மாறும் சீனா: ஷி ஜின்பிங் ஏன் மீண்டும் சோஷியலிசம் நோக்கித் திரும்புகிறார்?

Xi Jinping

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஸ்டீஃபன் மெக்டொனல்
    • பதவி, பிபிசி செய்திகள், பெய்ஜிங்

பல பத்தாண்டுகளாக சீனா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அதிவேகமான முதலாளித்துவப் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது.

சட்ட விதிகளின்படி சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதன் மூலம், சிலர் மிகப் பெரிய பணக்காரர்களாக அனுமதிப்பதன் மூலம் பரந்த சமூகத்துக்கு அதன் பலன்கள் வழிந்து வந்து சேரும் என்ற கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டு இயங்கி வருகிறது சீன அரசாங்கம். 'சேர்மேன்' மாவோவின் கலாசாரப் புரட்சி உண்டாக்கிய புதைகுழியில் இருந்து இது நாட்டை கூடிய விரைவில் மீட்கும் என்று நம்பி இந்தப் பாதையில் பயணித்தது சீன அரசாங்கம்.

ஓரளவு இந்த அணுகுமுறை வெற்றிகரமாக செயல்பட்டது. மிகப்பெரிய நடுத்தர வர்க்கம் இதனால் உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் இருப்பவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை வாய்த்திருக்கிறது.

செல்வத்தில் ஏற்றத்தாழ்வு

1970களில் இருந்த தேக்க நிலையில் இருந்து மீண்ட சீனா உயர்வை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்தது. தற்போது உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது இந்நாடு.

அதே நேரத்தில் இந்த கொள்கையால், நாட்டு மக்களின் வருமானத்தில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் தோன்றியுள்ளன.

சரியான நேரத்தில், சரியான இடங்களைப் பிடித்துக்கொண்டவர்களின் பிள்ளைகளிடத்தில் இந்த ஏற்றத்தாழ்வின் விளைவைத் தெளிவாகப் பார்க்கலாம்.

1980களில் தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டவர்கள் அதீதமான லாபம் சம்பாதித்தனர். இந்தப் பணத்தைக் கொண்டு அவர்களின் பிள்ளைகள் பளபளப்பான, ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார்களில், பகட்டான நகரங்களில் வலம் வருகின்றனர்.

ஒரு வீடு வாங்கவே போராடும் கட்டுமானத் தொழிலாளர்களை இந்த ஆடம்பரக் கார்கள் அதிவேகமாக கடந்து செல்கின்றன.

"சீனப் பண்புகளோடு" செயல்படுத்துவதாக கூறுவது எல்லாவிதமான குற்றச்சாட்டுகளில் இருந்தும் தப்பித்துக்கொள்வதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த ஒரு சாக்கு.

"சீனப் பண்புகளோடு" கூடிய சோஷியலிசம் என்ற கருத்தாக்கம், பொதுவுடமைத் தத்துவத்தில் இருந்து பெருமளவில் விலகிச் செல்லவும், பல வகைகளிலும் சோஷியலிசம் அல்லாத சமூகத்தை நடத்தவும் அரசாங்கத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

ஆனால், இந்த அணுகுமுறை இனியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அதிபர் ஷி ஜின்பிங் முடிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

அவரது தலைமையிலான சீன அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் கம்யூனிசத்தை ஓரளவேனும் புகுத்தத் தொடங்கியுள்ளது.

பெய்ஜிங் நகரில் தி கிரேட் ஹால் ஆஃப் பீப்பிள் அருகே உள்ள ஒரு தெருவில் விற்பனை செய்யக்கூடிய பழைய பொருள்களை குப்பைத் தொட்டியில் தேடிய பிறகு ஒரு தள்ளு வண்டியைத் தள்ளிச் செல்லும் ஓர் மூதாட்டி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெய்ஜிங் நகரில் தி கிரேட் ஹால் ஆஃப் பீப்பிள் அருகே உள்ள ஒரு தெருவில் விற்பனை செய்யக்கூடிய பழைய பொருள்களை குப்பைத் தொட்டியில் தேடிய பிறகு ஒரு தள்ளு வண்டியைத் தள்ளிச் செல்லும் ஓர் மூதாட்டி. கம்யூனிஸ்ட் நாடு என்று சீனா அறியப்பட்டாலும், அந்நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு.

"பொது மக்களின் வளம்" என்பது புதிய முழக்கம் ஆகியிருக்கிறது.

இந்த வாசகமெல்லாம் தெருவோர பிரசார சுவரொட்டிகளில் இன்னும் காணப்படாத வாசகமாகவே உள்ளது. ஆனால், இதற்கு அதிக நாள் பிடிக்காது. சீன அதிபர் என்ன செய்கிறாரோ அதற்கு அடித்தளமாக இதுவே உள்ளது.

தினசரி வாழ்வில் அதிரடி

இந்த புதிய நடவடிக்கையின் கீழ் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இதனை புரிந்துகொள்ள முடிகிறது. அத்துடன், தனியார் டியூஷன் கம்பெனிகளை தடை செய்து கல்வியை சமத்துவமானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் இப்படியே.

நாட்டின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் இந்த சோஷியலிசத்துக்கு திரும்பும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று பார்க்கப்படுகிறது.

இந்த கம்யூனிச செயல்திட்டத்தின் மீது உண்மையாகவே அதிபர் ஷி ஜின் பிங் நம்பிக்கை கொண்டிருக்கிறாரா? 100 சதவீதம் அப்படித்தான் என்று கூறமுடியாது. ஆனால், அந்த வழியில்தான் இது செல்வதாகத் தோன்றுகிறது என்று சில பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் 280ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவசர காலப் பணியாளர்களின் சீருடையை அணிந்த கலைக்குழுவினர் பிரும்மாண்டமான சீன கம்யூனிஸ்ட் கொடியை சூழ்ந்து நிற்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இந்த ஆண்டு கொண்டாப்படுகிறது.

வேறு சில கட்சி நிர்வாகிகளுக்கு கடந்த காலத்தில் நடந்த மாற்றங்கள் இப்படித் தோன்றவில்லை.

செல்வத்தை பங்கீடு செய்வது என்பதைத் தவிர்த்து, இந்த புதிய கம்யூனிசப் பாதை மூலம் சீனாவின் தினசரி வாழ்வின் பெரும்பாலான அம்சங்களில் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பை மீண்டும் உணரச் செய்வதன் மூலம் செய்ய விரும்புவதை செய்து முடிக்க விரும்புகிறார் ஷி ஜின் பிங் என்று தோன்றுகிறது.

குழந்தைகள் சோம்பேறியாக இருக்கிறார்கள், இளைஞர்கள் வீடியோ கேம் விளையாடி நேரத்தை வீணாகக் கழிக்கிறார்களா? இதோ கேம் விளையாடுவதற்கு 3 மணி நேர உச்சவரம்பு கொண்டு வருகிறது கட்சி.

மலினமான, தனி நபர் துதிபாடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் இளைஞர்களின் மனம் நஞ்சாகிறதா? இதோ கட்சியின் நடவடிக்கை: பெண்மையான தோற்றம் கொண்ட இளைஞர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை.

மக்கள் தொகை குறையும் சிக்கலா? இதோ கட்சியின் தீர்வு இதோ எல்லோருக்குமான மூன்று குழந்தைகள் கொள்கை.

கால்பந்து, சினிமா, இசை, மெய்யறிவு, குழந்தைகள், மொழி, அறிவியல்... எதில் சிக்கல் என்றாலும் அதற்கு கட்சியே ஒரு தீர்வைச் முன்வைக்கிறது.

தந்தையின் நம்பிக்கைகளோடு முரண்பட்டு...

ஷி ஜின் பிங் எப்படி இன்று உள்ளபடி ஒரு தலைவர் ஆனார் என்று புரிந்துகொள்வதற்கு அவரது பின்புலத்தை கொஞ்சம் பார்க்கவேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் போர்க் கள நாயகனான அவரது தந்தை ஷி ஜோங்சன் ஒரு மிதவாதியாக அறியப்பட்டவர். ஆனால், மாவோ காலத்தின் பிற்பகுதியில் 'களையெடுக்கப்பட்டு' சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை பொதுவெளியில் கண்டிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் அவரது மனைவி (ஷி ஜின் பிங்கின் தாய்). ஆனால் அவருக்கு 1978ல் அரசியல் மறுவாழ்வு கிடைத்தபோது குவாங்டாங் மாகாணத்தில் பொருளாதார தாராளமயமாக்களை தீவிரமாக முன்னெடுத்தார். சீனாவின் மிகுந்த முற்போக்கான தலைவர்களில் ஒருவரான ஹு யோபாங் என்பவரை அவர் ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் மிக்க தலைவர்களால் ஷி ஜின் பிங்கின் தந்தை கொடுமைக்கு உள்ளானார். அவர் பொருளாதார சீர்திருத்தத்தையும் ஆதரித்தார். இந்த நிலையில் ஏன் ஷி ஜின் பிங் தமது தந்தையின் நம்பிக்கைகளுக்கு எதிர் திசையில் கட்சியை கொண்டு செல்வதாகத் தோன்றுகிறது?

இதற்குப் பலவிதமான விளக்கங்கள் கூறமுடியும்.

அதில் ஒன்று, சில அரசியல் விவகாரங்களில் அவர் தமது தந்தையின் அணுகுமுறையில் இருந்து மாறுபட்ட கொள்கையைக் கொண்டிருக்கிறார்.

அவரது தந்தை முக்கியத்துவம் அளித்த விஷயங்களில் இவருக்கு அக்கறை இல்லாமல் இருக்கலாம். இவரது முக்கியத்துவம் வேறாக இருக்கலாம். ஆனால், மாவோ கால கொள்கைகளில் கொண்டுபோய் விட்டுவிடாத திட்டங்களையே அவர் பின்பற்ற விரும்புகிறார். அல்லது விரும்பி அந்த இடத்துக்கு அவர் செல்லமாட்டார் என்பது இன்னொரு விளக்கம். இருந்தாலும்கூட இந்த மாற்றங்கள் அபாரமானவை.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நுற்றாண்டு விழாவை ஒட்டி பெரிய திரையில் தோன்றும் அதிபர் ஷி ஜின் பிங்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நுற்றாண்டு விழாவை ஒட்டி பெரிய திரையில் தோன்றும் அதிபர் ஷி ஜின் பிங்.

தமது தந்தை சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தமது 15 வயதில் இருந்து பல ஆண்டுகளுக்கு வயலில் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது ஷி ஜின் பிங்குக்கு. அப்போது அவர்கள் குகை போன்ற ஒரு வீட்டில் வசித்தனர்.

கொந்தளிப்பு மிக்க அந்த காலம் அவரை நெஞ்சுறுதி மிக்கவராக மாற்றியது. அந்த உறுதி எளிதாக அரசியல் மீதான வெறுப்பாக, குறிப்பாக கடும்போக்கு வாதம் குறித்த வெறுப்பாக மாறியது.

1960கள், 1970களில் நிலவிய குழப்பங்களுக்குள் மீண்டும் சீனா செல்லாமல் இருக்கவேண்டுமானால் சீனாவுக்கு பலம் மிக்க தலைவர்கள் தேவை என்று அவர் நம்புவதாக சீல சீனப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தற்போது விதிகள் மாற்றப்பட்டிருப்பதால், தாம் விரும்பும்வரை ஷி ஜின்பிங் அதிகாரத்தில் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏன் இப்படியெல்லாம் ஊகிக்கவேண்டியிருக்கிறது? காரணம், அவரே தமது முடிவுகள் குறித்து விளக்கம் ஏதும் சொல்லவில்லை என்பதுதான். சீனத் தலைவர்கள் பேட்டி கொடுப்பதில்லை. தங்கள் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களுக்குக் கூட அவர்கள் பேட்டி அளிக்கமாட்டார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் கிராமங்களுக்கு செல்வார். ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஆரவாரத்தோடு அவரை வரவேற்கும். மக்காச்சோள சாகுபடி தொடர்பான அவரது அறிவுரைகளை அல்லது தங்கள் வேறு வேலை தொடர்பான அவரது உரையை அவர்கள் கேட்பார்கள். பிறகு அதிபர் கிளம்பிவிடுவார்.

எனவே, சீனப் பொருளாதாரத்தின் மீது என்னவிதமான புதிய விதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதையோ, என்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பதைப் பற்றியோ கணிப்பது மிகவும் கடினம்.

சமீப காலத்தில், சீன நிர்வாக கட்டமைப்பின் ஏதோ ஒருபகுதி தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்படாத ஒருவாரம் கூட இல்லை. இந்த மாற்றங்களைப் பற்றி தொடர்ந்து அறிந்துவைத்திருப்பது கடினமானது. சில மாற்றங்கள் முன்கூட்டி எந்த பேச்சும் இல்லாமல் திடீரென கொண்டுவரப்பட்டவை.

உற்பத்தியின் பல கூறுகளை அரசு கட்டுப்படுத்துவதில் பிரச்சனை இல்லை. இதில் எது பலன் தரக்கூடியது அல்லது இல்லை என்பதை பொருளாதார வல்லுநர்களே விவாதிக்க முடியும். உண்மையில் சிக்கல் என்பது திடீரென தோன்றும் நிச்சயமற்ற நிலை.

அடுத்த ஒரு மாதத்தில் அடிப்படை விதிகளில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பது தெரியாமல் ஒருவர் எப்படி முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்?

நாட்டின் வளர்ச்சியில் ஏற்படும் இயல்பான விஷயங்கள் இவை என்று இந்த மொத்த நிகழ்வுகளையும் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இதுவரை கட்டுப்பாடுகளே இல்லாத விஷயங்களில் இப்போது கட்டுப்பாடுகள் தேவைப்படலாம்.

இதுதான் விஷயம் என்றால், மாற்றங்கள் ஏற்படுத்தும் அதிர்ச்சி தாற்காலிகமானதே. விதிகள் அனைத்தும் தெளிவானபிறகு நிலைமையில் அமைதி திரும்பும். ஆனால், இந்த நடவடிக்கைகளின் நீள அகலம் என்னவாக இருக்கப் போகிறது என்பது குறித்து எந்த ஒரு தெளிவும் இல்லை.

தனது அதிகாரத்தில் ஒரு அங்குலத்தைக்கூட கட்சி விட்டுக்கொடுக்காத ஒரு காலகட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஷி ஜின் பிங் செயல்படுத்தும் "பொதுமக்கள் வளம்" என்ற கோட்பாட்டின் வழியாகவே பார்க்க முடியும் என்பது மட்டும்தான் தெளிவாகத் தெரிகிற ஒரே விஷயம்.

சீனாவில், கட்சி அதிகாரம் என்ற வண்டியில் நீங்கள் ஏறிப் பயணம் செய்யலாம். அல்லது வண்டி உங்கள் மீது ஏறிப் பயணம் செய்யும்.

உலகில் சீனாவின் மாறிவரும் வகிபாகம் குறித்து மூன்று பாகங்களைக் கொண்ட கட்டுரையை வெளியிடுகிறது பிபிசி. இது அந்தத் தொடரின் முதல் பாகம் இது.

வணிகம் செய்வதற்கான விதிகளை சீனா எப்படி மாற்றி எழுதுகிறது என்பதும், இதனால் உலகில் எப்படிப்பட்ட பின்விளைவுகள் ஏற்படும் என்பதும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகத்தில் ஆராயப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :