You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.நா சபையில் பைடன்: இரான், வடகொரியா பற்றி பேசியது என்ன? 5 முக்கிய தகவல்கள்
உலகம் மிகவும் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தசாப்தத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது, இரானுடனான உறவு, கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் அணு ஆயுத விலக்கலை வலியுறுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை உள்பட பல விஷயங்களை அவர் சூசகமாகப் பேசினார்.
பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க அறிவிக்கப்பட்ட நிதியுதவியை 2024இல் இரட்டிப்பாக வழங்குவதாக ஜோ பைடன் கூறினார்.
அவரது உரையில் இருந்து ஐந்து முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.
- ஜனநாயகம், ராஜீய உறவுகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும். நாம் அனைவரும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
- "பருவநிலை மாற்ற நெருக்கடி, பெருந்தொற்றை சமாளிக்கும் நடவடிக்கை போன்றவற்றில் நமது பகிரப்பட்ட எதிர்காலத்திற்காக நாம் போராடத் தேர்வு செய்தாலும் செய்யாவிட்டாலும், இப்போதைய நமது அணுகுமுறைகள், வரும் தலைமுறைகளிலும் எதிரொலிக்கும். எளிமையாகச் சொன்னால், இந்த விஷயங்களில் சரியான ஈடுபாடு காட்டாவிட்டால், வரலாற்றில் இந்த நடவடிக்கைகளுக்கு குறுக்கே நாமே இருப்பது போல ஆகி விடும் என்பது எனது பார்வை."
- பருவநிலை மாற்ற சவால்களை எதிர்காள்ள வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்குவதாக அறிவித்த நிதி 2024இல் $11.4 பில்லியலனாக வழங்கப்படும். அதாவது ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்த நிதியில் இது பாதிக்கு சற்று கூடுதலான தொகையாகும். (2020இல் வறிய நாடுகளுக்கு உதவ 2020இல் 100 பில்லியன் டாலர்கள் தருவதாக வளர்ந்த நாடுகள் கூறின. ஆனால், அந்த நிதி இன்னும் முழுமையாக தரப்படவில்லை)
- பிளவுபட்ட உலகில் புதிய பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை. எந்தவொரு நாடாக இருந்தாலும் அதனுடன் அமைதித்தீர்வை எட்டும் நடவடிக்கையை தொடங்க அமெரிக்கா தயாராக உள்ளது. ராணுவ நடவடிக்கை என்பது எல்லா நேரத்திலும் கடைசி வாய்ப்பாகவே இருக்க வேண்டும்.(இரான், யேமென், வடகொரியா மற்றும் பாலத்தீனத்தில் உள்ள நிலைமையை மையப்படுத்தியே இந்த கருத்தை பைடன் வெளியிட்டிருப்பதாக வட அமெரிக்காவுக்கான பிபிசி செய்தியாளர் ஆன்டனி ஸர்ச்சர் கூறுகிறார்.)
- கொரோனா வைரஸ் முதல் பருவநிலை மாற்ற சவால்கள்வரை, மனித மதிப்புகள் முதல் மனித உரிமைகள்வரை என புவியில் எது நடந்தாலும் அதில் நாம் தனித்து இயங்க இனி அனுமதிக்க வேண்டாம். நமது வாழ்கால சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்காவே வழிநடத்தும். எங்களைப்போலவே நல்லெண்ணத்துடன் முன்வருவது எவராக இருந்தாலும் அந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து நாங்களே சவால்களை வழிநடத்துவோம்.
செப்டம்பர் 25இல் மோதி உரை
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி வரும் 24ஆம் தேதி நியூயார்க் செல்லவிருக்கிறார். இந்த தகவலை டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஷர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா உறுதிப்படுத்தினார்.
நரேந்திர மோதி வரும் 25ஆம் தேதி ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று இந்தியாவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலுக்கி வந்த நிலையில், மோதி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கும்.
நரேந்திர மோதியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோரும் செல்லவுள்ளனர். இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் மோதி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அதில் சர்வதேச பயங்கரவாதம், கடும்போக்குவாத பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டின் துணை அதிபர் மற்றும் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிசையும் நரேந்திர மோதி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்