You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும் தெரியுமா?
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஒரு காலத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த அசாஃப் ஜா முசாஃபருல் முல்க் சர் மீர் உஸ்மான் அலி கான், 1911ாஆம் ஆண்டில் ஹைதராபாத் சமஸ்தானத்தின் அரியணையில் அமர்ந்தார்.
அவரது காலத்தில், அவர் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்பட்டார். 'டைம்' இதழ், 1937ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிட்ட தனது அட்டைப்படத்தில் அவரது படத்தை "உலகின் மிகப் பெரிய செல்வந்தர்" என்ற தலைப்பிட்டு வெளியிட்டது.
ஹைதராபாத் சமஸ்தானத்தின் மொத்த பரப்பளவு 80,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. இது இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் மொத்த பரப்பளவை விட அதிகம். அவர் பணக்காரராக இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அதே நேரம் அவர் மிகவும் கருமியாகவும் இருந்தார்.
நிஜாமிற்கு மிக நெருக்கமாக இருந்த வால்டர் மாங்க்டனின் வாழ்க்கை வரலாற்றில் ஃபிரட்டெரிக் பர்கெய்ன்ஹெட் எழுதுகிறார், "நிஜாமின் உயரம் குறைவு. அவர் குனிந்தவாறும் நடப்பார். அவரது தோள்களும் சிறியதாக இருந்தன. அவர் நடக்க வளைந்த பழுப்பு நிற கைத்தடியை பயன்படுத்தினார். அவரது கண்கள் அந்நியர்களை தீவிரமாகப் பார்த்தன. அவர் 35 வருட பழமையான தொப்பியை அணிந்திருந்தார், அதில் பொடுகு குவிந்திருக்கும்."
"அவரது ஷெர்வானி பழுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்து பக்கத்தில் இருக்கும் பொத்தான் திறந்திருக்கும். அவர் ஷெர்வானியின் கீழே தளர்வான வெள்ளை நிற பைஜாமா அணிந்திருப்பார். அவர் காலில் மஞ்சள் நிற காலுறை அணிந்திருப்பார். அதன் விளிம்புகள் தளர்வாக இருக்கும். அவர் அடிக்கடி தனது பைஜாமாவை மேலே தூக்கி விட்டுக்கொள்வார். இதனால் அவரது கால்கள் தெரியும். மோசமான ஆளுமை இருந்தபோதிலும், அவர் மக்கள் மீதுஆதிக்கம் செலுத்தினார். சில நேரங்களில் அவர் கோபத்திலோ உற்சாகத்திலோ மிகவும் சத்தமாக பேசுவது, ஐம்பது அடி தொலைவில் இருந்து கூடக்கேட்கும்."
மலிவான சிகரெட் புகைப்பவர்
"நிஜாம் தனது மாளிகைக்கு ஒருவரை அழைக்கும் போதெல்லாம், அவருக்கு மிகக் குறைந்த உணவே பரிமாறப்படும். தேநீர் கொடுக்கும்போது கூட, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே உடன் கொண்டு வரப்பட்டன. ஒன்று அவருக்கு மற்றொன்று விருந்தினருக்கு. விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், பிஸ்கட்டுகளின் எண்ணிக்கை அதே விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. நிஜாமுக்கு அறிமுகமான அமெரிக்கர்கள், பிரிட்டிஷார்கள் அல்லது துருக்கியர்கள் அவரிடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டும்போதெல்லாம், அவர் சிகரெட் பாக்கெட்டிலிருந்து நான்கைந்து சிகரெட்டுகளை வெளியே எடுத்து தனது சிகரெட் பெட்டியில் வைப்பார். அவர் புகைக்கும் சிகரெட் ,விலை மலிவான சார்மினார் ரகமாக இருந்தது. அந்த நாட்களில் 10 சிகரெட்டுகளின் பெட்டி 12 பைசாவுக்கு கிடைக்கும்,"என்று திவான் ஜர்மானி தாஸ் 'மகாராஜா' என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
தாள் நிறுத்தியாக வைரத்தைப் பயன்படுத்த்தினார்
ஹைதராபாதின் நிஜாமிடம் உலகின் மிகப் பெரிய 282 காரட் ஜேக்கப் வைரம் இருந்தது.உலகின் கண்களிலிருந்து அதை பாதுகாக்க சில நேரங்களில் அதை ஒரு சோப்புப் பெட்டியில் அவர் வைத்திருப்பார். சில சமயங்களில் கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்க 'தாள் நிறுத்தி' போல அதை பயன்படுத்தினார்.
