You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா?
இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது.
இந்த யுத்தம் பற்றிய வரலாறு ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டது, எனவே அதைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை.
இந்தப் போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு குறிப்பிடுகிறார், "நடந்தவை அனைத்தும் மிக மோசமானவையாக இருந்தன, அவை உண்மையில் நடக்காமல் இருந்திருந்தால், நம்பவே முடிந்திருக்காது".
ஆனால் நடைபெற்ற தவறுகள், அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசை கடுமையாக சாடும் அளவில் இருந்தது. சீனாவை சுலபமாக நம்பியதற்கும், உண்மைகளை புறக்கணித்ததற்காவும் அவர் அரசைக் கண்டித்தார்.
எல்லை மோதல்கள்
தங்கள் தவறை ஒப்புக்கொண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார்: "நாங்கள் நவீன உலகின் உண்மையில் இருந்து விலகி இருந்தோம், நாங்களே உருவாக்கிய ஒரு செயற்கையான சூழலில் இருந்தோம்."
சீன எல்லையில், எல்லை மோதல்கள், ரோந்துக் குழுக்களின் நிலையில் சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் யார் பெரியவர் என்ற பலப்பரிட்சை என்பதைவிட பெரிய அளவில் எதுவும் இல்லை என்று சொன்னதை நம்பியதால் பெரிய அளவிலான தவறு நேரிட்டதை நேரு ஏற்றுக்கொண்டார்.
துணிச்சலற்ற அதிகாரிகள்
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ந்து சிறிய அளவிலான தொடர் மோதல்கள் இருந்தாலும், 1959 நவம்பர் தொடக்கத்தில் லடாக்கில் நிகழ்ந்த மோதல்களை அடுத்து, பிரச்சனைகள் பெரிதாகின, கருத்து வேறுபாடுகளும் வலுத்தன.
அதன்பிறகு பல தவறுகள் நடந்தன. அதற்கு பொறுப்பேற்க வேண்டியது அப்போதைய பிரதமரே.
அவர் மட்டுமல்ல, அவரது ஆலோசகர்கள், அதிகாரிகள், ராணுவம் என அனைவரும் தவறுகளுக்கு பொறுப்பாவார்கள். ஏனெனில் நேரு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் அவர்கள் யாருக்கும் இல்லை.
"நேரு மற்ற அனைவரையும்விட விடயங்களை நன்றாக அறிந்தவர்," என்று தவறுகளுக்கு அவர்கள் சொன்ன விளக்கம் மிகவும் பழையது.
சீனாவின் ஒருதலைபட்ச போர்நிறுத்தத்திற்குப் பின்னர் ராணுவத் தளபதி ஜெனரல் ஜே.என். சௌத்ரி என்ன கூறினார் தெரியுமா? "நாங்கள் சீனவுடன் சதுரங்கம் விளையாடுகிறோம் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் ரஷ்யா சாமர்த்தியமாக காய் நகர்த்திவிட்டது."
பொறுப்பு யாருக்கு?
யுத்தத்திற்கு பொறுப்பானவர்கள் என்று பட்டியலிட்டால் அது மிக நீண்டதாக இருக்கும். ஆனால் அந்த பட்டியலில் முதல் இடம்பிடிப்பவர் 1957ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியில் இருந்த கிருஷ்ண மேனன்.
அடுத்த பெயர் லெஃப்டிணெண்ட் ஜென்ரல் பி.எம் கெளல். இவர், நேருவுக்கும், கிருஷ்ண மேனனுக்கும் நெருக்கமானவர். லெஃப்டிணெண்ட் ஜென்ரல் பி.எம் கெளல், வடகிழக்கு பிராந்தியத்திற்கான காமாண்டராக இருந்தார். அந்த காலத்தில் வடகிழக்கு ஃப்ரண்டியர் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி, தற்போது அருணாச்சல் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.
ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரியான பி.எம். கெளல், அதிகாரத்தை விரும்புபவர். போரில் ஈடுபட உற்சாகம் கொண்ட அவரின் ஆர்வம் சூழ்நிலையால் பேராக மாறியது. ஆனால் அவருக்கு போர் அனுபவம் கிடையாது.
இத்தகைய தவறான நியமனத்திற்கு காரணம் கிருஷ்ண மேனன். பிரதமர் அவர் மேல் வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கை காரணமாக, தான் செய்ய விரும்பியதை செய்யும் சுதந்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
அவமதித்து ஆனந்தம் அடைந்த கிருஷ்ண மேனன்
உயரதிகாரியாக தனது அதிகாரத்தையும், அறிவாற்றலையும் பிறருக்கு காட்டும்விதமாக அவர் ராணுவ உயரதிகாரிகளின் கீழ் பணிபுரிபவர்களின் முன்னிலையே அவமதித்து ஆனந்தமடைவார். ராணுவ நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் நண்பர்களின் கருத்துகளின்படி நடந்துக்கொள்வார் மேனன்.
இந்திய ராணுவத்தின் உயர் பதவி ஒன்றிற்கு தேர்வுக்குழுவினால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை கிருஷ்ண மேனன் நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் கே.எஸ்.திம்மையா பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
பிறகு பிரதமர் நேருவின் அறிவுறுத்தலினால் திம்மையா ராஜினாமா கடிதத்தைத் திரும்பப்பெற்றார்.
ஆனால் அதன்பிறகு ராணுவம் கிருஷ்ண மேனனின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடக்கத் தொடங்கியது. கெளலை போர்த் தளபதியாக நியமித்த மேனன், நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டார்.
மோதல் பற்றிய அச்சம்
இமயமலையின் உச்சியில் இருந்தபோது கெளலின் உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில், பொறுப்பை வேறு யாருக்கும் மாற்றியளிக்காத கிருஷ்ண மேனன், டெல்லியின் மோதிலால் நேரு மார்க்கில் தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டே கெளல் போரை வழிநடத்தலாம் என்று உத்தரவிட்டார்.
ராணுவத் தளபதி ஜெனரல் பி.என்.தாபர் இதை முற்றிலும் எதிர்த்தாலும், மேன்னுடன் மோதுவதற்கு பயந்தார். பல சந்தர்ப்பங்களில் கெளல் தவறாக செயல்படுவதை தாபர் அறிந்திருந்தாலும், அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்கினார்.
நவம்பர் 19ம் தேதி அமெரிக்க அதிபர் கென்னடிக்கு நேரு கடிதம் எழுதுவதற்கு முன்பே, நாட்டு மக்களின் வெறுப்புக்கு இலக்காகிவிட்டார்கள் மேனனும் கெளலும்.
இதன் விளைவும் வெளிப்படையாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், நாடாளுமன்றமும் சீன ஆக்கிரமிப்பாளர்களை விரட்டவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, கிருஷ்ண மேனன் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
நேருவிற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது, நவம்பர் ஏழாம் தேதியன்று மேனன் பதவியில் இருந்து விலகினார், அதேபோல் குடியரசுத் தலைவர் ராதகிருஷ்ணனின் அறிவுறுத்தலின்படி கெளல் ராஜினாமா செய்தார்.
நவம்பர் 19 ம் தேதி டெல்லி வந்த அமெரிக்க செனட்டர்களின் பிரதிநிதிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தபோது அவர்களில் ஒருவர் குடியரசுத்தலைவரிடம் கேட்டார், 'ஜெனரல் கெளல் சிறைப்பிடிக்கப்பட்டாரா? அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன் துரதிருஷ்டவசமாக, இந்த செய்தி உண்மையில்லை என்று சொன்னார்.
நாட்டின் பாதுகாப்புக்கான முடிவுகள் எடுப்பது எந்த அளவு சீர்குலைந்து போயிருந்தது என்பதற்கான உதாரணம் இது.
அமைச்சர் மேனன் மற்றும் கெளலைத்தவிர, வெளியுறவுத்துறை செயலார் எம்.ஜே. தேசாய், உளவுத்துறையின் பி.என். மாலிக், பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலர் எஸ்.சி. சரீன் ஆகிய மூவரும் பாதுகாப்பு கொள்கை தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள்.
உளவுத்துறை தலைவரின் தோல்வி
இவர்கள் அனைவரும் மேனனுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்பு கொள்கைகளை வகுப்பதில் உளவுத்துறை தலைவருக்கு எந்த பங்கு இல்லை என்றபோதிலும், மாலிக் அதில் அதிக அதிகாரம் செலுத்தி நிலைமையை சீர்குலைத்தார்.
தனது வேலையில் மட்டும் மாலிக் ஒழுங்காக கவனம் செலுத்தியிருந்தால், சீனா என்ன செய்கிறது என்ற தகவல்களை உளவுத்துறை சரியாக கொடுத்திருக்கமுடியும். இந்தியா அவமானகரமான முறையில் தோல்வியடைந்திருக்காது.
ஆனால் சீனா இந்தியா மீது போர் தொடுக்காது என்று இந்தியா முழுமையாக நம்பியது. ஆனால் மாவோவும், சீனாவின் உயர்நிலை ராணுவ மற்றும் அரசியல் ஆலோசகர்களும், இந்தியாவை எதிர்த்துப் போரிடத் திட்டமிட்டு அதனை நிறைவேற்றினார்கள்.
சீன-இந்தியா மோதலைவிட, சீன-சோவியத் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், சீனா இந்தியாவுடன் போரில் இறங்காது என்று நேரு நம்பினார்.
கோழைத்தனமா அல்லது நம்பிக்கைதுரோகமா?
ஆனால் கியூபா ஏவுகணை நெருக்கடி பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி, நேருவுக்கு சாமர்த்தியமாக பாடம் கற்றுக்கொடுத்தார் மாவோ. இது நிகிடோ குருசேவுக்கும் விடுக்கப்பட்ட செய்தி என்பதால்தான் சோவியத் தலைவர் குருசேவ், இந்திய-சீன போரில் கட்டுப்பாட்டுடன் அடக்கிவாசித்தார்.
இந்தியாவிற்கு இது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அக்டோபர் 25ஆம் தேதியன்று ரஷ்ய நாளிதழ் ப்ரவாதாவில் சீனா நமது சகோதரர், இந்தியா நமது நண்பர் என்று சொன்னதற்கு பிறகுதான் நிலைமையின் தீவிரம் இந்தியாவிற்கு புரிந்தது.
சீனாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும் என்றும் ரஷ்ய நாளிதழ் கூறியது. ஆனால், க்யூபா பிரச்சனை சரியானவுடன் தனது பழைய கொள்கைக்கே ரஷ்யா திரும்பிவிட்டது என்பது வேறு கதை.
ஆனால் இந்தியப் பகுதிகளை ஆக்ரமிக்கும் தனது எண்ணத்தை மாவோ நிறைவேற்றிக்கொண்டார். 1962 நவம்பர் 21ஆம் நாளன்று சீனா போர் நிறுத்தத்தை அறிவித்து எல்லைப் பகுதியிலிருந்து (Line of Actual Control) 20 கி.மீ தூரத்திற்குப் படைகளைத் திரும்பப் பெற்றது.
கரீபியன் பகுதியில் நிகிடோ குருசேவ் காட்டியது கோழைத்தனமா அல்லது இமாலயப் பகுதியில் அவர் செய்தது நம்பிக்கைதுரோகமா என்பதை யார் அறுதியிட்டுச் சொல்வது?
(பிபிசிக்காக இந்த கட்டுரையை சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய மூத்த பத்திரிகையாளர் மல்ஹோத்ரா 2016 ஜூன் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்