You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்: சீனாவை நம்பியுள்ள கிம் ஜோங் உன்
வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளத்துக்குப் பிறகு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.
ஏற்கெனவே வடகொரியா பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உணவுப் பற்றாக்குறையால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் கனமழையும் சேர்ந்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பாக "பதற்றமான" சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை நாடு நம்பியிருந்தது.
வீடுகள் அவற்றின் கூரைகள் வரை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்யோங்கில் உள்ள சேதமடைந்த பாலங்கள் மற்றும் ரயில் பாதைகளையும் அரசுத் தொலைக்காட்சி காட்டியது.
நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியிருப்பதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
பேரழிவிலிருந்து மீள்வது குறித்து விவாதிக்க ஆளும் தொழிலாளர் கட்சியின் ராணுவ ஆணையம் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தியதாக அரசின் அதிகாரப்பூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் கிம் ஜோங் உன் கலந்து கொள்ளவில்லை, ஆனால் மக்களுக்குத் தேவையான பொருள்களை ராணுவம் இந்தப் பகுதியில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறியனுப்பி இருந்தார் என்று கேசிஎன்ஏ கூறியது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை வடகொரியாவில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அணு ஆயுதச் சோதனைகளின் காரணமாக சர்வதேச அளவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தனது எல்லைகளை வடகொரியா மூடியுள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருள்களுக்கு சீனாவை மட்டுமே வடகொரியா நம்பியிருக்கிறது. தற்போது எல்லைகள் மூடியிருப்பதால் இந்தச் சரக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு வடகொரியா நாடு தழுவிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
பிற செய்திகள்:
- உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேடும் கமல்; 'இனி பகுதிநேரம்தான் சினிமா'
- உலகின் மிகப் பெரிய ராக்கெட்டை கட்டமைத்த ஈலோன் மஸ்க்
- கம்யூனிச கியூபாவில் தனியார் தொழில்களுக்கு முதல் முறையாக சட்டப்பூர்வ அனுமதி
- சிந்து சமவெளியில் பேசப்பட்டது தொல் திராவிட மொழி: ஆய்வுக் கட்டுரை தரும் தகவல்
- 'மாயன் நாள்காட்டி': உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்