டோமினிக் லாபியர், லாரி காலின்ஸ் ஆகியோர் தங்கள் 'ஃப்ரீடம் அட் மிட்நைட்' என்ற புத்தகத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை எழுதியுள்ளனர்.
"ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாணயம் தரையில் விழுந்தவுடன், நிஜாம் அதைக் கண்டுபிடிக்க தரையில் மண்டியிட்டு அமர்ந்து தேடி, நாணயம் கையில் கிடைக்கும்வரை அதன் பின்னால் உருண்டபடி சென்றார்."
நிஜாமின் படுக்கையறையில் அழுக்கு
நிஜாம் 1946இல் சர் வால்டர் மாங்க்டனை வேலைக்கு அமர்த்தினார்.
சுதந்திரத்தை அடைய வேண்டும் என்ற நிஜாமின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று மாங்க்டன் நம்பினார்.
ஒன்று, ஹைதராபாத் சமஸ்தானம் நாலாபுறமும் நிலத்தால் சூழப்பட்டிருந்தது. கடலை அடைய வழி ஏதும் இல்லை. இரண்டாவது அவர் ஒரு இஸ்லாமியர். பிரஜைகளில் பெரும்பாலானோர் இந்துக்கள்.
'தி லைஃப் ஆஃப் விஸ்கவுன்ட் மாங்க்டன் ஆஃப் ப்ரெயின்சலி' என்ற வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் ஃபிரட்டெரிக் பர்கெய்ன்ஹெட் மாங்க்டன் இவ்வாறு எழுதினார்.
"நிஜாம் நடைமுறைக்கு ஒவ்வாத வாழ்க்கை வாழ்ந்தார். அவர் ஹைதராபாதிலிருந்து வெளியே எங்கும் செல்லவேயில்லை. தனது அமைச்சர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை. தன்னிடம் பல பெரிய மாளிகைகள் இருந்தாலும் கூட, மாங்க்டன் வேலை செய்ய ,இரண்டு பழைய நாற்காலிகள் மற்றும் மேசைகள் கிடந்த ஒரு அழுக்கான சிறிய அறையை கொடுத்தார். அதே அறையில் ஒரு சிறிய அலமாரி இருந்தது அதன் மேல் பழைய பெட்டிகள் மற்றும் தூசி படிந்த கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இது மட்டுமல்ல, அந்த அறையின் மேல்பரப்பில் சிலந்தி வலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. நிஜாமின் சொந்த படுக்கையறையும் அழுக்காக இருந்தது, பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் மற்றும் குப்பைகள் நிரப்பியிருந்தன. அந்த இடம் நிஜாமின் பிறந்தநாளுக்காக வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்பட்டது."
நிஜாமின் பிரகடனம்
ஆரம்பத்தில் பிரிட்டிஷார் நிஜாமின் மனதில் ஒரு தவறான புரிதலை உருவாக்கினார்கள். தாங்கள் வெளியேறிய பிறகு, அவர் சுதந்திரத்தை அறிவிக்க முடியும் என்று சொன்னார்கள்.
ஆனால் இரண்டாம் உலக போரில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவைப் பெற 1942இல் பிரிட்டிஷ் எம்.பி.ஸ்டாம்ஃபோர்ட் க்ரிப்ஸ் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, வைஸ்ராய் லின்லித்கோவின் நெருக்குதல் காரணமாக அவர் தனது மனதை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியாவின் அரசர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே நிஜாமின் சுதந்திரத்திற்கான எந்தவொரு கோரிக்கையையும் தீர்த்து வைக்க முடியும் என்று கிரிப்ஸ் தெளிவுபடுத்தினார்.
1914 முதல் மத்திய கிழக்கில் பிரிட்டனின் சண்டையில் அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்து வந்ததால், இந்த விளக்கம் நிஜாமுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இருந்தபோதிலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஹைதராபாத்தை தொடரும் தனது நோக்கத்தை தெளிவுபடுத்தி 1947 ஜூன் 3 ஆம் தேதி நிஜாம் ஒரு ஆணையை வெளியிட்டார்.
இதுமட்டுமல்ல, அவர் ஜூன் 12 அன்று வைஸ்ராய்க்கு ஒரு தந்தி அனுப்பி, எந்த சூழ்நிலையிலும் ஹைதராபாத் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக மாறாது என்று ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டார்.
ஜூலை 11 ஆம் தேதி, அவர் டெல்லிக்கு ஒரு பிரதிநிதிக்குழுவை அனுப்பினார். அதில் அவரது பிரதமர் மிர் லைக் அலி, சத்தாரியின் நவாப் முகமது அகமது சயீத் கான், உள்துறை அமைச்சர் அலி யாவர் ஜங், சர் வால்டர் மாங்க்டன் மற்றும் ஹைதராபாதின் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதியும் இருந்தனர்.
ஜான் சுப்ரஃஜிகி தனது 'தி லாஸ்ட் நிஜாம்' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "அவர்கள் நிஜாமின் ஒப்புதலுடன் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று முன்மொழிந்தனர்.
அதன் கீழ் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பை இந்திய அரசிடன் அளிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. பிரதிநிதிக்குழு மவுன்ட்பேட்டன் பிரபு, சர் கொன்ராட் கோர்ஃபீல்ட் மற்றும் விபி மேனனைச் சந்தித்தது. ஆனால் ஹைதராபாதை இந்தியாவுடன் இணைக்க இந்தியா ஒரு நிபந்தனை விதித்தபோது, இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை நின்று விட்டது.
காசிம் ரஸ்வி திட்டம்
சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, நிஜாம் இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு வாய்வழி ஒப்புதல் அளித்தார். அடுத்த நாள் அவர் கையெழுத்திடுவார் என்று கோடிட்டுக்காட்டினார்.
ஆனால் அக்டோபர் 28ஆம் தேதி, நிஜாமின் நெருங்கிய உதவியாளர் காசிம் ரஸ்வியின் ஆதரவாளர்கள், மாங்க்டன் , நவாப் சத்ரி மற்றும் சர் சுல்தான் அகமது ஆகியோரின் வீடுகளைச் சூழ்ந்து, நிஜாம் ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால் அவர்கள் வீடுகளை எரிக்கப்போவதாக அச்சுறுத்தினர்.
பின்னர் நிஜாமின் பிரதமர் மீர் லைக் அலி தனது 'தி ட்ராஜடி ஆஃப் ஹைதராபாத்' என்ற புத்தகத்தில் எழுதினார், "இப்போது தான் நினைப்பது நடக்காது என்பதை நிஜாம் உணர்ந்தார். பிரபல தலைவர்களுடன் ஆலோசனை கலந்தாக வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார்."
ஹைதராபாதின் மிகப்பெரிய பிரச்னை அதனிடம் போதுமான ஆயுதங்கள் இல்லாதது.
வசந்த் குமார் பாவா தனது 'தி லாஸ்ட் நிஜாம்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார், "ஒப்பந்தம் தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தையில், மாங்க்டன் , ஹைதராபாத்தின் ராணுவ தளபதி ஜெனரல் எல். எட்ரூஸிடம், இந்தியா ஹைதராபாதை தாக்கினால், எத்தனை நாட்களுக்கு அவருடைய ராணுவம் அதை எதிர்த்துப் போராட முடியும் என்று கேட்டார்.
நான்கு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கமுடியாது என்று அவர் பதிலளித்தார்.
நிஜாம் குறுக்கிட்டு, "நான்கு நாட்கள் அல்ல, இரண்டு நாட்களுக்கு மேல் முடியாது," என்றார்.
பாகிஸ்தானிலிருந்து கோவா வழியாக வாங்க நினைத்த ஆயுதங்கள்
1948 ஆம் ஆண்டில் நிஜாம், சிட்னி காட்டன் என்ற ஆஸ்திரேலிய விமானியை நியமித்தார்.
ஹைதராபாதிற்கு இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மோட்டர் வெடிகுண்டுகள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகளை வழங்க முடியும் என்று காட்டன் அவருக்கு உறுதியளித்தார்.
ஐந்து பழைய லான்காஸ்டர் குண்டுவீச்சு விமானங்களை வாங்கி ஒவ்வொரு விமானத்திலும் 5,000 பவுண்ட்கள் செலவழித்து அவற்றை பறக்கக்கூடிய, போருக்காக அல்லாத விமானங்களாக மாற்றினார்.
1947ஆம் ஆண்டிலேயே, நிலத்தால் சூழப்பட்ட ஹைதராபாதிற்கு ஒரு கடல் துறைமுகத்தைப் பெறும்விதமாக, போர்ச்சுகலிடமிருந்து கோவாவை வாங்க நிஜாம் 1947ஆம் ஆண்டில் திட்டமிட்டார்.
இந்த நிகழ்வை ஜான் சுப்ரஃஜிகி கீழ்கண்டவாறு எழுதுகிறார்,
"இரவில் கராச்சியிலிருந்து புறப்பட்டு, கோவாவின் வான்வெளிக்குள் நுழைந்து பின்னர் இந்திய பிரதேசத்தைக் கடந்து தனது விமானங்களை பிதார், வாரங்கல் அல்லது ஆடிலாபாதில் தரையிறக்க காட்டன் திட்டமிட்டார். விமானங்கள் இருட்டில் தரையிறங்கும் வகையில் அவை வரும் சத்தம் கேட்டவுடன், இந்த விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள மக்கள், மண்ணெண்ணெய் தீபந்தங்களை ஓடுபாதையில் ஏற்றுவார்கள் என்று திட்டம் தீட்டப்பட்டது.. இந்தியா இதை அறிந்திருந்தது. ஆனால் உயரமாக பறந்து லான்காஸ்டர் விமானங்களுக்கு சவால் விடும் விமானங்கள் அவர்களிடம் அப்போது இருக்கவில்லை."
மவுன்ட்பேட்டன் நிஜாமை சந்திக்க தனது பிரதிநிதியை அனுப்பினார்
1948 மார்ச் மாதம், 'ஆபரேஷன் போலோ' என்று பெயரிடப்பட்ட தாக்குதலை இந்தியா ஹைதராபாத் மீது தொடுக்க உள்ளதாக மவுண்ட்பேட்டன் அறிந்ததும், இந்தியாவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே தீர்வுக்கான பேச்சுவார்த்தையை அவர் முடுக்கிவிட்டார்.
இது எந்த சாதகமான முடிவையும் அளிக்காதபோது, மவுன்ட்பேட்டன் நிஜாமை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நிஜாம் அதை ஏற்க மறுத்து மவுன்ட்பேட்டனை ஹைதராபாத்துக்கு வருமாறு கூறினார்.
மவுன்ட்பேட்டன் தனது பிரதிநிதியாக, தன் ஊடக ஆலோசகர் (Press attaché) ஆலன் கேம்ப்பெல் ஜான்சனை அனுப்பினார். பின்னர், ஜான்சன் தனது அறிக்கையில், "நிஜாமின் பேசும் முறை காரணமாக இந்த உரையாடல் கடினமாகிவிட்டது.
அவர் ஒரு பழங்கால ஆட்சியாளர். அவர் பிடிவாதமாகவும் குறுகிய மனப்பான்மையுடனும் இருந்தார்." என்று ஜான் சுப்ரஃஜிகி எழுதினார்.
பின்னர் அவர் தொண்டர்களின் தலைவர் காசிம் ரஸ்வியை சந்தித்தார். அவரை 'அடிப்படைவாதி' என்று ஜான்சன் வர்ணிக்கிறார்.
கே. எம். முன்ஷி தனது 'தி எண்ட் ஆஃப் என் இரா' என்ற புத்தகத்தில், "ரஸ்வி தனது உரைகளில் அடிக்கடி இந்தியாவை திட்டுவார்.
காகிதத்தில் பேனாவால் ஒப்பந்தத்தை வரைவதைக்காட்டிலும், கையில் வாளுடன் இறப்பது நல்லது. நீங்கள் எங்களுடன் இருந்தால், வங்காள விரிகுடாவின் அலைகள் நிஜாமின் காலில் முத்தமிடும். நாங்கள் மஹ்மூத் கஜ்னி இனத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் முடிவு செய்தால், செங்கோட்டையில் அசஃப்ஜாஹி கொடியை (ஹைதராபாதின் ஆட்சியாளர்கள்) ஏற்றுவோம் என்று அவர் கூறுவார்."
பொது மக்களின் ஆதரவை அதிகரிக்க, நிஜாம் திடீரென மே மாதம் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை நீக்கினார்.
இந்த முடிவு இந்திய அரசு வட்டாரங்களில் கவலையைத் தூண்டியது. மவுன்ட்பேட்டன் இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இந்திய அரசு நிஜாமிடம் ஒரு இறுதி யோசனையை முன்வைத்தது.
பொது கருத்து வாக்கெடுப்புக்குப் பிறகு ஹைதராபாதை இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூறியது. நிஜாம் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக வதந்தி
வி.பி.மேனன் தனது 'தி ஸ்டோரி ஆஃப் தி இண்டிக்ரேஷன் ஆஃப் இண்டியன் ஸ்டேட்ஸ் என்ற புத்தகத்தில், "ஹைதராபாத்தில் நிஜாம் ஆதரவாளர்கள் இந்துக்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். மக்கள்தொகையின் ஏற்றத்தாழ்வை நீக்கி பெரும்பான்மை பெறுவதற்காக, பிரிவினைக்குப் பிறகு தங்கள் இடத்திலிருந்து வெளியேறும் முஸ்லிம் அகதிகளைத் இங்கு தங்கவைக்கும் பிரசாரத்தைத் தொடங்கினார்கள்.
நிஜாமுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுந்து வருவார்கள் என்றும், இந்தியா ஹைதராபாத்தை தாக்கினால், பாகிஸ்தான் அதற்கு எதிராக போர் தொடுக்கும் என்றும் வதந்திகள் பரவத் தொடங்கின.
அதன் பிறகு நிகழ்வுகள் வேகமாக மாறின. ஆகஸ்ட் மாத இறுதியில், இந்திய ராணுவம் ஹைதராபாதை ஏறக்குறைய சுற்றி வளைத்து நகரத்திற்குள் நுழைவதற்கான உத்தரவுக்காக காத்திருந்தது.
ஆகஸ்ட் 21 அன்று ஹைதராபாதின் வெளியுறவு பிரதிநிதி ஜாஹீர் அகமது, ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டு, பாதுகாப்பு கவுன்சில் இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார். இந்த விஷயம் செப்டம்பர் 16 ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது.
திணறிய நிஜாம் ராணுவம்
லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர சிங் தலைமையில் இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பலவாரங்களாக சந்தேகம் நிலவினாலும், ஹைதராபாதின் 25,000 வீரர்களின் ராணுவத்தால் இந்த தாக்குதலுக்குத் தயாராக முடியவில்லை. அவர்களது வரைபடங்கள் காலாவதியாகி விட்டன. காட்டன் கொண்டு வந்த ஆயுதங்கள் வீரர்களை சென்றடைய முடியவில்லை.
"ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இந்திய பீரங்கிகளை, கற்கள் மற்றும் ஈட்டிகளால் தாக்கினர். இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கோரி கராச்சியில் போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கினர். ஆனால் ஜின்னா இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே, பாகிஸ்தானின் தரப்பில் இருந்து இத்தகைய குறுக்கீட்டின் சாத்தியகூறு மிகவும் குறைந்துவிட்டது,"என்று ஜான் சுப்ரஃஜிகி எழுதுகிறார்.
