You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உமா பாரதியின் சர்ச்சை கருத்து: "அதிகாரவர்க்கம் எங்கள் செருப்புகளை தூக்கவே இருக்கிறார்கள்"
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான உமா பாரதிய சமீபத்தில் அதிகாரத்துவத்தின் நிலை பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனக்குரல்கள் பதிவாகி வருகின்றன.
கடந்த சனிக்கிழமை போபாலில் தமது இல்லத்தில் பிற்படுத்தப்பட்டோர் மகாசபாவைச் சேர்ந்த குழுவினரை சந்தித்தார். அப்போது உமா பாரதியிடம் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் ஜாதிவாரி இடஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை அந்த குழுவினர் விடுத்தனர். தங்களுடைய கோரிக்கைகளை ஆளும் பாஜக அரசு நிறைவேற்ற மறுத்தால், மாநில அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அந்த குழுவினர் எச்சரித்திருந்தனர்.
அப்போது அவர்களிடையே உமா பாரதி இந்தி மொழியில் பேசும் காணொளிதான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், "அதிகாரவர்க்கம் என்பது ஒன்றுமில்லை. அவர்கள் எங்களுடைய செருப்புகளை தூக்கவே இருக்கிறார்கள். உண்மையில் அப்படி அவர்கள் செய்வதை நாங்கள் அனுமதிக்கிறோம். அவர்களுக்கென எந்தவொரு ஆற்றலும் கிடையாது," என்றவாறு பேசுகிறார்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவராக அறியப்படும் உமா பாரதியின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் மட்டுமின்றி அரசுத்துறை அதிகாரிகள் மட்டத்திலும் கோப உணர்வைத் தூண்டியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் பணியாற்றும் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.
அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வரின் இந்த கருத்து மிகவும் அவமானகரமானது மற்றும் அவரது கருத்து குறித்து ஆளும் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் விளக்கம் தர வேண்டும். உண்மையில் அதிகாரிகள் அப்படித்தான் செய்கிறார்களா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்த நிலையில், எதேச்சையாக வெளியிட்ட கருத்துகள் அவை என்று கூறி தாம் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக மன்னிப்பு கோரினார் உமா பாரதி.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவே மன்னிப்பைக் கோரினார். அதில் அவர், ஓபிசி குழுவினர் என்னை சந்தித்தது அலுவல்பூர்வமற்ற வகையில் நடந்த நிகழ்வு. அவர்களுடன் எதேச்சையாக நான் கலந்துரையாடினேன். நல்ல உணர்வுடன் நான் வெளிப்படுத்த நினைத்த செய்திக்கு தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னிப்பை வேண்டுகிறேன். பொது இடத்தில் குறைவான நபர்கள் இருந்தால் கூட மிதமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை இன்று நான் உணர்ந்து விட்டேன். உண்மையில் வலிமையானது, உண்மையாக ஆட்சியை வழிநடத்துவரை நேர்மையான அதிகாரவர்க்கம் ஆதரிக்கவே செய்யும். அது நான் கண்ட அனுபவம் என்று உமாபாரதி கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- 'சிறையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பொது மன்னிப்பு' - ஐ.நாவில் கோட்டாபய ராஜபக்ஷ உறுதி
- பதின்ம வயதினரை துயரத்தில் தள்ளும் இன்ஸ்டாகிராம்: அம்பலமாகும் ரகசிய ஆய்வு
- ஆமதாபாத்தில் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சித் தருணம்
- CSK vs MI: சென்னையை மீட்ட கெய்க்வாட்; மும்பையை அசைத்த தோனியின் முடிவு
- ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் சேரும் முன் காட்டிய முரட்டுப் பிடிவாதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்