You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் பெருவெள்ளம்: சாலையில் குப்பையாய் குவிந்து கிடக்கும் கார்கள் - 'பருவநிலை மாற்றம் காரணம்'
சீனாவின் க்ஹெனான் மாகாணம் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.
அந்த மாகாணத்தின் ஜெங்ஜோ நகரில் மூன்று வருடங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டி தீர்த்ததில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.
ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ரயில் பேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன.
ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது.
பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் ரயில் பெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.
சீனாவில் இது பொதுவாக மழைக்காலம். இருப்பினும் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதல் பிரச்னையால் நிலைமை மிக மோசமாகியுள்ளதாக சீனாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் வானிலை மிக தீவிரமாகலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். முக்கிய சாலைகள் கார்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளால் நிறைந்து வழிகின்றன.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெய்போ சமூக ஊடகத்தின் மூலம் மக்கள் இணைந்துள்ளனர்.
இதில் ஹெனான், 'ஸ்டே ஸ்ட்ராங் ஹெனான்' போன்ற ஹாஷ்டாகுகளுடன் உதவி தேவைப்படும் நபர்களை மீட்புக் குழுவினருடன் இணைத்து வருகின்றனர்.
பல வெய்போ சமூக வலைதளத்தில் தாங்கள் பாதிக்கப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்