லண்டனின் டைம் செய்தித்தாளில், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்ததை விமர்சித்து ஒரு தலையங்கம் வெளியிடப்பட்டது.
1948 செப்டம்பர் 17 அன்று, நிஜாமின் பிரதமர் மீர் லைக் அலி ஒரு வானொலி செய்தியில் " தன்னை விட பெரிய ராணுவத்துடன் போரிட்டு ரத்தம் சிந்துவதில் எந்த நியாயமும் இல்லை என்பதை இன்று காலை அமைச்சரவை உணர்ந்தது. ஹைதராபாதின் ஒரு கோடியே அறுபது லட்சம் மக்கள் மாறியுள்ள நிலைமையை மிகவும் தைரியமாக ஏற்றுக்கொள்கிறார்கள்,"என்று அறிவித்தார்.
சிட்னி காட்டனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஒமர் காலித் தனது ' மெமொயர்ஸ் ஆஃப் சிட்னி காட்டன்' என்ற புத்தகத்தில் , "அந்த நேரத்தில் நிஜாம் எகிப்துக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார், அங்கு அவர் பேரரசர் ஃபாரூக்கின் அரண்மனையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதிலுக்கு நிஜாம், ஹைதராபாதில் இருந்து கொண்டு செல்லப்படும் 100 மில்லியன் பவுண்டுகளின் 25 சதவிகிதத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். நிஜாம் தனது இறுதி தொழுகையை முடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது அரண்மனை இந்திய வீரர்களால் கைப்பற்றப்பட்டது. அவரால் விமான நிலையத்தை அடைய முடியவில்லை, அங்கு நூறு ரூபாய் நோட்டுகளின் மூட்டைகள் நிறைந்த காட்டனின் ஒரு விமானம் பறக்கத் தயாராக நின்று கொண்டிருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாதை சேர்ந்த சிலர் இந்தக் கதையை நம்பவில்லை. ஆனால் வேறு சில நேரில் கண்ட சாட்சிகள் பணம் நிறைந்த பெட்டிகளை தங்கள் கண்களால் பார்த்ததாக கூறுகிறார்கள்.
இந்தியாவுடன் இணைவதற்கு நிஜாம் ஒப்புதல்
ஹைதராபாத் வீரர்கள் சரணடைந்த பிறகு, நிஜாமின் நெருங்கிய உதவியாளர்கள் ரஸ்வி மற்றும் லைக் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
லைக் அகமது பின்னர் புர்கா அணிந்து காவலில் இருந்து தப்பித்து பம்பாயில் இருந்து கராச்சிக்கு விமானத்தில் தப்பிச்சென்றார்.
ஆனால் நிஜாம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நிஜாம் உஸ்மான் அலிகான் தனது அரண்மனையில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
நிஜாம், "இனிமேல் இந்திய அரசியலமைப்பே, இனி ஹைதராபாதின் அரசியலமைப்பாக இருக்கும்" என்று ஒரு ஆணையை வெளியிட்டார்.
இப்படியாக ஹைதராபாத் 562ஆவது சமஸ்தானமாக இந்தியாவுடன் இணைந்தது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி நிஜாம் இந்திய அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி இந்திய அரசு அவருக்கு ஆண்டுக்கு 42 லட்சத்து 85 ஆயிரத்து 714 ரூபாய் சொந்தசெலவுத்தொகை (Privy purse) வழங்குவதாக அறிவித்தது.
1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதிவரை ஹைராபாதின் ராஜபிரமுகராக நிஜாம் இருந்தார். இதற்குப் பிறகு, மாநிலங்கள் மறுசீரமைப்பு மசோதாவின் கீழ் அவரது சமஸ்தானம் , மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதிதாக உருவான ஆந்திர பிரதேசம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட. 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி நிஜாம் இயற்கை எய்தினார்.
பிற செய்திகள்:
- இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? சர்வதேச அரங்கில் இனி என்ன நடக்கும்?
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்