ஐநா பொது சபை அதற்கான இடம் இல்லை" என ஜெர்மனின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி
- 'இல்லாத நகைக்குக் கடன்; ஒரே ஆதாருக்கு 300 கடன்கள்'- அதிமுகவுக்கு சிக்கலா?
- பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா?
- தமிழர் வரலாறு: ‘மன்னர் மனைவியின் சாபம் பெற்ற‘ பகுதியில் நடக்கவுள்ள தொல்லியல் ஆய்வு
- சீன செல்பேசிகளை வீசியெறியுங்கள்: நுகர்வோரை எச்சரிக்கும் லித்துவேனியா அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ்