You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா 1962 போர்: சீன ஊடுருவல் அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி
1962 இந்திய-சீன யுத்தத்தின்போது, பனி மூடியிருந்த நவம்பர் 18ம் தேதிவாக்கில் அருணாச்சல பிரதேசத்தில் தவாங்கிற்கு அருகில் உள்ள எல்லைப்பகுதி 'லா' எதிர்ப்பின்றி சீனாவின் வசப்பட்டது என்ற செய்தி 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகையின் தலைப்புகளில் இடம்பெற்றது.
ராணுவத்தின் நான்காவது பிரிவுக்கு அசாமின் குவாஹாத்திக்கு செல்ல உத்தரவிடப்பட்டதாகவும், படைகள் மேற்கு நோக்கி நகர்வதாகவும் வதந்திகள் பரவின. அதுமட்டுமல்லாது, தேஜ்பூரில் உள்ளவர்கள் இடங்களை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுத்தப்பட்டதாகவும், நூன்மதி எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை தகர்க்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் வெளியான செய்திகள் மக்களை அச்சுறுத்தின.
பயத்தில் அங்கிருந்து தப்பியோடிய தேஜ்பூர் மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை, சீர்குலைந்திருந்த அரசு நிர்வாகத்தை சரிசெய்யுமாறு ராணா கே.டி.என். சிங்கை அரசு கேட்டுக்கொண்டது.
தேஜ்பூரின் பொதுமக்கள் படகில் பயணித்து மேற்கு கரைக்கு செல்லத் தொடங்கினார்கள். பிரம்மபுத்திரா ஆற்றை கடந்து, தெற்கு அசாம் நோக்கி செல்வதற்காக, சூட்கேஸ்கள் மற்றும் சிறிய டிரங்க்குகளில் முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு போமாராகுடி படகுத்துறையை நோக்கி மக்கள் செல்லத்தொடங்கினார்கள்.
அடுத்த நாள் காலையில் படகு பயணத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படகுத்துறையில் வரிசையில் காத்திருந்த மக்கள் பனி விழும் குளிர்கால இரவு வேளையின் நடுக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளியில் காத்திருந்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட கால்நடைகள்
பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் வசிக்கும் பெரும்பாலான தேயிலை தோட்டங்களின் ஆங்கிலேய உரிமையாளர்கள், தங்களுடைய கால்நடைகளை விலங்குகளையும், தங்களின் கீழ்நிலை பணியாளர்கள் மற்றும் எழுத்தர்களுக்கு கொடுத்தனர், சிலர் அவற்றை ஓட்டிவிட்டார்கள். எஞ்சியவற்றை சுட்டுக் கொன்றார்கள்.
எப்படியேனும் கல்கத்தா சென்றடைவது ஒன்றே அனைவரின் ஒரே குறிக்கோளாக இருந்தது. படகுகள், கார்கள், பேருந்துகள், மிதிவண்டி மற்றும் எருதுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்கள் இடம்பெயர்ந்தனர். வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டாலும், வாகனங்கள் எதுவும் இல்லாமல் மக்கள் சாரிசாரியாக நடைபயணத்தையும் மேற்கொண்டனர்.
தெற்கு கரையோரப் பகுதியிலிருந்து கடைசி படகு மாலை ஆறு மணியளவில் புறப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் ராணா அறிவித்தார்; இது அங்கிருப்பவர்களுக்கு ஆற்றை கடக்க கிடைக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
தேஜ்பூரே பாழடைந்த நகரமாக மாறிவிட்டது. ஸ்டேட் பாங்க், தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளுக்கு தீவைத்தது. பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்தன. இந்திய நாணயங்கள் அருகிலுள்ள குளத்தில் கொட்டப்பட்டன.
மன நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்
மனநல மருத்துவமனையின் நிர்வாகம் அங்கு சிகிச்சை பெற்றுவந்த மனநலன் பாதிக்கப்பட்ட 20-30 பேரை வெளியேற்றியது. அங்கிருந்து வெளியேறிய அவர்கள் நகரத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்தனர்.
அரசு ஆவணங்கள் எவையும் சீனாவின் கைவசம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தீயிலிடப்பட்டன.
வானொலியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அசாம் மக்களுக்கு இரங்கலை தெரிவித்தார். தற்போதுகூட வடகிழக்கில் வசிக்கும் மக்கள், நேருவின் உரையைப் பற்றிக் குறிப்பிட்டு, இந்திய அரசு தங்களை அப்போதே வழியனுப்பி வைத்துவிட்டதாக கூறுவது வழக்கம்.
நவம்பர் 19ஆம் தேதி, தேஜ்பூரில் ஒருவர் கூட எஞ்சியிருக்கவில்லை... அனைத்தும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாக தோன்றியது! ஆனால் திடீர் திருப்பமாக, அதை அதிர்ஷ்டவசம் என்றே கூறலாம். சீன ராணுவம் தேஜ்பூருக்கு 50 கிலோமீட்டர் முன்னரே நிறுத்தப்பட்டது.
போர்நிறுத்தம்
நவம்பர் 19ஆம் தேதி நள்ளிரவில் சீன வானொலி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உடனடியாக போரை தானாகவே நிறுத்துவதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்தது, இந்த போர்நிறுத்தத்தை இந்திய ராணுவமும் நிபந்தனைகளற்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சீன வானொலியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆல் இண்டிய ரேடியோவில் நவம்பர் 20ஆம் தேதியன்று காலை வெளியான செய்தியறிக்கையில், "இந்திய வீரர்கள் எல்லைப்பகுதியில் வீரத்துடன் போராடுகின்றனர்" என்ற செய்தி ஒலிபரப்பானது.
அதற்கு காரணம் என்ன தெரியுமா? இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பிரதமரை எழுப்பி, சீனாவின் போர்நிறுத்த அறிவிப்பைப் பற்றி அவரிடம் சொல்வது அவசியம் என்று யாரும் கருதாததுதான்!
போர்க்களத்தில் உண்மையாக நடைபெறும் செய்திகளை தெரிந்துக் கொள்ள இந்திய ராணுவத்தின் சிப்பாய் முதல் ஜெனரல்வரை, பெய்ஜிங் வானொலியை பயன்படுத்தியது நகைமுரண்!
நவம்பர் 21ஆம் தேதியன்று, தேஜ்பூரில் இயல்புவாழ்க்கை படிப்படியாக திரும்பியது. மக்களை ஆசுவாசப்படுத்தி, நம்பிக்கையூட்டுவதற்காக உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு சென்றார். மாவட்ட நிர்வாகத்தினரும் தேஜ்பூருக்கு திரும்பிச்சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்திரா காந்தி அங்கு சென்று பார்வையிட்டார்.
(2017 அக்டோபர் 23ஆம் தேதி பிபிசி தமிழில் வெளியான கட்டுரையின் மறுபகிர்வு இது)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :